
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதியாக இந்த தொடர் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டுக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் என மொத்தமாக 8 அணிகள் விளையாடின.
கடந்த 19ஆம் தேதி (19.02.2025) தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அந்த வகையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் முதல் அரையிறுதி போட்டியில் இன்று (04.03.2025) மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 96 பந்துகளில் 73 ரன்களும், அலெக்ஸ் கேரி 57 பந்துகளில் 61 ரன்களும், டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்களும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களும், அக்ஸர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் இந்திய அணிக்கு அஸ்திரேலிய அணி 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த எளிய இலக்கை கொண்டு களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 62 பந்துகளில் 45 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 84 ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
கடந்த 14 ஆண்டுகளாக ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்லாத இந்திய அணி இந்த ஆண்டுக்கான (2025) சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் காலிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. நாளை (05.03.2025) லாகூரில் நடைபெறவிருக்கும் 2வது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோத உள்ளது.