![sasikumar latest speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/YsN8KFpMD3dalzMqcTD-u7ba17I7yTOoohducPkHg1k/1739167001/sites/default/files/inline-images/244_23.jpg)
மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் சசிகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “பொதுவா கல்லூரிக்கு போனா நிறைய புத்திமதி சொல்லனும். நான் அப்படி பேசி பழக்கமில்லாததால் எங்கேயும் போவதில்லை. என்னை அழைச்சிட்டு வரல. இழுத்துட்டு வந்துருக்காங்க. நண்பனின் நண்பன் மூலமா வரவச்சாங்க. நண்பன் கேட்டா உயிரையே கொடுப்போம். அதனால நண்பன் கூப்பிட்டதால வந்துவிட்டேன். எல்லோரும் நல்லா படிங்க. என்னுடைய படங்களில் வருவது போல நட்பையும் விட்றாதீங்க. .
படங்களில் சிரிக்க வைப்பதை விட சிந்திக்கவும் வைக்க வேண்டும். அப்படிதான் அயோத்தி படம் பண்ணேன். அதை மறக்க முடியாது. மதங்கள் கடந்து சாதிகள் கடந்து தெரியாதவங்களுக்கும் உதவணும். அந்த மனிதநேயத்தை நாம் கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். நான் போர்டிங் ஸ்கூலில் படிக்கும் போது அது மதம், சாதியை பார்க்காமல் பழக கற்றுக்கொடுத்தது. எல்லோரும் சகோதரர் சகோதரிகளாக பழகினோம். இப்போது வரைக்கும் எனக்கு அவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்” என்றார்.
பின்பு மாணவ மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அடுத்த பட டைரக்ஷன் குறித்த கேள்விக்கு, “இந்த வருஷம் தொடங்கும். மதுரையில் தான் ஷூட்டிங்” என்றார். குற்றப்பரம்பரை படம் தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு, “அது ப்ரொடியூசர் கையில் தான் இருக்கிறது. நாங்க ரெடியாதான் இருக்கோம். அந்தப் படம் சம்பந்தமா பாரதிராஜாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை வந்தது. அப்புறம் அவங்க சரியாகிட்டாங்க. நான் பொதுவான ஆள் என்பதால் இரண்டு பேரும் என்னை எடுக்க சொன்னாங்க. அது வேறு ஒரு காரணத்தால் தடைபட்டு போனது” என்றார்.
பின்பு அவரிடம் சுப்புரமணியபுரம் படத்தில் இருந்து இப்போது வரை அதே ஹேர்ஸ்டைல் வைத்திருப்பதாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அடுத்து சுப்புரமணியபுரம் போல ஒரு படம் பண்ணவுள்ளேன். அதுக்காக இந்த ஹேர்ஸ்டைல்” என்றார். அனுராக் கஷ்யப்புடன் இணைந்து படம் பண்ணுவது தொடர்பான கேள்விக்கு, “குற்றப்பரம்பரையில் அவர் நடிக்க வேண்டியது. அவரிடம் பேசி ஓ.கே.யும் வாங்கியிருந்தேன். அவரும் உன் படத்துக்கு கதை கேட்கமாட்டேன், நடிப்பேன் என்றார். ஆனால் என்னுடைய அடுத்த படத்தில் கண்டிப்பாக நடிப்பார்” என்றார். காதாலா நட்பா என்ற கேள்விக்கு, “எப்போதுமே நட்புதான் காதலாக மாறும். காதல் நட்பாகாது” என்றார்.