மனநல ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், தனிப்பட்ட விருப்பதிற்காக மட்டும் வாழ்ந்த ஒரு மாமனாருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
ஒரு மாமனார், மாமியா மற்றும் அவரது பையன் மற்றும் மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டில் மருமகளின் சமையல் மாமனாருக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் இருந்துள்ளது. இதற்கு முன்பு அவர் தனது மனைவியின் சமையலை சாப்பிட்டு ருசியில் மயங்கியிருக்கிறார். அவரது மனைவி, தன் கணவன் சொல்லவிட்டாலும் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொடுத்து இருந்திருக்கிறார். கணவன் கட்டாயப்படுத்தாவிட்டாலும் அனைத்து வேலைகளையும் அவரே செய்துள்ளார். இது தனது மனைவியை மட்டுமே சார்ந்து வாழ்வதுபோல் அவருக்கு மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக சட்டை பட்டன் போடுவது, குளித்தால் டவல் கேட்பது என சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட அவருக்கு மனைவி வந்தால்தான் என்ற சூழலுக்கு அவரை தள்ளியுள்ளது.
காலப்போக்கில் மருமகள் வந்த பிறகு மருமகளின் சமையல் மற்றும் செயல்கள் அவருக்கு ஏற்றதுபோல் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அவரின் பையனும் மருமகளும் என்னைச் சந்தித்து என் அப்பாவால் வீட்டை விட்டு தனியாக வரும் சூழல் வந்துவிட்டது என்று அந்த பையன் சொன்னார். இவர்களிடம் பேசிய பிறகு அந்த பையனின் அப்பா, அம்மாவை அழைத்துப் பேசினேன். அந்த பையனின் அம்மாவிடம் பேசும்போது, அவருக்கே தெரியாமல் தொடர்ந்து அவரின் கணவருக்குப் பிடித்ததைத் தொடர்ந்து செய்துவந்துள்ளார். இதையடுத்து அந்த பையனின் அப்பாவிடம் பேசும்போது, என் மனைவி அம்மி கல்லில்தான் சமைப்பாள். ஆனால் என் மருமகள் சரியாக சமைக்கக்கூடத் தெரிவில்லை. என் மனைவி அப்படி செய்து கொடுப்பாள் இப்படி நடந்துகொள்வாள் என்று பெருமையாகப் பேசினார். இதையெல்லாம் கேட்ட பிறகு அவர் முற்றிலும் தனது மனைவியையே சார்ந்து வாழ ஆரம்பித்துள்ளதை உணர்ந்தேன்.
அப்போது நான் அவரிடம், உங்களின் தேவைக்காக குடும்பம் தனியாகப் பிரிய வேண்டுமா? என்றேன். சற்று யோசித்த அவர் சார் இப்படியெல்லாம் இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று தான் செய்வதை நிரூபிக்க விவாதிக்க ஆரம்பித்தார். பின்பு நான், ஒரு பேச்சுக்காக இப்போது உங்களின் மனைவி இறந்துவிட்டாள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். அப்படியே அமைதியானார். பின்பு சில அறிவுரைகளைக் கூறி அனுப்பினேன். பின்பு ஒரு நாள் அவராகவே வந்து நீங்கள் சொன்னதை வைத்துப் பார்த்தால் நான் மிகவும் சுயநலமாக இருப்பதுபோல் இருக்கிறது. இப்போது நான் என் மருமகளின் சாப்பாடு மற்றும் செயல்கள் பிடிக்காவிட்டாலும் சில விஷயங்களைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டால் குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது என்றார். ஆனால் மனைவியின் சமையல் மாதிரி இல்ல சார் என்று சிரித்துக்கொண்டு பேசிவிட்டுச் சென்றார்.