இயக்குநர் வெற்றிமாறன், இயக்குவது மட்டுமல்லாமல் 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரிக்கிறார். இதனிடையே 'பேட்டைக்காளி' என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த தொடர் ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கலையரசன் பேட்டை காளி படப்பிடிப்பு நடந்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், "'பேட்டைக்காளி' படம் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உண்மையான மாடுபிடி வீரர்கள் இருந்தார்கள். எங்க வீட்டு பக்கம் ஜல்லிக்கட்டு எல்லாம் கிடையாது. மாடு என்றால் பால் கறந்து டீ, காஃபி போட்டு குடிப்பது, அதுதான் எங்களுக்கு தெரியும். மாட்டை பார்த்து இவ்வளவு பயம் வருமா என்பது எனக்கு இந்த 'பேட்டைக்காளி' நடிக்கும் போதுதான் தெரிந்தது. ஏனென்றால், களத்தில் இருப்பவர்கள் உயிரை பணயம் வைத்து மாடுகளை பிடிக்கின்றனர். ஜல்லிகட்டிலாவது, ஒரு பக்கம் தான் மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். ஆனால் மஞ்சு விரட்டில் 360 டிகிரியில் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர்.
களத்தில் இறங்கி மாடுகளை பிடிக்கும் காட்சிகளில் ஏதோ மாடுபிடி வீரர்கள் உதவியுடன் நடித்து முடித்துவிட்டேன். ஆனால் மறுநாள் க்ளோசப் காட்சிகளை படமாக்க உண்மையான ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்தனர். அப்போது அந்த காளையை அழைத்து வந்தவரிடம், ‘அண்ணா இந்த மாடு ஒன்னும் பண்ணாதுலா, பயமா இருக்குன்னு’ சொன்னேன். அதற்கு அவர், ‘தம்பி ஒன்னும் பண்ணாது நேத்து ஜல்லிக்கட்டில் கூட சும்மா அமைதியாகத்தான் போனது’ன்னு சொன்னார். சரி மனதை தைரியப்படுத்துக்கொண்டு நின்னேன். ஆனால் கடைசியில் பார்த்தால், அந்த மாட்டை யார் அழைத்து வந்தாரோ அவரையே அந்த மாடு ஒரே குத்தா குத்தி தூக்கி போட்டுவிட்டது. அதன்பிறகு அவருக்கு காலில் 11 தையல் போட்டாங்க. இதை பற்றி மாட்டுக்காரவங்ககிட்ட கேட்டா, எங்க வீட்டு 5 வயது குழந்தைகூட இந்த மாட்டைப்பிடித்து கட்டும். இன்னைக்குத்தான் அது இப்படி பண்ணுது சரியாகிடும்னு கூலா சொல்றாங்க.
அதன்பிறகு வேறு ஒரு மாட்டை அழைத்து வந்தாங்க. அதுவும்கூட முதலில் சாந்தமாகத்தான் இருந்தது. ஆனால் அங்கிருந்த கூட்டத்தை பார்த்த மாடு வெடுக்குன்னு பாய ஆரம்பித்தது. நல்ல வேலை நரி அண்ணன் இல்லை என்றால் அன்னைக்கே நான் குத்து பட்டு செத்திருப்பேன். மாடு பாயும் போது, சரியான நேரத்தில் அதன் கொம்பை திருப்பி என்னை காப்பாற்றினார். அவரை இல்லையென்றால் இன்னைக்கும் நான் இங்கு நின்னு பேசிட்டு இருக்க மாட்டேன். ரொம்ப நன்றி அண்ணா" என்றார்.