உடலில் ஏற்படும் வலிகள் குறித்த பல்வேறு விஷயங்களை நம்மோடு மயக்கவியல் சிறப்பு நிபுணர் டாக்டர் கல்பனா பகிர்ந்து கொள்கிறார்.
உடலில் வலி ஏற்படுவது பொதுவாக அனைவருக்குமே உள்ள பிரச்சனை. சில வலிகள் நீண்ட காலமாக இருக்கும். சில வலிகள் உடனே ஏற்பட்டு பயங்கரமான தாக்குதலை ஏற்படுத்தும். அந்த நேரங்களில் மாத்திரைகளைப் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. வயிற்றில் கடுமையான வலி இருக்கும்போது அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்யலாம். நீண்ட காலமாக ஏற்படும் வலிகளிலும் பல்வேறு வலிகள் இருக்கின்றன.
நரம்பில் ஏற்படும் வலி, மன அழுத்தத்தால் ஏற்படும் வலி உள்ளிட்ட பல்வேறு வகையான வலிகள் உள்ளன. சில வலிகள் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு அந்த வலி இருந்தாலும், வேலையின் மீதான ஈடுபட்டால் அந்த வலியை அவர்கள் உணர்வது குறைவாக இருக்கும். உடம்பு வலிக்கிறது என்ற பெண்கள் சொல்லும்போது, அது என்ன வலி என்று நாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காலில் வலி ஏற்படும்.
அவர்களுக்கு காலில் உணர்வு இழப்பு ஏற்படுவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. வலி என்பது தடுக்க முடியாத ஒன்று. ஆனால் வலியால் நாம் பாதிக்கப்படுகிறோமா அல்லது வலியை நாம் நிவர்த்தி செய்து கொள்கிறோமா என்பது ஒவ்வொரு தனிநபரின் கைகளில் தான் இருக்கிறது. மாத்திரைகளினால் மட்டும் தான் வலி குணமாகும் என்பதில் உண்மையில்லை. சில நேரங்களில் மாத்திரைகளின் விளைவுகளினால் கூட வலி ஏற்படும்.
உடலில் எந்த சத்து குறைகிறதோ அந்த சத்தை நாம் வழங்கும்போது வலி குறையும். சில நேரங்களில் எதனால் வலி ஏற்படுகிறது என்பதை நாம் கண்டறிவது சவாலான விஷயமாக இருக்கும். காலில் தொடர்ந்து வலி ஏற்படுவது நம்முடைய உடலில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதற்கான ஒரு அறிகுறி தான். தொடர்ந்து வலி அதிகமாக இருந்தால் நிச்சயமாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். வலியோடு இருக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. வலியை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்று.