Skip to main content

ஹார்மோன் மாற்றம் சொல்லித்தர வேண்டும் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை : 05

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

 parenting-counselor-asha-bhagyaraj-advice-05

 

ஹார்மோன் மாற்றங்களால் குழந்தைகளுக்கு உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பெற்றோர்களுக்கு புரிதல் வேண்டும் என்கிறார் குழந்தை வளர்ப்பு ஆலோசனை நிபுணர் ஆஷா பாக்யராஜ், இது குறித்து தான் கையாண்ட ஒரு குழந்தையைப் பற்றியும் அதற்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றியும் நம்மிடையே விவரிக்கிறார்.

 

ஏழாம் வகுப்பு படிக்கும் பையன், தன்னுடன் படிக்கும் நண்பனின் வீட்டிற்கு போயிருக்கிறான், இவன் போய் வந்ததும் அந்த வீட்டில் உடைகள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் ஆடைகள் எல்லாம் களைந்து இருந்திருக்கிறது. அதைக் கவனித்த நண்பனின் அம்மா பையனின் அம்மாவிடம் எடுத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில நாட்கள் கழித்து அடிக்கடி தன்னுடைய அறைக்கதவை அந்த பையன் தாழ்ப்பாள் இட்டுக் கொள்கிறான் என்பதை கவனித்திருக்கிறார்கள்

 

ஒரு நாள் அந்த அறை ஜன்னலின் வழியே பார்த்த போது தன்னுடைய அம்மாவின் உள்ளாடைகளை எடுத்து போட்டு பார்த்திருக்கிறான். அவனை அந்த அம்மா காயப்படும்படி அடித்திருக்கிறார்கள். இது போல் இனிமேல் செய்யக்கூடாது என்றிருக்கிறார்கள் ஆனால் அதையே அவன் தொடர்ந்து செய்திருக்கிறான். ஆண் பெண்ணாக மாறுவதும், பெண் ஆணாக மாறுவதும் எந்த வயதில் வேண்டுமானாலும் ஹார்மோன் மாற்றத்தால் நிகழலாம். மற்றவர்களுக்கு சரியாக தெரியாவிட்டாலும் பெற்றோர்களுக்கு மாற்றம் தெரியவரும்.

 

ஆனால் இந்த ஆண் குழந்தைக்கு பெண்ணாக மாறப்பிடிக்கவில்லை. பெண்களின் உள்ளாடைகளைப் போட்டுப் பார்க்க பிடித்திருக்கிறது. இது குறித்து அந்த குழந்தையிடம் பேசிய போது எனக்கு அந்த உள்ளாடையிலிருந்து வருகிற வாசனை பிடித்திருக்கிறது. அதனால் அதைப் போட்டுப் பார்க்கவும் பிடித்திருக்கிறது என்றான். இதே போன்று வெளிநாட்டிலும் ஒரு குழந்தைக்கு மாதவிடாயின் போது வெளியேறுகிற திரவத்தின் வாசனை பிடித்திருப்பதாக சொல்லியிருப்பது கேஸ் ஸ்டடியில் படித்திருக்கிறோம்.

 

எனவே இந்த குழந்தையிடம் பேசி பெண்களின் மேக்கப் பொருட்களெல்லாம் பிடித்திருக்கிறதா என்று கேட்டால் பிடிக்கவில்லை. ஆனால் உள்ளாடைகளைப் போட பிடித்திருக்கிறது என்றதால் பெற்றோரிடம் சொல்லி புதிய பெண்ணின் உள்ளாடை வாங்கி கொடுத்தால் போட்டுக் கொள்ள பிடிக்கவில்லை என்றிருக்கிறது அந்த குழந்தை. பிறகு பெண்கள் பயன்படுத்திய உள்ளாடைகளைப் போடுவதால் என்ன நோய்கள் வரும் என்பதையும் மாதவிடாய் திரவம், வெள்ளைப்படுதல் மூலம் உள்ளாடைகளில் பரவும் நோய்க்கிருமிகள் குறித்து தொடர்ச்சியாய் வீடியோ ஆதாரத்துடன் சொன்னதும் அந்த குழந்தை புரிந்து கொண்டு அதற்கு பிறகு பெண் உள்ளாடைகளைப் பயன்படுத்துவதில்லை.

 

ஹார்மோன் மாற்றங்கள் குறித்து நமது குழந்தைகளிடையே பெற்றோர் பேசியே ஆகவேண்டும். பெண்கள் பருவமடைகிறார்கள் என்றால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வளர்கிறது என்பதையும், ஆண்கள் என்றால் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் வளர்கிறது என்பதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அப்போது தான் எதிர்ப்பாலின ஈர்ப்பு பற்றிய புரிதலுக்கு அந்த குழந்தைகள் வரும்.  குழந்தைகளின் தவறான நடவடிக்கையை கவனிக்கிற பெற்றோர் உடனடியாக அழுது புலம்பக் கூடாது, குழந்தைகளை திட்டுவது, அடிப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. குழந்தைகளுக்கு கவுன்சிலிங் தேவைப்படும் போது பெற்றோருக்கும் தேவைப்படுகிறது.