திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் பிரசார நோட்டீஸ் வினியோகம் செய்தபோது, பா.ஜ.க., தூத்துக்குடி மாவட்ட மகளிரணி பொதுசெயலாளர் நெல்லையம்மாளுக்கும் அய்யாக்கண்ணுவுக்கும் வாக்குவாதம்-மோதல் ஏற்பட்டது. இதில் நெல்லையம்மாள் தாக்கப்பட்டதாக கூறி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன்,
அய்யாக்கண்ணு மற்றும் அவர்களோடு வந்தவர்களும் தாக்கியதால் நெல்லையம்மாள் நெஞ்சுவலியால் சிரமப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிக தவறான வார்த்தை. எந்த பெண்ணும் காதில் கேட்க முடியாத வார்த்தையை சொன்னதால் அவர் எதிர்வினையை ஆற்றியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த பெண் மீதும் இத்தகைய வன்முறை, கொடுமை வார்த்தைகளால் வீசப்பட்டால், நிச்சமாக புலி போல் எந்த தமிழ் பெண்ணும் வெகுண்டு எழுவார்கள். இதில் யாரும் விதி விலக்கல்ல.
இன்னும் எப்.ஐ.ஆர். போடவில்லை. தனது மானத்திற்கும், சுயகவுரத்திற்கும் இழுக்கு ஏற்பட்டால் எந்த பெண்ணும் எதிர்வினை ஆற்றலாம் என்பதே சட்டம். கோவிலில் பிரசாரம் செய்ய அனுமதித்தது, அதை தடுக்க வந்த எங்கள் பெண் நிர்வாகியை தாக்க வந்தது, எந்த பெண்ணும் கேட்க முடியாத வார்த்தைகளால் பேசியது தவறு.
இவ்வளவு தப்பையும் செய்துவிட்டு தமிழகத்தில் ஒருவர் சுதந்திரமாக நடமாட முடியும் என்றால் போலீசார் எங்கே உள்ளனர். தமிழகத்தில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. இப்பிரச்சனையில் தமிழகத்தில் பெண்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவேன்.
மேலும் மீனாட்சி கல்லூரியில் அஸ்வினி என்ற பெண்ணை கயவனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பிரச்சினையில் போலீசாரிடம் ஏற்கனவே அவர்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த பெண்ணிற்கு போலீசார் பாதுகாப்பு ஏன் கொடுக்கவில்லை.
தமிழத்தில் ஒரு தலைக்காதலுக்கு பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். காதலிக்கவில்லை என்றால் பெண்கள் விருப்பம் போல் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் நெல்லையம்மாள், அஸ்வினி ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.