திரைத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக சகலகலாவல்லவனாக திகழ்பவர் கமல்ஹாசன். 'ராஜா கைய வெச்சா... அது ராங்கா போனதில்ல' என்ற அவரது பாடலின் வரிகளுக்கு ஏற்றது போல் இயக்குநர், பாடகர், நடன அமைப்பாளர் என கிட்டத்தட்ட சினிமாவில் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றியவர். தமிழ் சினிமாவை இந்திய அளவில் தாண்டி உலக அளவிலும் எடுத்துச் சென்றார்.அதனால் உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.
பார்ட்டி; பிறந்தநாளை முன்னிட்டு நேற்றே பார்ட்டி வைத்துவிட்டார் கமல். அதில் ஆமீர் கான், சூர்யா, பார்த்திபன், லோகேஷ் கனகராஜ், ஜி.வி பிரகாஷ், ரவி கே சந்திரன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவமனைக்கு பரிசு; இதையடுத்து இன்று காலை அவர் தலைவராக இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக சென்னை எழும்பூரில் இருக்கும் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில், காற்றின் ஈரப்பதத்திலிருந்து நீர் தயாரித்து அளிக்கும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை பரிசாக அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருமாண்டி சிறப்பு திரையிடல்; பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் விருமாண்டி படம் திரையிடப்பட்டது. முதலில் இன்று மட்டும் திரையிடுவதாக இருந்தது. பின்பு படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அது இன்னும் 2 நாட்கள் அதிகரித்துள்ளது.
மியூசத்தில் சகலாகலவல்லவன் பைக்; சென்னை, வடபழனியில் அமைந்துள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் சகலாகலவல்லவன் படத்தில் கமல் பயன்படுத்திய பைக்கை இன்று முதல் காட்சிக்கு வைத்துள்ளனர்.
இந்தியன் 3; திரைப்படங்களை தாண்டி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கமல் நடத்தி வரும் நிலையில், கட்சி சார்பில் நடைபெற்ற பிறந்தநாள் விழா கூட்டத்தில், " இந்தியன் 2, இந்தியன் 3 வெளியாகும் பொழுது அது ஒரு அரசியல் மேடையாக மாறும். அதையெல்லாம் பார்க்க வேண்டும். அதில் செய்திகள் இருக்கின்றன" என்றார் கமல். இது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.