டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பி.வி. சிந்து வெண்கலம் வென்றுள்ளார். மேலும், பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியா சார்பாக பங்கேற்ற அசாமின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வெண்றுள்ளார்.
இந்தநிலையில், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் (57 கிலோ) இந்தியாவின் ரவிக்குமார் தஹியா, கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
இதுவரை இந்த ஒலிம்பிக்கில் மகளிர் மட்டுமே இந்தியாவிற்குப் பதக்கம் வென்றுள்ள நிலையில், முதல்முறையாக ஆடவர் பிரிவில் பதக்கம் உறுதியாகியுள்ளது. இந்த ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தின் இறுதிப் போட்டி நாளை (05.08.2021) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஆண்கள் ஃப்ரீஸ்டைல் (86 கிலோ) மல்யுத்த போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரர் தீபக் புனியா, அமெரிக்க வீரர் டேவிட் மொரிஸிடம் தோல்வியடைந்தார். இருப்பினும், அவர் வெண்கலம் வெல்ல வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.