Skip to main content

முடக்கப்பட்ட காங்கிரஸின் சின்னங்கள்! சின்னங்களின் கதை #1

Published on 25/03/2019 | Edited on 08/04/2019

தேர்தலை சந்தித்து வாக்காளர்களிடம் வேட்பாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள சின்னங்கள் முக்கியமான அம்சமாகிவிட்டன. நாடு விடுதலை பெறுவதற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை ஆட்சிமுறை அமல்படுத்தப்பட்டது. அப்போதும் சரி, விடுதலைக்கு பிறகு புதிய அரசியல் சட்டம் அமலாகிற வரைக்கும் கட்சிகளுக்கு சின்னங்களே கிடையாது.
 

nehru

 

அந்தக் காலகட்டத்தில் போட்டியிடும் கட்சிகளுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் மஞ்சள், வெள்ளை என்று தனித்தனிப் பெட்டிகள்தான் வைக்கப்பட்டன. அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படாத நிலையில் வேட்பாளர்கள் தங்களுக்குரிய வண்ணத்தைச் சொல்லி வாக்குகளை கேட்பது வழக்கமாக இருந்தது. 1945 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்களே மொத்தம் 14 லட்சத்துக்கும் சற்று கூடுதல்தான்.
 

வேட்பாளர்கள் பெரும்பாலும் ஒரு கிராமத்துக்கு வந்தால் அந்த ஊரில் இருக்கிற ஒரு சில பெரிய மனிதர்களைச் சந்தித்து வாக்குக் கேட்பதோடு சரி. இப்படித்தான் தேர்தல் நடைபெற்றது. 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றதுதான் கடைசித் தேர்தல். மத்திய சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் 102 உறுப்பினர்கள் மட்டுமே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் வெற்றி பெற்றது. இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 30 தொகுதிகளில் மட்டுமே முஸ்லிம் லீக் வெற்றிபெற்றது. பஞ்சாபில் சீக்கியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 இடங்களில் அகாலிதளம் வெற்றி பெற்றது. 8 ஐரோப்பியர்களும், 3 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.
 

அந்தத் தேர்தலுக்குப் பிறகு, 1950 ஆம் ஆண்டு அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது. இந்தியா குடியரசு நாடாகியது. அதன்பிறகு 1951 ஆம் ஆண்டு விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில்தான் கட்சிகள் குறிப்பிட்ட சின்னங்களில் தேர்தலை சந்திக்கத் தொடங்கின.
 

 

 

முதல் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டை காளைச் சின்னத்தில் போட்டியிட்டது. மொத்தம் உள்ள 489 இடங்களில் 479 இடங்களுக்கு போட்டியிட்டு 364 இடங்களைக் கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் வாக்களிக்கத்  தகுதியான வாக்காளர்கள் 17 கோடியே 30 பேர். பதிவான வாக்குகளில் 45 சதவீதத்தை காங்கிரஸ் பெற்றது. காங்கிரஸுக்கு அடுத்தபடியாக சுயேச்சைகள் 37 இடங்களைப் பெற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், சோசலிஸ்ட் கட்சி 12 இடங்களையும் வென்றன.
 

1957ல் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலில் மொத்த இடங்கள் 494 ஆக உயர்த்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி 47.72 சதவீதம் வாக்குகளைப் பெற்று 371 இடங்களைப்பெற்றது. 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது பொதுத் தேர்தலில் 44.72 சதவீதம் வாக்குகளைப் பெற்று 361 இடங்களில் வெற்றிபெற்றது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு மறைந்தார். அதைத்தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது. பாகிஸ்தானை எல்லைதாண்டி இந்திய ராணுவம் விரட்டியது. லாகூரை கைப்பற்றிவிடுமோ என்ற நிலைகூட உருவானது. சர்வதேச நிர்பந்தம் காரணமாக அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. ரஷ்யாவுக்குச் சென்ற லால்பகதூர் சாஸ்திரி 1966 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி மரணமடைந்தார்.
 

அதைத்தொடர்ந்து, 1966 ஜனவரியில் இந்திரா காந்தி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றபோதும், இந்திரா பொறுப்பேற்ற போதும் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு போட்டியிட்டு தோற்ற மொரார்ஜி தேசாய் கட்சிக்குள் கோஷ்டி மனப்பான்மை உருவாகக் காரணமாக இருந்தார். இந்நிலையில் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது பொதுத்தேர்தலில் மக்களவையின் மொத்த இடங்கள் 520 ஆன நிலையில் காங்கிரஸ் கட்சி 283 இடங்களை மட்டுமே பெற்றது. பதிவான வாக்குகளில் 40.78 சதவீதம் மட்டுமே காங்கிரஸுக்கு கிடைத்தது.
 

நேருவின் மறைவுக்குப் பிறகு வறுமை, வேலையின்மையும், உணவுப் பஞ்சமும் இந்தியாவை வாட்டியது. காங்கிரஸ் பெருமுதலாளிகளின் கட்சியாகவே மாறிவிட்டது. கிராமப்புற அளவில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் முதன்முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி எழுச்சி பெற்றது. ஏழைகளின் பிரச்சனைகளைப் பேசிய கட்சிகளை மக்கள் ஆதரிக்கத் தொடங்கினர். காங்கிரஸை விட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் விலகத் தொடங்கினர்.
 

இதையறிந்த இந்திரா, சோசலிஸ கொள்கைகளை அமல்படுத்த விரும்பினார். இந்திய ரூபாயின் மதிப்பை மறுசீரமைத்தார். உணவுப் பஞ்சத்தை போக்க அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தார். இதெல்லாம் காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தனது கொள்கைகளுக்கு ஒப்புதல் பெற குடியரசுத்தலைவர் தனக்கானவராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக 1969ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் நிறுத்திய சஞ்சீவரெட்டியை எதிர்த்து சுயேச்சையாக வி.வி.கிரியை நிறுத்தினார். மனச்சாட்சிப்படி வாக்களிக்கும்படி இந்திரா கூறினார். அதுமட்டுமின்றி இந்தியாவுடன் இணைந்த மன்னர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களையும் சலுகைகளையும் ரத்து செய்யவும், நாட்டின் 14 பெரிய தனியார் வங்கிகளை தேசியமயமாக்கவும் முடிவு செய்தார். நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாயை கலந்து ஆலோசிக்காமல் இந்திரா இந்த நடவடிக்கை எடுத்ததாக காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா குற்றம் சாட்டினார். ஆனால், மொரார்ஜி இதையெல்லாம் ஆதரிக்கவில்லை என்பதே நிஜம். இதையடுத்து, இந்திராவை கட்சியிலிருந்து நீக்குவதாக நிஜலிங்கப்பா அறிவித்தார். ஆனால், மொத்தம் இருந்த காங்கிரஸ் எம்பிக்களில் 65 பேர் மட்டுமே நிஜலிங்கப்பாவை ஆதரித்தனர். அவர்களுக்குப் பதிலாக திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு இந்திரா ஆட்சியைத் தொடர்ந்தார்.
 

cow calf

 


காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து கட்சியின் இரட்டை காளை மாடு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்திராவின் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு பசுவும் கன்றும் சின்னமும், நிஜலிங்கப்பா தலைமையிலான காங்கிரஸுக்கு கைராட்டை நூற்கும் பெண் சின்னமும் ஒதுக்கியது. 1971 ஆம் ஆண்டு மேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுதந்திர வங்கதேசத்துக்காக நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க மேற்கு பாகிஸ்தான் ராணுவ அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. இந்த உள்நாட்டு குழப்பம் காரணமாக வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக வந்தனர். இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண வங்கதேசத்துக்கு ஆதரவாக இந்திய ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் இந்திரா. 14 நாட்களில் பாகிஸ்தான் பிடியிலிருந்து வங்கதேசத்தை மீட்டு, சுதந்திர வங்கதேசத்தை உருவாக்க உதவினார் இந்திரா.
 

இந்த வெற்றியின் சூட்டோடு தனது அரசுக்கு தனிப்பெரும்பான்மைக்கு திட்டமிட்டார். தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையிலேயே மக்களவைக்கு தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். 5ஆவது பொதுத்தேர்தலில் 518 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 352 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தார் இந்திரா. இந்தத் தேர்தலின் போது தனது தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை இந்திரா மீறியதாக ராஜ்நாராயண் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் இந்திராவின் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளால், முதல்முறையாக இந்தியாவில் நெருக்கடிநிலையை பிரகடனம் செய்தார். அது அவருடைய ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்த்து நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஜனதா என்ற கட்சியை உருவாக்கின. இந்தக் கட்சியில் காமராஜ் தலைமையிலான காங்கிரஸ், வாஜ்பாய் தலைமையிலான ஜனசங், சோசலிஸ்ட் கட்சி, சரண்சிங் தலைமையிலான லோக்தளம் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருந்தன. எனவே, காமராஜர் தலைமையிலான காங்கிரஸின் கைராட்டை நூற்கும் பெண் சின்னம் உள்பட அந்தந்த கட்சிகளின் சின்னங்கள் கைவிடப்பட்டு, ஏர் உழவன் சின்னம் பொதுச்சின்னமாகியது. சர்வதேச நிர்பந்தம் காரணமாக நெருக்கடி நிலையை திரும்பப்பெற்றார் இந்திரா.

 

rattai

 

அதைத்தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது மக்களவைத் தேர்தலில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அந்தத் தேர்தலில் மக்களவையின் இடங்கள் 542 ஆகியிருந்தது. இதில் இந்திரா காங்கிரஸ் 153 இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. இந்திராவும் தனது தொகுதியில் தோல்வி அடைந்தார்.


இந்தத் தோல்வியின்போது இந்திரா காங்கிரஸின் தலைவராக பிரமானந்த ரெட்டி இருந்தார். அவர் இந்திராவை கட்சியை விட்டு நீக்கினார். இதையடுத்து, மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. ஆனால், இப்போதும் இந்திரா தலைமையிலான பிரிவுக்கே பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. இருந்தாலும், காங்கிரஸின் சின்னமான பசுவும் கன்று சின்னத்தை முடக்கியது. இந்திரா தலைமையிலான காங்கிரஸுக்கு கை சின்னத்தை ஒதுக்கியது. அந்தச் சின்னத்திலேயே கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரானார் இந்திரா.
 

cong



1977 முதல், இன்றுவரை 40 ஆண்டுகளாக காங்கிரஸின் சின்னமாக கை சின்னமே தொடர்கிறது.
 

(அடுத்து திமுகவின் சின்னம் குறித்து பார்க்கலாம்)


அடுத்த பகுதி

கிடைத்தது எளிது, ஆனால் தக்கவைத்தது பெரிது! திமுகவுக்கு 'உதயசூரியன்' கிடைத்த கதை... சின்னங்களின் கதை #2