காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று பல காதல்கள் துளிர்க்கும், சில காதல்கள் உதிரும். ஆனால் காதலித்து கரம் பிடித்தவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட அந்த அற்புதம் நிகழ்ந்த நாளை நினைவுகூர்ந்து ஒரு அழகான உரையாடலும், பரிசு பரிமாற்றமும் இருக்கும். இதனை எத்தனை பேர் பின்பற்றுவார்கள் என்பது தெரியாது.
ஆனால் நியூமெக்ஸிக்கோவைச் சேர்ந்த ரான் மற்றும் டோனா காதல் தம்பதி இணைந்து 39வது காதலர் தினத்தை ஆரம்பத்தில் இருந்த அதே காதலோடு கொண்டாடி வருகின்றனர். ஜனவரி 1979ஆம் ஆண்டு ஆல்புகெர்க்கியில் ஒரு இன்ஸுரன்ஸ் அதிகாரியாக ஒரு வீட்டு கதவைத் தட்டிய போது ஒரு பெண் கதவைத் திறந்தார். அந்தப் பெண்தான் டோனா. அத்தருணம் இருவரின் எண்ண ஓட்டமும் ஒன்றாக மாறியது. அதன் பின் இருவரும் காதலர் தினம் அன்று சந்தித்து பேசியபோது ரான், "உனக்கு சாக்லேட் பிடிக்குமா?" என்று கேட்க, "ஆம், எனக்கு டார்க் சாக்லேட் மற்றும் பஃப்பெட்ஸ் கேண்டி என்றால் ரொம்ப பிடிக்கும்" என்று சொன்னவுடன் அன்று முதல் 39 ஆண்டுகளாக காதலர் தினத்தன்று டார்க் சாக்லேட்டை அதே கடையில் வாங்கி டோனாவிற்கு பரிசளித்து வருகிறார் ரான்.
2014ஆம் ஆண்டு டோனாவிற்கு டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டு இருந்தபொழுது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தன் காதலி இருந்த நிலையை கண்டு வருந்தினார் ரான் . "2015 ஆம் ஆண்டு அவள் மீண்டும் வீட்டிற்கு வந்தாள். ஆனால் அவளால் எழுத முடியவில்லை, பேச முடியவில்லை, அவளால் அன்று கழிவறைக்கூட செல்லமுடியவில்லை. அது தான் என் வாழ்வில் சோகமான நாளாக இருந்தது" என்கிறார் ரான் . இது பற்றி டோனா கூறியபோது, "என்னைப் பாதுகாப்பவர் இவர். நான் இவரை திருமணம் செய்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவரை நான் காதலிக்கிறேன்" என்கிறார்.
இதுமட்டுமல்லாமல் தற்போது இந்த காதலர் தினத்திற்கு ரான் டோனாவுக்கு பரிசு வாங்கி அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.