
தனுஷ் இயக்கத்தில் புதுமுகம் பவிஷ் நாராயண்(தனுஷின் சகோதரி மகன்), அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தை தனுஷ் இயக்கியது மட்டும் இல்லாமல் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் வருகிற 21ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குநர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா, ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ராஜ்குமார் பெரியசாமி, “படத்தின் தலைப்பே ஒரு கவிதை மாதிரி இருக்கிறது. இந்த படத்துடைய முதல் நாள் படப்பிடிப்பில் தனுஷை சந்தித்தேன். 2023 டிசம்பர் 11 என்று நினைக்கிறேன். இப்போது 14 மாதம் ஆகிறது. அதற்குள் இந்த படத்தை முடித்துவிட்டு, அவர் இயக்கிய ராயன் படத்தை ரிலீஸ் செய்து, உடனே அடுத்த படம் ‘இட்லி கடை’ என அறிவித்து அதன் ஷூட்டிங்கிற்கு சென்று, நடுவில் இந்தி படத்தில் நடித்து, இதற்கு இடைவெளியில் மூன்று படத்தின் அறிவிப்பை வெளியிட்டு... இந்த நேரத்தில் எப்படி இவ்வளவு வேகமாக இருக்கிறார் எனத் தெரியவில்லை. அதைபார்க்க மலைப்பாக இருக்கிறது. இதில் வியாபார அழுத்தங்கள் புற அழுத்தங்கள் இருந்தாலும் அவர் மனதுக்கு பிடித்ததை செய்கிறார்.
தனுஷ் ஒரு மகா கலைஞன். அப்படி இருந்தால் தான் தொடர்ந்து இந்த மாதிரி கதாபாத்திரங்களில் தன்னை புதுப்பித்து கொண்டே இருக்க முடியும். அந்த பண்பு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா சொன்னது போல் சினிமாவில் நடிகர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இதில் நிறைய புது முகங்கள் இருக்கிறார்கள். அது நல்லது. தனுஷைடைய மூன்றாவது இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம் இப்படம். அதனால் இது வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.