Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை - 5: மின்னஞ்சலைத் தொட்டால் மோசடி வலையில் சிக்குவீர்கள்!

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

digital cheating part 5

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலத்தில் சிறியதாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் ஒருவர். அவரது முகவரிக்கு டிஜிட்டல் இந்தியா கம்யூனிகேஷன் ஆன்லைன் மார்க்கெட்டிங் டெல்லி என்கிற மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தோடு ஒரு கூப்பன் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கூப்பனை சுரண்டி பாருங்கள் உங்களுக்கான பரிசு அதன் உள்ளே உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரும் ஆசையாக கூப்பனை சுரண்டியுள்ளார். 2,70,000 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றுள்ளீர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பெற நீங்கள் எங்களது கஸ்டமர் கேர் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என ஒரு மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரும் மகிழ்ச்சியுடன் அந்த நம்பருக்கு கால் செய்துள்ளார். தமிழ் மொழியில் பேசியவர் அந்த பணம் உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் உடனே மத்திய – மாநில அரசுக்கான ஜி.எஸ்.டி வரி ரூ.6,300 ரூபாயை உடனே செலுத்துங்கள் எனச் சொல்லியுள்ளார். 

 

புதுக்கோட்டைக்காரர் சாமர்த்தியமாக, நீங்க வரியை பிடிச்சிக்கிட்டு மீதி பணத்தை எனக்கு அனுப்புங்க என்றுள்ளார். அப்படியெல்லாம் செய்ய முடியாது பணம் செலுத்துனிங்கன்னா, நாங்க உங்க பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்துடுவோம் என்றுள்ளார். அந்த கடிதத்தில் டிஜிட்டல் இந்தியா லோகோ, ரிசர்வ் வங்கியின் லோகா, இந்தியாவின் சிங்கம் சின்னம் போன்றவை பயன்படுத்தியிருந்தனர். இதனால் கடிதம் உண்மைதான் என நம்பியவர், அவுங்க சொல்றதும் உண்மைதான் என நம்பினார். 2.7 லட்ச ரூபாயாச்சே என மனிதனின் ஆசை சும்மாயிருக்குமா. வீட்டில் வைத்திருந்த பணத்தை கொண்டு போய் கஸ்டமர் கேர் சொன்ன வங்கி கணக்கில் பணத்தை கட்டியவர், பணம் வந்துவிடும் எனக் காத்திருக்கத் தொடங்கினார். 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இன்டஸ்ட்ரி வைத்து நடத்தும் குட்டி தொழிலதிபர் ஒருவரது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. அந்த மின்னஞ்சலில் ரஷ்யாவில் வாழ்ந்த பெரும் தொழிலதிபர் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரரான அவர் ஒரு உயில் எழுதி வைத்துள்ளார். அதில் எனது சொத்துக்களை இந்தியாவில் உள்ள ஒருவருக்குத் தான் தரவேண்டும்; அவரை மின்னஞ்சல் முகவரி மூலமாக தேர்வு செய்யுங்கள்; அவர் நல்லவராக இருக்கவேண்டும்; மக்களுக்கு சேவை செய்பவராக இருக்க வேண்டும்; அதை உறுதி செய்துகொண்டு அவருக்கு என் மொத்த சொத்தையும் தந்து விடுங்கள் எனச் சொல்லியுள்ளார். அவர் கடந்த வாரம் இறந்துவிட்டார். அரசு நிர்வகிக்கும் கமிட்டிக்கு அவரது உயில் வந்துள்ளது. அதன்படி நாங்கள் இந்தியர்களின் மின்னஞ்சல் முகவரியை வாங்கி குலுக்கல் முறையில் தேடியபோது இந்த மின்னஞ்சல் முகவரி வந்துள்ளது. அவரின் 70 மில்லியன் சொத்துக்களை உங்களுக்கு வழங்க தயாராகவுள்ளோம்.

 

உங்களைப் பற்றிய தகவலை அளியுங்கள் எனச் சொல்லி ஒரு லிங்க் தரப்பட்டுள்ளது. இறந்தவரின் டெத் சர்டிபிகெட் அதோடு இணைக்கப்பட்டு இருந்தது. ஆஹா நாம லக்கி மேன் என நினைத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை அந்த மின்னஞ்சல் முகவரிக்கு பதிலாக அனுப்பியுள்ளார். அதில் எனக்கு நாய்கள் என்றால் ரொம்ப பிடிக்கும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானால் ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறேன் என குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்துள்ளார். சில தினங்கள் பொருத்து மீண்டும் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்கள். அதில், நீங்கள் குறிப்பிட்டு அனுப்பியிருந்த தகவல்களை எங்கள் கமிட்டி ஆய்வு செய்தது. உங்களிடமே அந்த தொகையை வழங்க முடிவு செய்துள்ளோம் என மின்னஞ்சல் அனுப்ப அதைப் பார்த்து சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

 

7 மில்லியன் பவுன்ட். நம்மவூர் மதிப்புக்கு 70 லட்சம் பவுன்ட். ஒரு பவுன்ட் நம்மவூர் மதிப்புக்கு 120 ரூபாய். மொத்தம் நம்மவூர் கணக்குக்கு எவ்ளோ வரும் என கால்குலேட்டர் எடுத்து கணக்கு போடத் தொடங்கினார். கால்குலேட்டர் தந்த கணக்கைப் பார்த்து, அவருக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. அடுத்து எப்போது மின்னஞ்சல் வரும் எனப் பார்த்தார். வரவில்லை. இவரே மின்னஞ்சல் அனுப்பினார். எங்கள் நாட்டு நிதித் துறையில் இந்தியாவுக்கு பணம் அனுப்புவதில் சிக்கல் உள்ளது. அவ்வளவு பணம் அனுப்பினால் இந்திய நிதித்துறை எப்படி ஏற்றுக்கொள்ளும் எனக் கேட்கிறார்கள். அவர்களை சரிக்கட்ட வேண்டியுள்ளது என பதில் தந்துள்ளார்கள். 

 

கோவைக்காரர் ‘அவங்களை எப்படியாவது சரிக் கட்டுங்கள், நான் அதற்கு என்ன செலவாகுமோ அதைத் தருகிறேன்’ எனச் சொல்லி பதில் மின்னஞ்சல் செய்தார். அவர்கள் 10 ஆயிரம் பவுன்ட் பணம் அனுப்பவும் எனச் சொல்ல இவர் இந்திய மதிப்பில் கணக்குப் போட அது 12 லட்ச ரூபாயைக் காட்டியது. கொஞ்சம் அதிர்ச்சியானாலும் நமக்குதான் 70 லட்சம் பவுன்ட் வரப்போகுதே என அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கி எடுத்துச்சென்று பணத்தை கட்டியுள்ளார். பணத்தை கட்டியபின் மின்னஞ்சல் வரவில்லை. இவர் மின்னஞ்சல் அனுப்பியும் நோ ரெஸ்பான்ஸ். அதன்பின்பே அவருக்கு புரிந்தது பணம் அனுப்புகிறேன் எனச் சொன்னவர்கள், இவரது வங்கி கணக்கு எண்ணைக்கூட வாங்கவில்லை என்பது. அவ்வளவுதான் பணம் போனது போனதுதான். திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அவரால் வெளியே சொல்லவும் முடியவில்லை. குடும்பத்தாரிடமும் நெருங்கிய நண்பரிடமும் சொல்லி கதறி கதறி அழுதுள்ளார். 

 

புதுச்சேரி மாநிலம் பாண்டிச்சேரி ரெட்டியார்பாளையம் நகரைச் சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர். அவர் பி.இ படித்துள்ளார். தான் படித்த படிப்புக்கு வெளிநாடுகளில் ஏதாவது வேலை கிடைக்குமா என இணையத்தில் தேடிக்கொண்டு இருந்துள்ளார். அவரது மின்னஞ்சல் முகவரிக்கு பிரெஞ்சு துணை தூதரகம் என்கிற பெயரிலிருந்து ஒரு மின்னஞ்சல் அந்த இளம்பெண்ணுக்கு வந்தது. அதில் உங்களுக்கு பிரான்ஸில் வேலை உள்ளது, நீங்கள் புதுச்சேரியில் பிறந்தவர், பிரெஞ்ச் குடியுரிமை பெறத் தகுதியானவர் என்பதால் உங்களுக்கு பிரான்சில் வேலை உள்ளது. 

 

இதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வங்கி கணக்கில் பணம் செலுத்துங்கள் எனச் சொல்லி இரண்டு தவணையாக 5 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். அதன்பின் அந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன்பின் பாண்டிச்சேரி சைபர் செல் பிரிவில் புகார் தந்தார். புகாரை விசாரித்த போலீசார் இந்த மின்னஞ்சல் டூப்ளிக்கெட் எனச் சொல்ல அந்த பெண் அதிர்ச்சியாகியுள்ளார். இப்படி தினமும் நமது ஒவ்வொவரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயிலாவது வரும். அதில் வாரிசு இல்லாத கோடீஸ்வரர் இறந்துவிட்டார். இன்சூரன்ஸ் பணம் பல கோடி கேட்பாரில்லாமல் உள்ளது. 

 

உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் லாட்டரியில் 1 கோடி பணம் விழுந்துள்ளது, உங்களுக்கு உலகின் பிரபலமான பிபிசி நிறுவனத்தில் வேலை உள்ளது. இதற்கு நீங்கள் சர்வீஸ் சார்ஜ் கட்ட வேண்டும்; வரி கட்ட வேண்டும்; அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டும் என ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு மின்னஞ்சலில் தகவல் இருக்கும். இதனை நம்புவதற்காக சில ஆவணங்களை அதில் இணைத்திருப்பார்கள். அதனைப் பார்த்துவிட்டு ரிப்ளே செய்தால் அன்று முதல் நாம் அவர்களின் வலையில் சிக்கிவிட்டோம் என அர்த்தம். 

 

அதன்பின் நாம் அவர்களுக்கு அடிமை! என்ன அடிமையா? 

 

தொடரும்...

 

 

Next Story

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; ஒரு வருடத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 288.38 கோடி பகுதி – 25

Published on 12/06/2023 | Edited on 13/06/2023

 

Digital Cheating part 25

 

புகார் தரலாம் என்றால் அவரிடம் பேசியதற்கான ஆதாரம் உள்ளதே தவிர, அந்த மொபைல் எண் தெரியாது; வீடு எங்கிருக்கிறது எனத் தெரியாது; ஆள் கறுப்பா; சிவப்பா எனத் தெரியாது; அவர் சொன்ன பெயர் உண்மைதானா என்றும் தெரியாது. பணம் தந்தாரே வங்கி கணக்கில் இருந்து பணம் வந்திருக்குமே? என்றால் அதுவெல்லாம் ஒரு லிங்க் வழியாகவே ட்ரான்ஸக்சன் நடந்துள்ளது. அந்த லிங்க்கும் டெலகிராம் வழியாகவே வந்துள்ளது. சைபர் க்ரைம் போலீஸாரிடம் சென்றால் அலைய விடுவார்கள் என்பதால் என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்.

 

இந்த மோசடிகளைத் தடுக்க முடியாதா?

நாம் இந்த தொடரில் இதுவரை கண்டதெல்லாம் சுண்டக்காய் அளவிலான மோசடிகளே. இதைவிட வித்தியாசமாக, விதவிதமாக உலகளவில் டிஜிட்டல் மோசடிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேற்கத்திய நாடு ஒன்றிலிருந்து பார்ன் வெப்சைட் இயங்கியது. தினமும் விதவிதமான பார்ன் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டன. லட்சக்கணக்கானவர்கள் அதில் தினமும் சென்று அந்த வீடியோக்களை பார்த்தனர். அந்த இணையதளத்தில் இரவு நேரத்தில் ஃலைவ் ஷோ ஒலி-ஒளி பரப்பானது. இணையத்தில் லைவ்வில் உள்ள இளம் மங்கைகளோடு உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் உரையாடும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. அடுத்தவர் நிர்வாணத்தை பார்ப்பதுதான் இன்று பெரும்பாலானவர்கள் செய்வது. லட்சக்கணக்கான ஆண்கள் அந்த இணையதளத்தின் வழியாக அந்த பேரிளம் மங்கைகளுடன் ஆன்லைனில் கனெக்டாகி உரையாடினார்கள். தனித்தனியாகவே உரையாடல் நடந்தது. ஆண்கள் கேட்டதையெல்லாம் ஆன்லைன் வீடியோவில் அந்த அழகு மங்கைகள் செய்தனர். ஜொல் வழிய லட்சக்கணக்கானோர் ரசித்தனர்.

 

இறுதியில் அந்த இணைய தளம் ஒரு ஷாக் செய்தியை பார்வையாளர்களுக்கு தந்தது. அதாவது, அந்த வெப்சைட் வழியாக உரையாடியது, ஆண்கள் சொன்னதையெல்லாம் செய்தது இணையத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு பொம்மை என்றதைக் கேட்டு அதிர்ச்சியானார்கள். அதை பலரும் நம்பவில்லை. அந்தளவுக்கு தத்ரூபாக இருந்தது அந்த பொம்மை. அதுமட்டுமல்ல ஆண்களின் கேள்விகளுக்கெல்லாம் சரியாக பதில் சொன்னதும் அவர்களால் நம்ப முடியாததுக்கு காரணம். அவர்கள் நம்பமாட்டார்கள், நம்ப முடியாததை நம்ப வைப்பதே டெக்னாலஜி. நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை புரட்டிப் போடுவேன்; இந்தியாவில் பாலாறும் தேனாரும் ஓடும்; தலைக்கு 15 லட்சம் பணம் தருவேன் என்று டிஜிட்டல் வழியாகவே தன்னை கட்டமைத்து பேசி இந்தியாவின் பிரதமர் பதவியை பிடித்தாரா இல்லையா நரேந்திர மோடி. அதுதான் டெக்னாலஜியின் பலம். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வளர்ச்சி என்பது வெகு குறைவு. அந்த நாடுகள் டெக்னாலஜி பயன்படுத்துவதில், வளர்ச்சியில் நம்மைவிட 3 தலைமுறைக்கு முன்னணியில் உள்ளனர்.

 

இப்போது உலகத்தையே மிரட்டிக்கொண்டு இருப்பது ஏ.ஐ. எனப்படும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். நாம் பேசுவதை வைத்து நமக்கு என்ன தேவை என்பதை யூகித்து நமக்கு அதுகுறித்த விளம்பரங்களை, நிறுவனங்களை, அறிவுரைகளை சொல்லத் துவங்கியுள்ளது இணையம். அதற்கு நமது முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், டெலகிராம் உட்பட நாம் மொபைலில் பயன்படுத்தும் ஆப்கள் வழியாகவே நம்மை கண்காணித்து நமக்கு ஆப்படிக்கின்றன. மொபைல்களில் நம் உடலின் ஹார்ட்பீட், சுகர், வாக்கிங் தூரம் போன்றவற்றையெல்லாம் அறிந்துகொள்ள ஆப்களை இன்ஸ்டால் செய்கிறோம். அதில் நமது விரல் ரேகைகளை பதிவு செய்யச் சொல்லும் ஆப்கள் உண்டு. இந்த ஆப்கள் தான் தற்போது நமது பர்சனல் தகவல்களைத் திருடுகின்றன. கைரேகையை வைத்து நமது ஆதார் டேட்டாவை எடுப்பதோடு, நமது வங்கிக் கணக்கில் இருந்தும் பணத்தை எடுக்கிறார்கள். இந்த ஆப்கள் ஹார்ட்பீட்டை கண்காணிக்க மட்டுமல்ல நம்மையும் கண்காணிக்கின்றன. 

 

ஆர்டிபிஷியல் இன்டிலிஜென்ஸ் வளர்ச்சியின் மற்றொரு முன்னேற்றம், செய்தி பத்திரிகைகளுக்கு கட்டுரையோ, கல்லூரி மாணவ-மாணவியர் ரெக்கார்ட் நோட்ஸ் எழுதுவதோ, ஆராய்ச்சி மாணவர்கள் தீசஸ் எழுதவெல்லாம் இனி உட்கார்ந்துகொண்டு மாங்கு, மாங்கு என மூளையை கசக்கி, வார்த்தைகளை எடுத்துப்போட்டு எழுதத் தேவையில்லை. எனக்கு இப்படியொரு தலைப்பில், இந்தந்த தகவல்களைக் கொண்ட இப்படியொரு உள்ளடக்கத்தில் ஒரு கட்டுரை, ரெக்கார்ட் தேவை எனச்சொல்லி தகவல்களை சேட்பட் என்னும் இணையதளத்தில் உள்ளீடு செய்துவிட்டால் போதும். அடுத்த சில நிமிடத்தில் அழகான வடிவமைப்பில் நமக்கு அனுப்பி வைத்துவிடும். ஒரே கட்டுரையை வெவ்வேறு விதமாக எழுதித் தரச் சொன்னாலும் தந்துவிடும். கட்டுரை மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடியோ, முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என யாரோ ஒருவர் எங்கேயோ பேசுவது போன்று ஒரு வீடியோவை எடுத்து அதை இணையத்தில் தந்துவிட்டு, நாம் நினைப்பதையெல்லாம் சொல்லினால் அதனை அவர்கள் பேசுவது போலவே வீடியோவாக மாற்றி தந்துவிடும்.

 

ஹாலிவுட் நடிகர்கள் பக்தி வேடத்தில் எப்படியிருப்பார்கள் என அவர்களின் சாதாரண ஃபோட்டோவை அப்லோட் செய்தால் பக்தி வேடத்தில் எப்படி இருப்பார்கள் என உருவாக்கி அனுப்பி வைத்துவிடும். இதுவெல்லாம் சில நிமிடங்களில் நடந்துவிடும். அந்தளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. இது இன்னும் வளரும் இதனால் லட்சக்கணக்கானவர்களின் வேலைகள் உலகம் முழுவதும் காலியாகும் என எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள். தமிழ்நாடு அரசின் காவல்துறை கடந்த 2023 மே மாதம் சைபர் க்ரைம் பிரிவின் கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார் பேசும்போது, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல்வேறு விதமாகப் பேசி கடந்த ஓராண்டில் மட்டும் 288.38 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் மட்டும் ஏமாற்றியுள்ளார்கள் டிஜிட்டல் மோசடியாளர்கள். எங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் 106 கோடி ரூபாய் மட்டும் முடக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சைபர் க்ரைம் ஹெல்ப்லைன் 1930ல் வந்த புகார்கள் மட்டும் 12 ஆயிரம். அந்த மூன்று மாதத்தில் மட்டும் 67 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் இருந்து டிஜிட்டல் கொள்ளையர்கள் எடுத்துள்ளனர்.

 

இதில் 27 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. கடந்த 45 நாட்களில் 27,905 சிம் கார்டுகளை முடக்கச் சொல்லி தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் கூறியதில் 22,440 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர் என்கிறார். அவர் காவல்நிலையத்துக்கு வந்த புகார்களை சொல்லியுள்ளார். காவல்நிலையத்துக்கே வராத புகார்கள், வந்தாலும் வாங்காமல் இழுத்தடிக்கும் புகார்கள் போன்றவற்றை கணக்கிட்டால் இதைவிட அதிகமாக இருக்கும் என்பது நம் அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் மட்டுமே இவ்வளவு புகார்கள், இத்தனை கோடிகளை எடுத்துள்ளார்கள் என்றால், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் எவ்வளவு டிஜிட்டல் மோசடிகள், எத்தனை ஆயிரம் புகார்கள், எவ்வளவு கோடி ரூபாய்களை மக்கள் ஏமாந்திருப்பார்கள் என நினைத்தால் மலைப்பாகவே இருக்கிறது. உலகளவில் சில லட்சம் கோடிகள் ஆண்டுதோறும் டிஜிட்டல் வழியாக மோசடி நடக்கிறது. இந்த மோசடிகளைத் தடுக்க வேண்டும் என்றால் டெக்னாலஜி சட்டங்களை வலிமைப்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாக டெக்னாலஜி தெரிந்தவர்களை இந்தியா முழுமைக்குமே காவல்துறையில் பணியில் அமர்த்த வேண்டும்.

 

இதனை இங்கு குறிப்பிடக் காரணம், சைபர் க்ரைம் பிரிவில் டெக்னாலஜி தெரியாதவர்களைத்தான் பணியில் வைத்துள்ளனர். டெபுடேஷன் பணி, ஓ.டி பணியாகவே இந்த பிரிவுக்கு ஆள் அனுப்பப்படுகின்றனர். இப்போதும் தனி நபர்களை, ஹேக்கர்களை நம்பியே சைபர் பிரிவு காவல்துறை செயல்படுகிறது என்கிறார்கள் துறை நிபுணர்கள். அதனால் ஆன்லைன் மோசடிகளை, குற்றங்களை தடுப்பது என்பது கடினமாகியுள்ளது. உலகத்தையே அச்சுறுத்தும் போதை மருந்துகள் விற்பனை, கள்ளச் சந்தையில் ஆயுதம் விற்பனை, பாலியலுக்காக இளம்பெண்கள் கடத்தல், மனித உறுப்புகளுக்காக குழந்தைகள் கடத்தல் போன்றவை உலகை அச்சுறுத்துகின்றன. டார்க்-வெப் என்கிற ரகசிய இணையதளம் வழியாக இதற்கான தகவல் பரிமாற்றங்கள் நடப்பதையே கண்டறிந்தும் அதனைத் தடுக்க முடியாத நிலையிலேயே உலகின் ஒவ்வொரு நாட்டின் சைபர் க்ரைம் பிரிவும் உள்ளது. அந்தளவுக்கு எதிர் தரப்பிலும் டெக்னாலஜி கிங்குகள் உள்ளனர். இந்திய அரசின் பொதுத்துறை, அரசு அலுவல் துறைகளின் முக்கிய இணையதளங்களை முடக்கியுள்ளார்கள் ஹேக்கர்கள்.

 

சில நேரங்களில் அவர்கள் கேட்கும் அளவுக்கு பணத்தை தந்து மீட்டுள்ளார்கள். வரும் காலங்களில் தண்ணீரால் உலகப்போர் வருகிறதோ இல்லையோ...! நாடுகளுக்கு இடையிலான சைபர் சண்டை கண்டிப்பாக நடக்கும் என்கிறார்கள் டெக் வல்லுநர்கள். நம் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் ‘கொரில்லா சைபர் ஃவார்’ எப்போதோ தொடங்கி நடந்து வருகிறது. அரசியலுக்காக மொபைல் ஆடியோ டேப்பிங் இல்லீகலாக செய்யப்படுவதாக ஒன்றிய, மாநில கட்சிகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாக்கியது பெகாசஸ் உளவு மென்பொருள். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக நரேந்திர மோடி அரசாங்கம் அதனை வாங்கியது. அதனை வைத்து இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களை, சொந்த கட்சித் தலைவர்களை, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை, ராணுவ அதிகாரிகளை, பத்திரிகையாளர்கள் என யாரை கண்காணிக்க வேண்டுமோ அவர்களின் செல்போன் அல்லது மின்னஞ்சலுக்கு வைரஸ் அனுப்பி அவர்களை உளவு பார்ப்பது அம்பலமானது. இதுபோன்ற மிக ரகசிய பணிகளைச் செய்யக்கூட தனியார் நிறுவனங்களை நம்பியே உள்ளது அரசின் உளவு அமைப்புகள். 

 

தனியார் கம்பெனிகளிடம் தந்தால் நாளை சிக்கல் வந்தாலும் அரசின் தலை தப்பிவிடும் எனக் கணக்கிடுகிறார்கள். அதுவும் ஆபத்துதானே?. அதை வைத்து அவர்கள் மிரட்டமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? டெக்னாலஜி வளர, வளர குற்றம் செய்பவர்களும் தங்களது வித்தையை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். வாசகர்கள் இந்ததொடரில் படித்தவை மேம்போக்கான டிஜிட்டல் மோசடிகளே. இதைவிட விதவிதமாக மோசடிகள் டெக் வழியாக நடக்கும். இணைய மோசடிகள், குற்றங்களுக்கான தண்டனையை இந்தியாவில் அதிகப்படுத்தினால் மட்டுமே டிஜிட்டல் சதுரங்க வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்பிக்க முடியும். மோசடிகளை, குற்றங்களை எதிர்கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. மக்கள் எச்சரிக்கையாக இருங்கள், பாதிக்கப்பட்டாலோ ஏமாந்தாலோ அரசின் சைபர் பிரிவினரிடம் முறையிடுங்கள், தீர்வை பெறுங்கள் என்பதோடு இந்தத் தொடர் இந்நேரத்தில் முடிகிறது. 

 

 

Next Story

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; “பேங்க்ல இப்படிலாம் கேட்க மாட்டாங்களே சுதாரித்த நபர்” பகுதி - 24

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Digital cheating 24

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அது. “சார் போஸ்ட்” என தபால்காரர் வீட்டு வாசலில் இருந்து கத்தினார். உள்ளிருந்து வந்தார் அரசுத் துறையில் பணியாற்றும் 55 வயதாகும் நபர். “இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க.” கையெழுத்துப் போட்டதும் இந்தாங்க என ஒரு கவரை தந்துவிட்டுச் சென்றார் தபால்காரர்.

 

பிரபலமான பொதுத்துறை வங்கியில் இருந்து வந்த அந்த கவரை பிரித்த போது உள்ளே, துரைசாமி அர்ஜுனன் என அவரின் பெயர் இருந்த புதிய ஏ.டி.எம் கார்டு பளபளத்தது. தனது பழைய ஏ.டி.எம் கார்டு எக்ஸ்பயரி ஆனதால் புதிய கார்டு அனுப்பியிருக்கிறார்கள் போல. பரவாயில்லை பொதுத்துறை வங்கிகூட நல்லா வேகமாக வேலை செய்றாங்களே என மகிழ்ச்சி அடைந்தார்.

 

ஏ.டி.எம் கார்டு ஆக்டிவேட் செய்ய இந்த எண்ணுக்கு கால் செய்யுங்கள் என அதில் ஒரு மொபைல் எண் இருந்தது. இவர் தனது மொபைலை எடுத்து  அந்த நம்பரை தொடர்புகொண்டார். எதிர்முனையில் பேசிய குரல் அழகான பெண் குரல். “நீங்கள்தானா என உறுதி செய்துகொள்ள சில கேள்விகள்” எனச்சொல்லி, “உங்க அட்ரஸ் பின்கோட் நம்பர் சொல்லுங்க? அப்படியே வங்கியில் தந்துள்ள உங்க நாமினி பெயர் சொல்லுங்க” என்கிற கேள்வியை கேட்டு பதிலை வாங்கிக்கொண்டதும், “உங்க பழைய ஏ.டி.எம் கார்டு டேட் முடியவுள்ளது, அதனால் புதிய கார்டு வங்கி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய கார்டு அப்டேட் செய்ய வேண்டுமானால் பழைய கார்டை டீஆக்டிவேட் செய்யவேண்டும். அதனால் முதலில் பழைய கார்டு எண் சொல்லுங்கள், பிறகு புதிய கார்டு எண் சொல்லுங்கள்” என இரண்டு கார்டு எண்களும் கேட்க இவரும் தந்துள்ளார். 

 

“இப்போது நீங்கள் வங்கியில் பதிவு செய்த உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி வரும் அதைச்சொல்லுங்கள்” என்று கேட்டுள்ளார் அந்தப் பெண். ஓடிபி சொல்ல முயன்றவர் டக்கென சுதாரித்துக்கொண்டு, “ஓடிபி எல்லாம் வங்கியில் இருந்து யாரும் கேட்கமாட்டாங்கன்னு அடிக்கடி மெசேஜ் வருது, நீங்க ஓடிபி கேட்கறிங்க” என்று கேட்டுள்ளார். “இது டெபிட்கார்டு ஆக்டிவேட் சர்விஸ், அதனால் பயப்படாம சொல்லுங்க பிரச்சனையில்லை” என்றிருக்கிறார் அந்தப் பெண். “இல்லை, நான் என்னோட வங்கி கிளையில் நேரடியாகப்போய் ஆக்டிவேட் செய்துகொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். “உங்களுக்கு எதுக்கு சிரமம், நானே செய்து தந்துடுறேன்” என்றார் அந்தப் பெண். “சிரமம் ஒன்னுமில்லை” என்றார் அவர். “வெய்யில் காலத்தில் நீங்க அலையாதிங்க. கார்டு உடனே ஆக்டிவேட் செய்யலன்னா அக்கவுண்ட் லாக் ஆகிவிடும்” என்றிருக்கிறார் அந்தப் பெண். “யாரு?” என இவர் கேட்டதும், “சிஸ்டம், ஆட்டோமேட்டிக்கா லாக் செய்துடும்” என்றிருக்கிறார் அந்தப் பெண். “நான் இப்பவே பேங்க்குக்கு போய் பார்த்துக்கிறேன்” எனச் சொல்லியபடி போன் லைனை கட் செய்துள்ளார்.

 

உடனே புறப்பட்டு வங்கியில் போய் அவர் இதனை கூறியபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் அந்த கார்டு, கவர் வாங்கி பார்த்தபோது, அப்படியே வங்கி அனுப்புவது போல் அனுப்பியிருந்தனர். அவர் உடனே தனது வங்கி மேலாளரிடம் தகவல் சொல்லியுள்ளார். அவர்கள் தொடர்பு கொள்ளச்சொல்லி அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண் போலியாக இருந்தது.

 

முகநூல், வாட்ஸ்அப் போல் இந்தியாவில் கோடிக்கணக்காணோர் டெலகிராம் ஆப் பயன்படுத்த துவங்கியுள்ளனர். அதற்கு காரணம் இலவசமாக கோலிவுட், பாலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட் படங்களும், வெப்சீரியஸ்களும் இலவசமாக கிடைப்பதால் பொதுமக்கள் அதில் குந்தவைத்து அமர்ந்துள்ளனர். டவுன்லோட் செய்து படமாக பார்க்கின்றனர்.

 

டெலகிராமில் ஒரு குரூப் உள்ளது என்றால் அதில் நாம் இணைந்தால் அதில் மொபைல் எண் காட்டாது. டெக்னாலஜி கில்லாடிகள் அதன் வழியாகவும் மோசடி செய்யத் துவங்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த நெட்டிஸன் அவர். இணையத்திலேயே புழங்கிக்கொண்டு இருக்கும் அவர் சினிமா குறித்தும், உணவுக் குறித்தும், தான் போய்வந்த சுற்றுலா தலங்கள், அரசியல் என எதுகுறித்தாவது சமூக ஊடகத்தில் எழுதிக்கொண்டே இருப்பார். இவருக்கு டெலகிராம் வழியாக அறிமுகமானவர், “நான் சங்கரநாராயணன்” (இது உண்மையான பெயரா என நெட்டிஸனுக்கும் தெரியாது) எனச் சொல்லிக்கொண்டு அறிமுகமாகியுள்ளார்.

 

“நான் ஒரு சோசியல் மீடியா கன்சல்டிங் நிறுவனம் வைத்துள்ளேன். சோசியல் மீடியாக்கள் மூலம் ஹோட்டல்கள், சினிமா, உணவு போன்றவற்றை பப்ளிசிட்டி செய்வது எங்களது வேலை. நாங்கள் ஹோட்டல்கள் குறித்து பட்டியல் தருவோம் அதற்கு நீங்கள் ரிவ்யூ எழுத வேண்டும் அப்படி எழுதினால் ஒரு ரிவ்யூவுக்கு 500 ரூபாய் சார்ஜ் தருவோம்” என்றுள்ளார்.

 

ஆஹா, அதற்கென்ன எழுதிடுவோம் என களம் இறங்கியுள்ளார். முதலில் ஒரு பத்து ஹோட்டல் குறித்து ரிவ்யூ எழுதியுள்ளார். இவரது வங்கி கணக்குக்கு 5 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர். எவ்வளவு நேர்மையா இருக்காங்க, வீட்ல இருந்தபடியே லட்சம் லட்சமா சம்பாதிக்க வழி தெரிஞ்சிடுச்சி என இறக்கை இல்லாமலே வானில் பறக்கத் துவங்கினார். அவர்கள் பட்டியல் தருவதும், இவர் அந்த பட்டியலில் உள்ள ஹோட்டல்கள் குறித்து பதிவு எழுதுவது, சினிமாக்கள் குறித்து ஆஹா ஓஹோ என எழுதுவது என இருந்துள்ளார். ஒருநாள், “நீங்க எங்க கம்பெனிக்கு டெப்பாசிட் கட்டனும், அப்பத்தான் உங்களை மெம்பராக்குவோம்” என்றுள்ளார். “ப்ரீமியம் எவ்வளவு” என்று இவர் கேட்க, “நார்மல் மெம்பர்னா 50 ஆயிரம், கோல்டன் ப்ரீமியம் எடுத்துக்கிட்ட 1 லட்சம், டைமண்ட் மெம்பராகனும்னா 2 லட்சம். நார்மல் மெம்பர்னா மாதம் 100 பெயர் கொண்ட பட்டியல் தருவோம். கோல்டன் மெம்பர்னா மாதம் 1000, டைமண்ட் மெம்பர்னா ஹோட்டல், சினிமா மட்டுமில்லாம, அரசியல் பதிவுகள் போடவும் கன்டெண்ட் தருவோம்” என்றுள்ளார். இவர் டைமண்ட் மெம்பராக 2 லட்சம் பணம் தந்துள்ளார். 

 

அவர்கள் பட்டியல் தருவதும், இவர் ரிவ்யூ எழுதுவதும், கமெண்ட் போடுவதும் என வாழ்ந்துள்ளார். “உங்களுக்கு வருமானம் வருதில்ல; எங்களுக்கு முன்கூட்டியே பணம் தாங்க என நைச்சியமாக பேசிபேசி சுமார் 30 லட்ச ரூபாயை ஆட்டயப்போட்டுள்ளார் அந்த நபர். அதன்பின் ரிவ்யூ எழுதுவதற்கான பட்டியல் வரத்தும், பணம் வரத்தும் குறைந்தது. இவரிடமிருந்து டெலகிராம் வழியாக பேசியவர் 30 லட்ச ரூபாய் பணம் வாங்கியிருந்தார். இவர் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் தந்துள்ளார். இப்போது 30 லட்ச ரூபாய் கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறார். என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார். அவரின் வீட்டுக்கு செல்லலாம், போலீசில் புகார் தந்து அவரது மொபைல் எண்ணை வைத்து ஆளை பிடிக்கலாமே?

 

தொடரும்…