Skip to main content

சர்ச்சையானது தோனியின் கருத்து!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

dhoni

 

இளம் வீரர்கள் குறித்து தோனி கூறிய கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13 -ஆவது ஐ.பி.எல் தொடரின் 37-ஆவது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி, 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 30 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். பின்னர் 126 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது, நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி பெற்ற 7-ஆவது தோல்வியாகும். இதன்மூலம், சென்னை அணியின் 'அடுத்த சுற்று' வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 

 

போட்டியின் முடிவில் பேசிய தோனியிடம், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தோனி, "மூத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல், இளம் வீரர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய அளவிலான உத்வேகத்துடன் அவர்கள் இல்லை. இனி வரவிருக்கும் போட்டிகளில் அவர்களுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்படும். தற்போது அவர்கள் மீது எந்த நெருக்கடியும் இல்லை. அவர்கள் களமிறங்கி அவர்களது முழு ஆட்டத்தையும் வெளிப்படுத்தலாம்" என்றார். தோனியின் இந்தக் கருத்தானது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

 

அணித் தேர்வில் கவனம் செலுத்தாதது, சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்தது, மூத்த வீரர்களின் நிலையான ஆட்டமின்மை என்பது போன்ற பல காரணங்கள் இருக்கையில், இளம் வீரர்கள் மீதான இந்த விமர்சனம் ஏன் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.