Skip to main content

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

Published on 17/11/2018 | Edited on 09/12/2018
auto sankar 22



ஆட்டோவா, ஆகாய விமானமா என சந்தேகப்படும்படியான, நம்ப முடியாத வேகத்தில் வண்டி பறந்தது.

"கடைக்கு பலத்த சேதமா...?''

"ஆமாண்ணே...! யாரோ நாலு பேர் புகுந்து. இந்த மிஷின்லே ஏதோ ஃபிராடு இருக்குது... எப்பவுமே காசு விழறதில்லை... ஏமாத்தவா செய்யறீங்க'ன்னுஅடிச்சு நொறுக்கறாங்களாம்... நாமும் வேணா ஒரு நாலைந்து சேர்த்துப்போமா... சந்தடி சாக்கிலே கடையைத் தரை மட்டமாக்கிடலாம்!?''

"உளறாதே, பேசாம போ!''

சண்டையில் அமளி துமளிப்பட்டது கடை... அந்த நாலுவாட்ட சாட்டன்களும் பிரதேசத்தை உண்டு, இல்லை பண்ணிக்   கொண்டிருந்தனர். முதலாளியம்மா பதட்டமாகி ஃபோனுக்குப் பாய ஸ்டூல் ஒன்று பறந்து வந்து தொலைபேசியில் மோத சிதறித்   தெறித்தது. அம்மையார் அலறித் தீர்த்தார்.

இன்னொருவன் கல்லா பெட்டியில் கைவைக்க முயன்ற நிமிஷம், கடைமுன்னர் பெரிய சப்தத்துடன் போய் நின்றது அவசர ஆட்டோ., சரேலென வெளிப்பட்டேன். ஒரு நிமிடம் சண்டையை நிதானமாய் கவனித்தேன். வெறுப்புடன் காரித் துப்பினேன்! தம்பி மோகனிடம் "நான் மட்டும் உள்ளே போய் கவனிச்சுக்கறேன்... நீ ஆட்டோவிலேயே இரு!'' சொல்லிவிட்டு உள்ளே பாய்ந்து சண்டை ஜோதியில் சேர்ந்து கொண்டேன். அவர்கள் நான்கு பேரோடும் ஒற்றை ஆளாகச் சமாளித்தேன்.

வாசகர்களே, நீங்கள் யாருடைய ரசிகர்? ரஜினி? கமல்? விஜயகாந்த்? சத்யராஜ்? அல்லது வாத்தியார்? உங்கள் அபிமான நடிகர்   யாரோ அவரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்! திரையில் அவர் எப்படி எதிரிகளை சமாüப்பாரோ அப்படி ஒரு ஸ்டைல்! சாகஸம்! கெட்டிக்காரத்தனம்!

ஒரு ஆளாக நின்று கொண்டு எதிரிகளைப் பந்தாடினேன். ரௌடிகள் நான்கு பேரும் உதட்டில் எட்டிப் பார்த்த ரத்தத்துடன் துடித்தனர். வலி தாங்காமல் பெற்றவளைக் கூப்பிட்டுக் கொண்டே கீழே சாய்ந்தனர். கடையை விட்டு வெளியே பாய்ந்து மறைந்தனர். அம்மையார் கண்களில் ஆச்சரியம் பிரகாசம் காட்டிற்று. என்னை பரவசம் பொங்கப் பார்த்தார்.

 

auto sankar 22-1



'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் திருடனை விரட்டின எம்.ஜி.யாரின் பலம் பார்த்து பிரமித்த சரோஜாதேவி கூட அப்படித்தானே   பார்த்தார்?!' அது சரோஜாதேவி, இவர்... ஏதோ ஒரு தேவி! அம்மணி என்னைப் பார்த்து தோழமையுடன் சிரித்தார்.

"ரொம்ப நன்றி...! நல்ல நேரத்தில் வந்து கை கொடுத்தீங்க!''

உதட்டில் புன்னகை உருவாக்கிக் காட்டினேன்.

"அதனால என்னங்க... உங்களுக்கு எப்ப, என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்குப் ஃபோன் பண்ணுங்க'' -விசிட்டிங் கார்டை அவர் கையில் திணித்தேன். என் உதவி அவருக்கும் அவர் உதவி எனக்கும், அப்புறம் அடிக்கடித் தேவைப்பட்டது. அந்த பெண்மணிக்கு அடிக்கடி ஃபோன் செய்து என்னைக் கூப்பிடத் தெரிந்தது. பரஸ்பரம் தொழிலுதவி செய்யத் தெரிந்தது; போலீஸ் வட்டாரத்தில் என்னை மேலும் நெருக்கமாக்க தெரிந்தது.

வீடியோ கடையில் நடந்த மோத-ல் சண்டை போட்டவர்கள் என்னுடைய ஆட்கள்... அந்த சண்டையே ஒரு "செட்அப்' என்பது மட்டும் தெரியாது! 

 

bookstore ad



சூரியனும், சந்திரனும் கூட அப்போதெல்லாம் நான் சொன்னபடி கேட்டது என்றே சொல்லலாம்! சூரிய, சந்திரர் மட்டுமா? ஒரு சில   நட்சத்திரங்களும் கூட! சினிமா நட்சத்திரங்கள்! நடிகைகள்! என் ஓட்டு எப்போதும் சூரியனுக்குத்தான்! கட்சி உறுப்பினராகவும் அந்த வட்டாரத்தில் ஒரு பொறுப்போடும் இருந்தேன். ஆனால் அப்போது ஆட்சியிலிருந்தது அந்தக் கட்சியில்லை!

அதனாலென்ன... அந்தக் கட்சியில் அரசியல்வாதிகளுடன் நெருக்கமென்றால், ஆளும் கட்சியில் அதிகாரிகளிடம் செல்வாக்கு!அதுவும் அந்த உயர் அதிகாரி! 'ஐயா'வின் மனைவியின் நட்பு என்னை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக்கிற்று! செருப்புக்கு பாட்டாவும் இரும்புக்கு டாட்டாவும் இருந்தது மாதிரி சாராயத்துக்கு சங்கர் என பேரெடுக்க முடிந்தது, தேவியின் தயவால்!

எனக்கு இதில் இன்னொரு சந்தோஷம் கூட உண்டு! சட்டத்தின் நீள அகலமான கதவுகள் எனக்காக திறந்துவிடப்பட்டதே... இதற்கு எந்தக் கமிஷனும் கேட்கவில்லை தேவி! ஆனால் வேறு ஒன்று கேட்டார்... எனக்கு அது சம்மதமானது; சந்தோஷமானதும்!  

முந்தைய பகுதி:

என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 

அடுத்த பகுதி :

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23

 

 

 

 

Next Story

இருவரின் பகை; நடுங்க வைத்த 17 கொலைகள்! 

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

madurai rowdyism in 20 years

 

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி வெள்ளைக்காளி தாயார் ஜெயக்கொடி, மனைவி திவ்யா ஆகிய இருவரும் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெயக்கொடியும், திவ்யாவும், காவல் துறையினர் வெள்ளைக்காளியை பொய்ப் புகார் கூறி என்கவுண்டர் செய்யத் திட்டமிடுகிறார்கள். மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்படி அழைத்துச்செல்லும்போது தப்ப முயன்றதாகக் கூறி போலீசார் என்கவுண்டர் செய்யவிருப்பதாகக் கூறினார்கள். அத்தோடு அவரைக் காப்பாற்ற வேண்டுமென நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.

 

இவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு 15 நாட்களுக்குப் முன் (செப்.4) பெங்களுரிலுள்ள கம்மனஹள்ளி சுக்சாகர் ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த வி.கே.குருசாமி என்பவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த வி.கே. குருசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளைக்காளியின் குடும்பத்தினர் திருச்சியில் பேட்டி கொடுக்கும்வரை தீவிர சிகிச்சையில்தான் இருந்தார் குருசாமி.

 

யார் இந்த வெள்ளைக்காளி, வி.கே. குருசாமி? இவர்களுக்குள் என்ன பகை?


காவல்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமியும், ராஜபாண்டியும். பிழைப்புக்காக மதுரை வந்தவர்கள். மதுரையிலேயே செட்டிலாகி விட்டார்கள். வி.கே.குருசாமி தி.மு.க.வில் சேர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவராகவும், ராஜபாண்டி அ.தி.மு.க.வில் சேர்ந்து மாநகராட்சி மண்டல தலைவராகவும் உயர்ந்தார்.

 

madurai rowdyism in 20 years
வி.கே. குருசாமி

 

கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாண்டி ஆதரவாளரான சின்னமுனுசாமி என்பவர் வி.கே.குருசாமிக்கு பெரும் குடைச்சலாக இருந்துள்ளார். எனவே கீரைத்துறையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரச்சனை பண்ணி, அதைப் பெரிதாக்கி சின்னமுனுசாமியை அக்டோபர் 30-ஆம் தேதி வி.கே,குருசாமியும் அவருடைய ஆட்களான பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமுர்த்தி, வழுக்கை முனுசு, கணுக்கண் முனியசாமி ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், சின்ன முனுசாமியின் தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைக்காளி, தன் அண்ணனைக் கொன்ற வி.கே.குருசாமியின் குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதற்கிடையில் வி.கே.குருசாமி ஆதரவாளரான வழுக்கை முனுசை, ராஜபாண்டி ஆதரவாளரான சப்பாணி முருகன் கொலை செய்கிறார்.

 

madurai rowdyism in 20 years
ராஜபாண்டி

 

இதற்கடுத்து இருதரப்பிலும் மாறி மாறி கொலைகள் நடந்தன. 2008-ஆம் ஆண்டு, வி.கே குருசாமி தரப்பில் மாரிமுத்து, ராமமூர்த்தி, 2013-ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியைக் கொன்றனர்.

 

2015-ஆம் ஆண்டு ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை குருசாமி தரப்பினர் போட்டுத்தள்ளினார்கள். 2016-ல் வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜாவை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் வெட்டிக் கொலைசெய்தனர்.

 

2017-ல் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் தொப்பி என்ற முனியசாமியை சாம்பலே கிடைக்காதவாறு எரித்துக்கொன்றனர். அதைத் தொடர்ந்து வி.கே.குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் கொலைசெய்தனர். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு மதுரை சிக்கந்தர்சாவடியில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் சுட்டுக் கொலைசெய்தனர். இதில் வெள்ளைக்காளி தப்பிவிட்டார். வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் வி.கே.குருசாமி வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தையே கொலை செய்ய முயல, வீட்டைப் பூட்டி போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீசார் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடிகளை வெளியேற்றி சிலரை கைதும் செய்தனர்.

 

madurai rowdyism in 20 years
வெள்ளைக்காளி

 

குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வெளியேவந்த குருசாமியும் மகன் மணிகண்டனும் ராஜபாண்டி தரப்பை எதிர்க்க ஆளில்லாததால் சென்னை, பெங்களூரு என்று தலைமறைவாக வாழத்தொடங்கினார்கள்.

 

பல்வேறு வழக்குகள் இருப்பதால் அதில் ஆஜராவதற்கு அடிக்கடி மதுரை வரும் குருசாமி, வழக்கம்போல் கடந்த செப்.2-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி, 3-ஆம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலமாக பெங்களூரு சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள்தான் அவரை இரண்டு காரில் பின்தொடர்ந்த ராஜபாண்டி தரப்பினர் பெங்களுரில் வைத்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணம் வெள்ளைக்காளியும் அவருடைய கூட்டாளிகளும்தான் என்று சொல்லப்படுகிறது.

 

கடந்த 20 ஆண்டுகளில் குருசாமி தரப்பில் 10 பேரும், ராஜபாண்டி தரப்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜ பாண்டி இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழி வாங்கும் பணியை தற்போது புழல் சிறையிலுள்ள வெள்ளைக்காளி முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வெள்ளைக்காளியை என்கவுன்ட்டரில் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவரது தாயும் மனைவியும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர். அதன் ஒரு அம்சமாகத்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஆகியவை நடந்தன.

 

"வருடக்கணக்கில் தொடரும் பழிக்குப் பழி தொடர் கொலைகளின் பின்னணியில் யார் இருப்பது என்று பார்த்து, அந்தக் கும்பலை சிறையில் தள்ள வேண்டும், அமைதி திரும்ப வேண்டும்' என்கிறார்கள் மதுரைவாசிகள்.

 

 

 

Next Story

13வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பிரபல பாடகரின் பகீர் வாக்குமூலம்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Bhojpuri singer misbehaved in 13yrs old girl

 

பீகாரைச் சேர்ந்தவர் போஜ்புரி பாடகர் அபிஷேக் என்ற பபுல் பிஹாரி. அவருக்கு வயது 21. இவர் யூட்யூப் சேனலும் நடத்தி வரும் நிலையில் அதை  27 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமியின் ஆடைகளற்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த அச்சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அச்சிறுமியிடம் கேட்ட பொது தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை சொல்லியுள்ளார். 

 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அப்பாடகரை கைது செய்தனர். பின்பு விசாரணையில், 2 வருடங்களுக்கு முன்பு பாடகர் அபிஷேக் ராஜீவ் நகர் என்ற பகுதியில் வசித்து வந்த போது 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் நட்பாக பழகிய அவர் ஆசை வார்த்தை கூறி ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்லியுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு அச்சிறுமியை புகைப்படமும் எடுத்துள்ளார். 

 

இந்த சம்பவத்தை அச்சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். பின்பு பாடகர் புகைப்படத்தை வெளியிட்டதால் இது வெளியில் தெரிந்துள்ளது. இது தொடர்பாக அப்பாடகர் மீது போக்சோ, ஐ.டி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.