16 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 182 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக க்ரீன் 41 ரன்களை எடுத்தார். லக்னோ அணியில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்களையும் யஷ் தாக்கூர் 3 விக்கெட்களையும் எடுத்தனர். பின் களமிறங்கிய லக்னோ அணி 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியில் ஆகாஷ் மாத்வால் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஐபிஎல் சீசன்களில் ப்ளே ஆஃப் போட்டியில் தனி வீரர் ஒருவரின் அரைசதம் இன்றி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றது. நேற்றைய போட்டியில் குருணால் பாண்டியா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சேப்பாக்கம் மைதானத்தில் 9 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள அவர் 47 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 5.87.
ஐபிஎல் தொடரில் ஒரு ஆட்டத்தில் குறைந்த எகானமி ரேட்டில் 5 விக்கெட்களை வீழ்த்திய பெருமையை ஆகாஷ் மாத்வால் பெற்றார். அவர் 5 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி 1.4 என்ற எகானமி ரேட்டுடன் இச்சாதனையை படைத்துள்ளார். இரண்டாம் இடத்தில் அனில் கும்ப்ளே உள்ளார். அவர் 1.57 எகானமி ரேட்டில் இச்சாதனையை படைத்திருந்தார். மேலும் ஆகாஷ் மேத்வால் ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சினை நேற்று பதிவு செய்தார். குறைவான ரன்களை மட்டும் கொடுத்து அதிக விக்கெட்களை வீழ்த்திய தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படாத ஒரு வீரர் என்ற சாதனையையும் ஆகாஷ் மாத்வால் படைத்துள்ளார்.