தான் சந்தித்த அதிர்ச்சியான வழக்கு ஒன்று குறித்து நம்மிடம் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.
குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேர் சேர்ந்து நம்மிடம் வந்தனர். தங்களுடைய மருமகள் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறினர். சந்தோஷமான விஷயம் தானே என்றேன். கல்யாணமாகி ஒரு மாதம் தான் ஆகிறது, ஆனால் டெஸ்டில் மூன்று மாத கர்ப்பம் என காண்பிக்கிறது என்றனர். அவர்களுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. எங்களுடைய விசாரணை தொடங்கியது. உடல் எடையைக் குறைப்பதற்காக அந்தப் பெண் ஜிம்மிற்கு சென்றபோது பயிற்சியாளரோடு தொடர்பு ஏற்பட்டது தெரிந்தது.
அந்தத் தொடர்பின் மூலம் தான் அந்தப் பெண் கர்ப்பம் ஆனார் என்பது தெரிந்தது. குடும்பத்தினரிடம் இதை நாங்கள் தெரிவித்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி. மருத்துவ ரீதியாக இதுகுறித்து கண்டறிவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு நாங்கள் அறிவுரைகள் வழங்கினோம். எங்களாலேயே ஜீரணிக்க முடியாத வழக்கு அது. உண்மையை அவர்களிடம் நாங்கள் மெதுவாகத்தான் கூறினோம்.
வழக்குக்காக நம்மிடம் வருபவர்கள் ஆர்வக்கோளாறாக இருந்தாலும் எங்களுடைய விசாரணை முழுமையாக முடிந்த பிறகு தான் அவர்களுக்கு விவரங்களை நாங்கள் வழங்குவோம். குழந்தைகளை ஜிம்முக்கு அனுப்பும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அங்கிருக்கும் பயிற்சியாளர்களுக்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு பக்கம் கல்யாணம் ஆனவரும் இன்னொரு பக்கம் கல்யாணம் ஆகாதவரும் இருக்கும்போது சிக்கல் வருகிறது. பெற்றோர் செய்யும் தவறுகளால் குழந்தைகள் தான் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளின் நிலைமை குறித்து சிந்திக்காமல் பலர் இன்று விவாகரத்து பெற்றுச் செல்கின்றனர்.