குழந்தைகளை சரியாக ட்ரீட் செய்யாத பெற்றோரின் கதை குறித்து மனங்களும் மனிதர்களும் தொடரின் வழியே ஜெய் ஜென் விளக்குகிறார்.
ஒரு நடுத்தர வயது கணவன் மனைவி வாடிய முகத்துடன் நம்மிடம் வந்தனர். நாங்கள் எங்களுடைய குழந்தையைக் கொலை செய்துவிட்டோம் என்று அவர்கள் கூறினர். எனக்கு அதிர்ச்சி. என்னால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. தங்களுடைய குழந்தை அனைத்திலும் நம்பர் ஒன்னாக வர வேண்டும் என்று தாங்கள் விரும்பியதாக அவர்கள் கூறினர். அதனால் குழந்தையை 24 மணி நேரமும் கவனித்து, ஏதாவது குறையை சுட்டிக் காட்டிக்கொண்டே இருந்தனர். அவர்களுடையது பெண் குழந்தை.
ஒருநாள் காலை அந்தக் குழந்தை தற்கொலை செய்துகொண்டு இறந்தது. குழந்தை உண்மையில் எதனால் இறந்தது என்பது தெரியவில்லை. ஆனால் இவர்கள் செய்த டார்ச்சரால் தான் குழந்தை இறந்திருக்கும் என்று இவர்கள் நினைத்தனர். குழந்தை இறந்து ஆறு மாதங்கள் கழித்து குற்றவுணர்வில் தான் அவர்கள் நம்மிடம் வந்தனர். இப்போது வீட்டில் அவர்கள் பேசுவது என்பதே குறைந்துவிட்டது. குழந்தை தங்களால் தான் இறந்தது என்கிற உணர்வு இனி அவர்களை வாழ விடுமா என்கிற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது.
மாற்ற முடியாதவற்றை ஒப்புக்கொள்ளும் மனநிலை மனிதர்களுக்கு வேண்டும். குழந்தையின் இறப்பு இனி மாறப் போவதில்லை என்பதை ஒருகட்டத்தில் அவர்கள் உணர்ந்தனர். தாங்கள் தான் அவளைக் கொன்றுவிட்டோம் என்கிற உணர்வு தான் தங்களை பாதிக்கிறது என்று அவர்கள் கூறினர். தங்களுடைய பெண் நன்றாக மார்க் எடுக்க வேண்டும், சமுதாயம் அவளை மதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பல்வேறு வகைகளில் மனரீதியாக அவளை அவர்கள் துன்புறுத்தியிருக்கின்றனர். அந்த வயதிலேயே சமுதாயத்துக்கு அவள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று அதீதமாக அவர்கள் நினைத்தனர்.
மகளின் இறப்புக்குப் பிறகு குறை சொல்வதைத் தாங்கள் நிறுத்திவிட்டதாக அவர்கள் கூறினர். ஒரு இறப்புக்குப் பிறகு தான் அவர்களிடம் இந்த மாற்றம் நிகழ்ந்தது. அதேபோல் குழந்தையைத் தாங்கள் தான் கொன்றுவிட்டோம் என்கிற எண்ணத்தையும் அவர்களால் மாற்றிக்கொள்ள முடியும் என்று கூறினேன். தங்களைப் போல் மற்ற பெற்றோர் இருக்கவே கூடாது என்று அவர்கள் கூறினர். மாற்ற முடியாததை ஒப்புக்கொள்வது தான் புத்திசாலித்தனம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். இறுதியாக, புத்தக வாசிப்பையும் அவர்களுக்கு நான் பரிந்துரைத்தேன்.