உலகளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட பிரபல பாடகரான எட் ஷீரன், இந்தியாவில் சுற்றுப்பயணம்(இசைக்கச்சேரி) மேற்கொண்டுள்ளார். மொத்தம் ஆறு இடங்களில் இசைக் கச்சேரி நடத்த திட்டமிட்டிருக்கும் அவர், புனே, ஹைதராபாத்தில் மற்றும் சென்னையில் நடத்தி முடித்திருந்தார். இதையடுத்து பெங்களூரு, ஷில்லாங் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிட்டிருந்தார்.
அதன் படி நேற்று(09.02.2025) பெங்களூருவில் இரவு நிகழ்ச்சி நடந்து முடிந்தது. ஆனால் அதற்கு முன்பாக பெங்களூருவில் உள்ள சர்ச் தெருவில் திடீரென சாலையோரம் நின்று சர்ப்ரைஸாக பாட ஆரம்பித்தார். இவரைக் கண்டதும் அங்கு ரசிகர்கள் கூட்டம் கூடியது. அப்போது அவரது ட்ரேட்மார்க் பாடலான ‘ஷேப் ஆஃப் யூ’(Shape of you) பாடினார். ஆனால் அங்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நிகழ்ச்சியை பாதியிலே நிறுத்த சொல்லி மைக் கனெக்சனை துண்டித்தார். அவர் உரிய அனுமதி பெறவில்லை என கூறி நிறுத்தியதாக தெரிகிறது. போலீஸாரின் இந்த செயலால் எட் ஷீரன் அதிர்ச்சியடைந்தார். பின்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரிய அனுமதி பெற்றதாக ஸ்டோரி போட்டிருந்தார்.
இதையடுத்து காவல் துறை தரப்பில், எட் ஷீரன் தரப்பு சாலையோரம் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரியதாகவும் ஆனால் அதற்கு நாங்கள் அனுமதி தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே எட் ஷீரன் பாடிக்கொண்டிருக்கும் போது போலீஸார் மைக்கை நிறுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் அப்பகுதியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.