ஜனாதிபதி பார்க்கின் அராஜக அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் கொந்தளித்திருந்தனர். உரிமைகள் மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்துவோர் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டனர். பார்க் கொல்லப்பட்ட பிறகாவது தென்கொரியாவில் ஜனநாயகம் மலரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
சோய் க்யு-ஹா
ஆனால், ஜனாதிபதி பார்க்கை எதற்காக கொலை செய்தார்கள் என்று அறிவதற்கு முன்னரே, பிரதமராக இருந்த சோய் க்யு-ஹா தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். பார்க் உருவாக்கியிருந்த புதிய அரசியல் சட்டத்தின்படி அவர் ஜனாதிபதி பொறுப்புகளை ஏற்றார். தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும், பார்க் உருவாக்கிய யூஷின் அரசியல் சட்டத்தை ஒழித்துவிட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஜனநாயகபூர்வமான தேர்தலை நடத்த உறுதி அளித்தார்.
ஆனால், டிசம்பர் மாதத்தில் ராணுவ மேஜர் ஜெனரல் சுன் டூ-ஹ்வானும் அவருடைய கூட்டாளிகளும் சோய் அரசுக்கு எதிராக ராணுவ கலகத்தில் ஈடுபட்டனர். அவர்கள், ராணுவத்தின் தலைமைத் தளபதியை நீக்கிவிட்டு, 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
அந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மேஜர் ஜெனரல் சுன் மற்றும் அரசியல்வாதிகளின் நிர்பந்தம் காரணமாக, கொரியா மத்திய உளவுத்துறை தலைவராக சுன் நியமிக்கப்பட்டார். உடனே மக்கள் அரசுக்கான அனைத்து அம்சங்களையும் சுன் கடாசினார். நாட்டின் ஆட்சியாளராக அவரே மாறினார். தென்கொரியாவுக்குள் வடகொரியா கலவரத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை மூலமாக செய்தியைப் பரப்பினார். அதைத்தொடர்ந்து, ராணுவச்சட்டத்தை அமல்படுத்தினார். ராணுவத்தை நாட்டின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பினார். ராணுவச் சட்டத்தின்படி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது. ராணுவ சர்வாதிகாரத்தின் தொடக்கமாக இது கருதப்பட்டது.
சுன் ராணுவச்சட்டத்தை பிறப்பித்து, ராணுவத்தை நகரங்களுக்கு அனுப்பியது மக்களுக்கு பிடிக்கவில்லை. தங்கள் நகரங்களில் ராணுவம் ரோந்து சுற்றியது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. க்வாங்ஜு நகர மக்கள் ஒரு ஜனநாயக இயக்கத்தை தொடங்கினார்கள். அந்த இயக்கத்தை உடனடியாக ஒடுக்கும்படி சுன் உத்தரவிட்டார். அந்த நகருக்கு கூடுதல் ராணுவத்தினரையும், பீரங்கிகளையும், வானிலிருந்து சுடும் ராணுவ ஹெலிகாப்டர்களையும் அனுப்பினார். முழுபலத்தையும் பயன்படுத்தும்படி ராணுவத்துக்கு உத்தரவிட்டார். அடுத்த சில நாட்கள் கொடூரமான ரத்தக்களறிக்கு காரணமாகியது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். க்வாங்ஜு கொலைகாரன் என்று சுன் அழைக்கப்பட்டார்.
மனைவியுடன் சுன் டூ-ஹ்வான்
இந்தப் புரட்சிக்கு சுன் டூ-ஹ்வானின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான கிம் டாயே-ஜங்தான் காரணம் என்று சுன் குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்து அவரைக் கைது செய்து ராணுவநீதிமன்றத்தில் மரணதண்டனை விதித்தார் சுன். அவருக்கு கருணை காட்டும்படி போப் இரண்டாம் ஜான்பால் தென்கொரியா அரசுக்கு கடிதம் எழுதினார். அமெரிக்காவும் போப் கோரிக்கையை ஆதரித்தது. இதையடுத்து கிம்மின் மரணதண்டனை 20 ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்தக் கலவரங்களுக்கு மத்தியில் 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்கொரியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க ராணுவ ஜுந்தா அமைக்கப்பட்டது. உளவுத்துறை தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய சுன் ஒரு உறுப்பினராக மட்டுமே இருந்தார். ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி தன்னை ராணுவ தளபதியாக அறிவித்துக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, பொம்மையாக அதுவரை இருந்த ஜனாதிபதி சோய் 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதாவது சுன் ஜனாதிபதியாக வழிவிட்டார். ஒற்றுமைக்கான தேசிய மாநாட்டு அமைப்பின் 2525 உறுப்பினர்களில் ஒரு ஓட்டு மட்டுமே செல்லாததாக அறிவிக்கப்பட்டு, மற்ற அனைவரும் சுன் ஜனாதிபதியாக ஆதரவு தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி சுன் முறைப்படி ஜனாதிபதியானார். சமூக அமைப்பை சுத்தப்படுத்துவதாக அறிவித்த சுன், சுமார் 42 ஆயிரம் பேரை எந்த காரணமும் சொல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கொன்று குவிக்கப்பட்டனர். 1980 ஆகஸ்ட்டிலிருந்து 1981 ஜனவரி வரை ஆறு மாதங்களில் 60 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அச்சத்தை விதைத்தது. அதாவது சுன் சர்வாதிகாரியானார்.
தென்கொரியாவை சர்வாதிகார நாடாக மாற்றியதை அன்றைய ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு ஏற்கவில்லை. உடனே, தனது அரசு அணு ஆயுத உற்பத்தியில் அக்கறை செலுத்தாது. 180 கிலோ மீட்டர் தூரம் 453 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை மட்டுமே தயாரிக்கும் என்று சுன் அரசு அறிவித்தது. இதை ரீகன் அரசு ஏற்றது. சுன் முழுமையான சர்வாதிகாரியானார். தென்கொரியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒழித்தார். ஜனநாயக நீதிக் கட்சி என்ற பெயரில் சொந்தக் கட்சியைத் தொடங்கினார். கொல்லப்பட்ட ஜனாதிபதி பார்க்கைக் காட்டிலும் கூடுதல் அதிகாரங்களை தன்னிடம் குவித்துக் கொண்டார்.
சர்வாதிகாரி சுன் நடவடிக்கைகளை பொறுக்காத வடகொரியா சுன்னை கொல்ல திட்டம் வகுத்ததாக கூறப்பட்டது. 1983 ஆம் ஆண்டு சுன் பர்மா தலைநகர் ரங்கூன் சென்றார். 1947 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட தலைவர் ஆங் சான் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அவர் சென்றபோது, நினைவிடத்தின் கூரையில் பொருத்தப்பட்ட மூன்று சக்திவாய்ந்த குண்டுகளில் ஒன்று வெடித்தது. இதில் தென்கொரியாவின் நான்கு அமைச்சர்கள், சுன்னின் ஆலோசகர்கள் 14 பேர், நான்கு பர்மா அதிகாரிகள் உயிரிழந்தனர். சுன் போக்குவரத்து சிக்கலில் சிக்கி சில நிமிடம் தாமதமாக வந்ததால் உயிர்பிழைத்தார். இந்தக் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் என்று இருவர் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் தன்னை வடகொரியா ராணுவ அதிகாரி என்று ஒப்புக்கொண்டார். சுன் வருகைக்கு சில நிமிடங்கள் இருக்கும் நிலையிலேயே, திட்டமிட்ட நேரத்துக்கு முன்னதாக அலாரம் அடிக்கப்பட்டதால், தவறுதலாக முன்கூட்டியே குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
சர்வாதிகாரி சுன் ஆட்சிக்காலத்தில் தென்கொரியா மக்கள் பணம் அளவுகடந்து கொள்ளையடிக்கப்பட்டது. மக்கள் உரிமைகளை இழந்து, பொருளாதாரம் சீர்குலைந்து வறுமை நிலைமைக்கு தள்ளப்பட்டனர். உயிருக்கு அஞ்சிய நிலைபோய், உயிரைக் கொடுத்தேனும் தங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்த மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் சுன் ராஜினாமா செய்ய முடிவெடுத்தார். அவர் தனது கட்சிப் பதவியை ரோஹ் டாயே-வூவிடம் ஒப்படைத்தார். பின்னர் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற நேர்மையான தேர்தல் என்று இதை குறிப்பிடுகிறார்கள். அந்தத் தேர்தலில் ரோஹ் டாயே-வூவை எதிர்த்து, கிம் யங்-சாம் மற்றும் கிம் டாயே-ஜங்கும் போட்டியிட்டனர். இவர்களில் கிம் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டார். இருவரும் வாக்குகள் 28 மற்றும் 27 சதவீதம் என்று பிரித்ததால் குறைந்த வாக்குகளைப் பெற்றாலும் ரோஹ் வெற்றிபெற்றார். 1988 ஆம் ஆண்டு சுன் தனது பதவியை ராஜினாமா செய்து ரோஹிடம் ஒப்படைத்தார்.
ஆனாலும் சர்வாதிகாரிகளுக்கு அமையும் இறுதிக் காலத்தைப் போலவே சுன்னுக்கும் அமைந்தது. புதிய அரசு அமைந்த ஒரே ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பெரும்பான்மை இழந்தது. சுன் மீது விசாரணை நடைபெற்றது. க்வாங்ஜு புரட்சியை ஒடுக்க சுன் மேற்கொண்ட கொடூரமான ராணுவ நடவடிக்கைக்காக அவர் மீது குற்றம் சாட்டியது. தனது கொலைச்செயலுக்கு மன்னிப்புக் கோருவதாக பகிரங்கமாக மக்கள் மத்தியில் அறிவித்தார் சுன். தனது சொத்துக்கள் முழுவதையும் நாட்டுக்கே ஒப்படைப்பதாக கெஞ்சினார். இதையடுத்து பயேக்டம்ஸா என்ற புத்தர் ஆலயத்தில் அவர் தனது நடவடிக்கைகளுக்காக வேலை செய்ய உத்தரவிடப்பட்டார். 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதிதான் வீடு திரும்பினார்.
கிம் யங்-சாம்
அதன்பிறகும் அவருக்கு நிம்மதி கிடைக்கவில்லை. 1993 ஆம் ஆண்டுத் தேர்தலில் கிம் யங்-சாம் வெற்றிபெற்று ஜனாதிபதியானார். சர்வாதிகாரி சுன் மற்றும் அவருக்கு அடுத்து பொறுப்பேற்ற ரொஹ் டாயே-வூ இருவரும் தென்கொரியா மக்களின் பணம் 37 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு கொள்ளையடித்திருப்பதாக புதிய குற்றச்சாட்டை சுமத்தினார். கிம் தனது சொந்த ஊழல்களை மறைப்பதற்காகவே இந்த புதிய குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கிடையே, 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி சர்வாதிகாரி சுன் நடத்திய ராணுவ கலகம், க்வாங்ஜு புரட்சியை ஒடுக்க மேற்கொண்டு கொலைகாரச் செயல் ஆகியவற்றுக்கு தண்டனை வழங்கியே தீரவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இதையடுத்து, சுன் மற்றும் 16 பேர் சதிக் குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை முடிவில் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
(இன்னும் வரும்)
முந்தைய பகுதி :
கொல்லப்பட்ட முதல் தென்கொரிய ஜனாதிபதி!!! கொரியாவின் கதை 17
அடுத்தபகுதி :
தென்கொரியாவின் நெல்ஸன் மண்டேலா -கொரியாவின் கதை #19