தான் சந்தித்த வழக்கு சார்ந்த அனுபவங்களை துப்பறிவாளர் யாஸ்மின் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்
தன்னுடைய தோழி தனக்குத் திருமணமே வேண்டாம் என்று கூறி வருவதாகவும், அவளை யாரோ மிரட்டுவது போன்று தனக்குத் தோன்றுவதாகவும் ஒரு பெண் நம்மிடம் வந்து வழக்கு கொடுத்தார். தோழியை யாரோ அடித்தது போல் முகம் வீங்கியிருந்ததாகவும் கூறினார். அந்த வழக்கை நாங்கள் விசாரிக்கத் தொடங்கினோம். மருத்துவரான அந்தப் பெண் தன்னுடைய பணிக்கு மட்டுமே சென்று வருவதை அறிந்தோம். ஒரு நோயாளியின் உதவியாளர் போல் அவரிடம் நான் சென்றேன். அவரைச் சுற்றி ஏதோ ஒன்று நடப்பது தெரிந்தது.
அவரிடம் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவருடைய பிரச்சனை என்ன என்பது குறித்து விசாரித்தேன். அவர் என்னை சந்தித்தபோது கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். அவருக்கு திருமணத்தின் மீது மிகுந்த ஆசை இருந்தது. ஆனால் அவருக்கு வரும் வரன்களை எல்லாம் அவருடைய தாயும், தந்தையும் தட்டிக் கழித்து வந்திருக்கின்றனர். பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தால் அவரிடமிருந்து வரும் வருமானம் நின்றுவிடும் என்பதால் இதைச் செய்தனர். இதனால் அந்தப் பெண்ணை யாருடனும் பேசவிடாமல் தடுத்து வந்தனர். அந்தப் பெண்ணை எப்போதும் பின்தொடர்ந்து வந்தனர்.
இந்த விஷயங்களை அந்தப் பெண் என்னிடம் சொன்னபோது, அவருடைய தோழி தன்னிடம் வந்து வழக்கு கொடுத்த விவரங்கள் அனைத்தையும் கூறினேன். இதிலிருந்து அவர் எப்படி வெளியே வர வேண்டும், தன்னுடைய பெற்றோருக்கு அவர் எப்படி நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் அவரிடம் விளக்கினேன்.