டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் கே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில் இந்தியக் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 4 டெஸ்ட், 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் சில தினங்களுக்கு முன்னால் வெளியானது. இவ்வீரர்கள் தேர்வு குறித்து பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஐ.பி.எல் போட்டிகளின் பங்களிப்பை அடிப்படையாக வைத்து டெஸ்ட் போட்டிகளுக்கான அணியைத் தேர்வு செய்வது தவறான முன் உதாரணமாகிவிடும். குறிப்பாக கடந்த கால டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒருவரை (கே.எல்.ராகுல்) ஐ.பி.எல் போட்டிகளின் ஆட்டத்தை வைத்துத் தேர்வு செய்வது, ரஞ்சி தொடர்களில் விளையாடி வரும் வீரர்களின் உத்வேகத்தைக் குறைத்துவிடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.