![vairamuthu about rvk vijay politics](http://image.nakkheeran.in/cdn/farfuture/Dot0idXj9W9E4cePEiNON2T9xDTy2uQfjwV1Uf5uZ2Q/1739171471/sites/default/files/inline-images/240_20.jpg)
தேனி மாவட்டத்தில் மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு, “எல்லாரும் எனக்கு நண்பர்கள் மாதிரி. ஒன்றும் சொல்ல முடியாது. ஒரு வேளை உண்மையைச் சொன்னால் பொய்யனாகி விடுவேன். நான் பொய்யனாகவும் விரும்பவில்லை. நட்பைக் கெடுக்கவும் விரும்பவில்லை” என்றார். பின்பு திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு, “இப்போது அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்றா இருக்கிறது? அல்லது ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்றா இருக்கிறது? அரசியலுக்குள்ளேயே ஆன்மீகம் இருக்கிறது, ஆன்மீகத்திற்குள்ளேயே அரசியலும் இருக்கிறது. இன்று தான் இதை உலகம் புரிந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் அரசியல் தளங்கள் விரும்புகின்றன என்றும் நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரை இந்து மதம் என்பது அது ஒரு வாழ்க்கை முறை. இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறை. அந்தந்த வாழ்க்கை முறைகளை அவரவர்கள் வாழ்ந்துகொள்வதற்கு உரிமை இருக்கிறது என்பதுதான் இந்தியாவின் இறையாண்மை. இந்தியாவின் இறையாண்மையின்படி வாழ்வதற்கு நமக்கு உரிமை தருவதுதான் அரசாங்கத்தின் கடமை, வாழ்வது நம் மக்களுடைய உரிமை. அந்த உரிமையைக் கடமையை யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். தவறாக வழிநடத்தவும் வேண்டாம் என்பதுதான் பொதுமனிதனாக, இந்தியச் சமூக பிரஜையாக என் எண்ணம்” என்றார்.