தேவியுடன் சேர்ந்து கூத்தடித்தேன். என்னிடம் பெண் கேட்டு வரும் ஸ்திரிலோலர்களில் அதிக திடம் அதிக சக்திவாய்ந்த ஆசாமிகளை அனுப்பி வைத்தேன்! அவளுக்கும் பரம திருப்தி. அந்த வாட்டசாட்டன்களிடமிருந்து நமக்கும் வசூல்! ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். சென்னையிலிருந்த இளம் நீக்ரோக்கள் நெல்சன் மண்டேலாவை விட அதிகம் நேசித்தது அந்த பெண்மணியைத்தான்!
பெரியார் நகரில் புதுசாக வீடு கட்டி, கிரகப்பிரவேசத்துக்கு அத்தனை முக்கிய போலீஸ் அதிகாரிகளும் ஆஜர் ஆகியிருந்தனர். ரிப்பன் வெட்டி வீட்டைத் திறந்து வைத்தது டி.எஸ்.பி.தங்கய்யாதான்! நம்ப அம்மையார் குத்து விளக்கு ஏற்றி வைக்க ஏகதடபுடல். சங்கரது சாராய வியாபாரத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்தது போலவே கிரகப்பிரவேசத்துக்கும் தவறாமல் கலந்து கொண்டனர் போலீஸார்!
அவர்களைச் சொல்லி தவறே இல்லை. காவல்துறை என்று பெயரே தவிர, யாருக்குக் காவல் என்று சொல்லவில்லையே? சாராய வியாபாரிகளுக்கும், மாமாக்களுக்கும் நாம்தான் காவல் காக்க வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! நன்றி மறக்காத காவல் துறையினர்!
கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் எல்லாமும் வீடியோவில் பதிவாயிற்று. எனக்கு ஒரு கலர் கனவு இருந்தது! என்றைக்காவது சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைய வேண்டும் என்ற ராஜ கனவு! அதற்கான அவ்வளவு தகுதிகளும்(!) கைவசம் என்றாலும் நேரம்தான் வாய்க்கவில்லை.
எப்படியும் தேர்தல் சமயத்தில் உபயோகப்படும் என்றே எல்லா 'பெரிய மனிதர்களோடும்' பழகினேன்! பெரிய மனிதர்களின் அழுக்கு அந்தரங்கங்களுக்கு- கறுப்பு சிந்தனைகளுக்கு- பயன்பட்டது என் நீலப்பட்டறை! பிற்பாடு தேர்தல் சமயம் அரசியல் வட்டாரத்தில் என் செல்வாக்கைக் காட்டுவதற்காகவே பூரா வி.ஐ.பி.களையும் அதிகாரிகளையும் விழாவுக்குக் கூப்பிட்டேன். வீடியோவில் அவர்களை விழ வைத்தேன். தேர்தல் வருமுன் நான் மட்டும் விழாமல் இருந்திருந்தால் தேர்தல் வெற்றி விழாவும் நடத்தியிருப்பேன்!
அம்மையாரிடம் விளையாடி விட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். வாசலில் ஜீப் ஒன்று டயர் தேய வந்து நின்றது. கான்ஸ்டபிள்கள் ரெண்டு பேர் இறங்கி வந்தனர். புருவத்தில் கேள்வி முடிச்சு! 'பெரிய அய்யா' உடனே அவனைக் கூட்டி வர சொன்னாராம். தெரிவித்தார்கள்! எனக்குத் தூக்கி வாரிப் போட்டது!
'பெரிய அய்யா' என்பது அந்த அம்மையாரின் கணவர்! இதுவரை அவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை; காவல்துறையில் அந்த ஒருவரை மட்டும் நெருங்கவேயில்லை நான்! அவர் மனைவியுடன் பழகி வரும்போது அவரை சிநேகிக்க சங்கடமாயிருந்தது. ஒரு விதமான இடைவெளியை அடைகாத்து வந்தேன், கூச்சம் காரணமாக. அவரிடம் ஆக வேண்டிய காரியங்களை அவள் மூலமாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.
இப்போது அவர் கூப்பிட்டார் என்றதும் அதிர்ச்சி! எதற்குக் கூப்பிட்டிருப்பார்! அவர் மனைவியிடம் உள்ள உறவு தெரிந்திருக்குமோ? அதை விசாரிக்கப் போகிறாரோ? மனசுள் பயமுயலொன்று குறுகுறுவென ஓடிற்று. முதுகுத் தண்டில் ஐஸ் நதி வருடினது மாதிரி ஜில்லிட்டது.
முந்தைய பகுதி :
அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22
ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்... மறைக்கப்பட இருந்த பெரும் உண்மைகளை சிறை வரை சென்று மீட்ட கதை... விறுவிறுப்பான முழு புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்...