பீகார் மாநிலத்தின் மலைப்பகுதியான தெற்கு பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு கடந்த 2000 ஆம் ஆண்டு ஜார்கண்ட் என்கிற மாநிலம் உருவாக்கப்பட்டது. கடவுளின் தேசம் கேரளா எனச் சொல்வது போல காடுகளின் மாநிலம் என ஜார்கண்ட் மாநிலத்தை அடையாளப்படுத்துகின்றனர். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம். ஜார்கண்ட் மாநிலத்தை சுற்றி கிழக்கு திசையில் மேற்குவங்கம், மேற்கு திசையில் உத்தரப்பிரதேசம், வடக்கு திசையில் பீகார், தெற்கு திசையில் ஒரிசா உள்ளது. மாநிலத்தில் 25 மாவட்டங்கள் இருந்தாலும் மாநிலத்தின் கால்வாசி மாவட்டங்கள் மேற்குவங்க மாநிலத்தை ஒட்டியுள்ளன. சாஹீப்காஞ்ச், பகூர், டும்கா, ஜாம்தாரா, தன்பாத், பொக்காரோ, ராஞ்சி, செராய்கேலா, ஜம்ஷெட்பூர், பூர்பிசிங்புரம் போன்ற மாவட்டங்கள் மேற்குவங்க மாநிலத்தின் எல்லையில் உள்ளன.
தங்கள் மாநில தலைநகரான ராஞ்சிக்கு போவதைவிட இவர்களுக்கு மேற்குவங்க மாநில தலைநகரான கொல்கத்தாவுக்கு செல்வது ஈஸி. ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சி, துணை தலைநகரமாக டும்காவை வைத்துள்ளனர். தொழில் நகரம் ஜாம்ஷெட்பூரில் இந்தியாவின் முதல் இரும்பு எஃகு தொழிற்சாலை நேரு ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. மாநிலத்தின் முக்கிய நகரங்கள் தன்பாத், ஹசாரிபாக், பொக்காரோ. நம்ம திருப்பூரை பனியன் நகரம் என அழைப்பது போல் பொக்காரோ நகரை ஸ்டீல் நகரம் என பெயர் வைத்து அழைக்கின்றனர். காரணம் ஆசியாவின் பெரிய இரும்பு எஃகு தொழிற்சாலை பொக்காரோவில் உள்ளது.
மலைகள் நிறைந்த மாநிலமல்ல, மலைகள் மீதே உள்ள ஒரு மாநிலம் ஜார்கண்ட். இந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுப்பது இயற்கை வளங்கள். சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அடுத்தபடியாக, அதாவது இந்தியாவில் கனிமவளங்கள் நிறைந்த மாநிலங்களில் இரண்டாவது மாநிலம் ஜார்கண்ட். இரும்பு, நிலக்கரி, யுரோனியம், பாக்சைட், மைக்கா, கிராஃபைட், நிலக்கரி, அலுமினியம் நிறைந்து இருப்பதால் கார்ப்பரேட்களின் வேட்டைக்காடு இந்த மாநிலம்.
இயற்கை வளங்களான தாதுக்களால் அரசுகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் பல லட்சம் கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியே உள்ளனர். மேற்குவங்கத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தை தொட்டுக்கொண்டு டெல்லி செல்கிறது தங்கநாற்கர சாலை. (தேசிய நெடுஞ்சாலை எண் 2) இந்த சாலை தான் ஜார்கண்ட் மாநிலத்தின் நல்ல சாலை. நகரப்பகுதிகளில் ஓரளவு நல்ல சாலைகள் உள்ளன. மற்றபடி மோசமான சாலைகளே. மாநிலத்தில் மொத்தம் 32,620 கிராமங்கள் உள்ளன. இதில் 9 ஆயிரம் கிராமங்களே பிரதான மாநில சாலைகளோடு இணைக்கப்பட்டுள்ளன. மற்ற கிராமங்களுக்கு முறையான சாலை வசதிகள் கூட கிடையாது என்பதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை.
எங்களை அடக்காதீர்கள், எங்களின் மண்ணில் எங்களை வாழவிடுங்கள் என்கிற போராட்டம் 1890களிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், பண்ணையார்களுக்கு எதிராகவும் தொடங்கிவிட்டது. போராட்டத்தின் முன்னணி தளபதியாக, தலைவராக, போர் வீரராக நின்றவர் ஒருவர். அவர்? இந்தியா முழுவதுமுள்ள பழங்குடியின மக்களால் கொண்டாடப்படும் தலைவர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள தலைவர்களின் புகைப்பட வரிசையில் உள்ள ஒரே பழங்குடியின தலைவர் இவர்தான். அவர்தான் பிர்சா முண்டா. பழங்குடியின மக்களின் தலைவராக இன்றளவும் பீகார், ஒரிசா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுபவர்.
ஜார்கண்ட், ஒரிசா, பீகாரில் இவர் தர்த்தி அபா (மண்ணின் மைந்தன்) என பழங்குடியின மக்களால் அழைக்கப்படுகிறார். 1875 நவம்பர் 15 ஆம் தேதி ராஞ்சி உலிகாட் கிராமத்தில் வாழ்ந்த சுக்ணா முண்டா - கர்மி ஹிட்டு முண்டாவுக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு முன்பு அக்கா சம்பா, அண்ணன் கோம்தா முண்டாவும், இவருக்கு பின் தஸ்கிர், தம்பி பாஸ்னா முண்டாவும் பிறந்தனர். அவர் பிறந்தபோது நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போதும் பீகார் சாதியவாதிகளால் நிறைந்த மாவட்டமாக இருந்தது. நில உரிமையாளர்களின் பண்ணை அடிமைகளாக மக்கள் இருந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் காடுகளை திருத்தி நிலங்களாக்கி விவசாயம் செய்து வந்தனர் பழங்குடியின மக்கள். காடுகளை நிலங்களாக்கக்கூடாது என பிரிட்டிஷ் அரசு வனச்சட்டத்தை உருவாக்கியது. இதனைப் பழங்குடியின மக்கள் எதிர்த்தனர். எங்கள் நிலத்தின் மீது எங்களுக்கு இல்லாத அக்கறையா? நாங்கள் மண்ணின் மைந்தர்கள். எங்கள் நிலத்தை நாங்கள் எப்படியும் பயன்படுத்துவோம் என்றனர். காடுகளின் விலை உயர்ந்த, தரமான மரங்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கண்களை உறுத்தியது.
பழங்குடியின மக்களுக்கு வட்டிக்கு பணம் தந்து அதை அடைக்க முடியாதவர்களிடம் அடித்து உதைத்து நிலத்தை வாங்கினர் ராயட்டுகள் என்கிற பண்ணையார்கள். அவர்கள் அந்த நிலங்களை ஆங்கிலேயர்களுக்கு குத்தகைக்கு விட்டனர். இன்றைய ஜார்கண்ட் மாநிலத்திலும் அன்றைய பீகார் மலைப்பகுதிகளில் இருந்த இயற்கை வளங்கள், விலை உயர்ந்த தரமான மரங்களை டன் டன்னாக வெட்டி தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்தனர். இதனை எதிர்த்த பழங்குடியின மக்களை நில உடைமையாளர்களை வைத்து அடித்து உதைத்து அடக்கினர். இதனை எதிர்த்து கோபமாகி ஆங்கிலேயர்களுக்கும் நில உடைமையாளர்களுக்கும் எதிராக கிளம்பியவர்தான் பிர்சா முண்டா. ஏழைகளின் கடைசி புகலிடம் நீதிமன்றம். அந்த நீதியும் ஆங்கிலேயர்களுக்கும் பணக்காரர்களுக்கும் சாதகமாக இருந்ததால் ஆயுதங்களாலேயே நமக்கான நீதியைப் பெற முடியும் என்றார் பிர்சாமுண்டா.
1890களில் இந்தியாவில் பஞ்சம் தலைவிரித்தாடியது. 15 வயதான பிர்சா முண்டா, எங்கள் நாட்டில் அமர்ந்துகொண்டு எங்கள் வயிற்றில் அடிக்காதே என முழங்கத் தொடங்கினார். எங்கள் நிலம் எங்களுக்கே என முழங்கினார். இதனால் அவரை ராதாதி பாபா அதாவது பூமியின் தந்தை என அழைத்த பழங்குடியின மக்கள் அவரின் பின்னால் திரண்டனர். பழங்குடியின இளைஞர்கள் அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டுக் கிடந்தனர். 1895 ஆம் ஆண்டு ஆங்கிலேய நிர்வாகத்துக்கு எதிராகவும், ஜமீன்தார்களுக்கு எதிராகவும் புரட்சிப் போராட்டம் நடைபெற்றது. பழங்குடியின மக்களுக்காக நடைபெற்ற முதல் போராட்டம். பழங்குடியின மக்கள் அவர் பின்னால் அணிதிரளவில்லை என்றால் கொல்லப்படுவார்கள் என்கிற தகவலால் 1985 ஆகஸ்ட் மாதம் பிர்சா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1987ல் வெளியே வந்தவர் ரகசிய கொரில்லா படையை உருவாக்கி காவல்துறை, காவல்நிலையங்களை தொடர்ச்சியாக தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடித்தனர். சில காவல்துறை அதிகாரிகளையும் கொலை செய்தனர். கொரில்லா முறையில் இருதரப்பு மீதும் தாக்குதல் நடத்தினார். இது உல்குலான் போராட்டம் என அழைக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்தபடி போராட்டம் மற்றும் கொரில்லா தாக்குதல் நடத்திய பிர்சாவின் தலைக்கு 500 ரூபாய் அறிவித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். பிர்சா தலைமையிலான படையை ஒழிக்க இந்திய பிரிட்டிஷ் படை 150 போலிஸாரை துப்பாக்கியுடன் களத்துக்கு அனுப்பியது. தும்பரி மலையில் இருதரப்புக்கும் சண்டை. பிர்சா தலைமையிலான படை தோற்கடிக்கப்பட்டதால் சிங்பம் மலைக்கு தப்பிச் சென்றார் பிர்சா. பிரிட்டிஷ் படை விரட்டிச் சென்றது. இறுதியில் ஜாம்கோபாய் காட்டில் வைத்து அவரை கைது செய்தது.
1900 மார்ச் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் இருந்த 450 பழங்குடியின மக்களும் கைது செய்யப்பட்டனர். அனைவர் மீதும் கொடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மட்டுமல்ல, பழங்குடியினப் பகுதியில் பிர்சாவுக்கு ஆதரவாக இருந்த பழங்குடியின மக்கள், இளைஞர்கள் மீது கடுமை காட்டியது அன்றைய பிரிட்டிஷ் காவல்துறை. இதனால் அவர்கள் காடுகளுக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.
1900 ஜூன் 9 ஆம் தேதி ராஞ்சி சிறையில் தனது 25வது வயதில் மரணமடைந்தார். காலரா நோயால் இறந்தார் என்றது ஆங்கிலேய அரசு. அதன்பின் 7 ஆண்டுகள் கடந்து சோட்டாநாக்பூர் சட்டம் 1908 ஆம் ஆண்டு கொண்டு வந்தனர். பழங்குடியின நிலத்தினை பிற சமூகத்தினர் வாங்க முடியாது என்று அச்சட்டம் சொன்னது. இப்போதும் அந்த சட்டம் சில மாற்றங்களுடன் நடைமுறையில் உள்ளது. சதுரங்க வேட்டை பகுதியில் இதற்கு எதற்கு இவ்வளவு பெரிய வரலாறு என நினைக்கலாம். காரணத்தோடுதான் இந்த வரலாறு சொல்லப்பட்டது.
பிர்சா முண்டாவை சிறையில் மரணிக்க வைத்த பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிய பின்பும் பழங்குடியின மக்கள் மீது கவனத்தை திருப்பவில்லை. அந்த பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் சமூக முன்னேற்றம் போன்ற எதிலும் பீகார் மாநிலம் கவனம் செலுத்தவில்லை. ரயில் பாதைகள் மட்டும் அமைக்கப்பட்டன. அதற்கு காரணம் இயற்கை தாதுக்களை வெட்டி எடுத்துச் செல்ல ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. ரயில் பாதைகள் பழங்குடியின மக்களை எப்படி மாற்றின? சட்டவிரோத காரியங்களில் எப்படி ஈடுபட்டார்கள்?, ஜம்தாரா மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள்?
வேட்டை தொடரும்……….