Skip to main content

சேர்ந்து வாழ்வோம்; திருமணம் வேண்டாம் என்ற ஜோடி - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 16

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

 jay-zen-manangal-vs-manithargal- 16

 

லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழும் ஜோடிகளுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்து ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்

 

மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்தாலும் இந்த சமூகம் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் ஜோடிகளை நோக்கி தினமும் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ஜோடிகள் என்னிடம் கவுன்சிலிங் வந்தார்கள். இதை கவுன்சிலிங் என்று சொல்வதை விட ஆரோக்கியமான விவாதமாக எடுத்துக் கொண்டேன்.

 

கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள் சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுக்கிறார்கள். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் முடிவெடுக்கிறார்கள். சின்ன சின்ன செல்லச் சண்டைகள், கோவங்களோடு ஆனால் பிரிதல் இல்லாமல் நன்றாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் உறவுகள், நட்புகள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

 

நாங்க மகிழ்ச்சியாக இருக்கிறோம். உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார்கள். யாருக்கும் பதில் சொல்ல முடியாவிட்டாலும் கேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த ஜோடிகளுக்கு மனநெருடலும் சிக்கலும் உருவாகிறது. நிறைய பயணம், புதிய விசயங்களை தெரிந்துகொள்ளுதல் என்று அழகான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இரண்டு விசயத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.

 

திருமணம் என்பது சமூகத்திற்கு நான் இவரோடு வாழ்வேன் என்று உறுதியேற்பதாகும். குழந்தை என்பது பொதுப்பார்வையோடு அணுக எங்களுக்கு தெரியவில்லை. எனவே திருமணம் செய்துகொள்ளவில்லை. குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனாலும் ஏன் கேள்வி கேட்கிறார்கள் என்பதைத்தான் அவர்களுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை.

 

உறவுகளை, நட்புகளை உதாசீனப்படுத்த முடியாது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவையெல்லாம். ஆண்டாண்டு காலமாகவே கேட்கப்பட்டு பழக்கப்பட்டவை இவை. ஒரு நாள் இதில் யாராவது தீ வைப்பார்கள், அந்த வார்த்தைகள் சாம்பலாகிப் போகும். அன்றோடு நிறுத்தப்படும். அதுவரை யாராவது கேட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். தவிர்க்கவே முடியாது.

 

அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் வாழ முடியும். அதனால் வாழட்டுமே. நமக்கான வாழ்க்கையை நாம் வாழ்வோம் என்ற நிலையை வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள மக்கள் பழக ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நாம்தான் இன்னமும் பல அடிப்படைவாதங்களுக்குள் அடைபட்டுக் கிடக்கிறோம். மீண்டு வரத்தான் வேண்டும். வருவோம்.