இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முன்பாகவே, அதற்கான டிக்கெட்டுகளை இலங்கை கிரிக்கெட் சங்கம் அச்சடித்து வைத்துள்ளது.
இலங்கையின் 70ஆவது சுதந்திரதினத்தை ஒட்டி கொழும்புவில் நிடஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா நான்கு போட்டிகளில் விளையாடும். அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெற்றது. அதேபோல், வெள்ளிக்கிழமை இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய போட்டியில் வங்காளதேசம் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கு முன்பாகவே இலங்கை மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டி என கார் அனுமதி டிக்கெட்டுகளை அச்சடித்து வைத்திருக்கிறது இலங்கை கிரிக்கெட் சங்கம். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், அதீத நம்பிக்கையின் உச்சம் என கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.