சீனர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது வெண்கல காலத்திலேயே, உடையை அணியத் தொடங்கி விட்டார்கள். சீனர்களின் உடை நாகரிகம் தொடர்ச்சியாக ஒரேமாதிரியாகவே இருந்தது. பட்டு, சணல், பருத்தி என்று எந்த உடையாக இருந்தாலும் இழுத்துக் கட்டும் வகையிலேயே இருந்தது.
அவர்கள் எப்போதும் கம்பளி ஆடைகளை விரும்புவதே இல்லை. அது ஆடு, மாடுகள் மேய்க்கும் நாடோடிகள் அணியும் உடை என்பதே அவர்களுடைய கருத்தாக இருந்தது. வீடுகளில் பட்டுப்புழுக்களை வளர்க்கும் பழக்கம் கி.மு.3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. அதற்கு ஒரு கதை உண்டு.
சீனத்து ராணி ஒருத்தி வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, முசுக்கட்டைச் செடியின் இலையில் பட்டுப் புழு கூடு கட்டியிருந்தது. அந்தக் கூடு வழவழப்பான நூலால் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ராணி அந்த கூட்டின் நூலை மெதுவாக இழுத்தாள். அது நீளமாக வந்துகொண்டே இருந்தது.
அவளுக்கு ஆச்சர்யம். மேலும்சில கூடுகளின் நூலை பிரித்தெடுத்தாள். பிறகு அந்த நூலைக் கொண்டு சிறிய துணியை பின்னினாள். பிறகு இந்தத் தகவலை பிறருக்கு சொன்னாள். அதைத் தொடர்ந்து, காடுகளில் பட்டுப் புழுக்களை தேடிப்பிடித்து நூல் எடுத்த சீனர்கள், பிறகு தங்கள் வீடுகளிலேயே பட்டுப் புழுக்களை வளர்க்கத் தொடங்கினர்.
யாங்ஸே நதிக்கரை நாகரிகத்தில் பட்டு புழக்கத்தில் இருந்தது. கல்லறைகள், மண்பாத்திரங்கள், பீங்கான் பாத்திரங்களிலும், வெண்கலப் பாத்திரங்களிலும் பட்டு உடைகள் அணிந்த சித்திர வேலைப்பாடுகள் இருக்கின்றன. புராதனக் காலத்திலிருந்து பட்டு உடைகளே சீனர்களின் விருப்ப உடையாக இருக்கிறது.
உயர்வகுப்பினர் பட்டு உடைகளையும், கீழ்த்தட்டு மக்கள் சணல் உடைகளையும் அணிந்தனர். (கி.பி.1200களில்தான் சீனர்களின் முதன்மை உடை பருத்தியாக மாறியது குறிப்பிடத்தக்கது) கி.மு. 1500களில் நெசவுத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது. பட்டு நூலில் நெய்யப்படும் துணி லேசாகவும், வழவழப்பாகவும், கதகதப்பாகவும் இருந்தது. எனவே, அந்தத் துணிக்கு மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.
ஷாங் பேரரசு காலத்திலேயே உடைகள் அணியும் பழக்கம் மேம்பட்டிருந்தது. அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட வெண்கல பாத்திரங்களில் உடையணிந்த மனிதர்களின் உருவம் இடம்பெற்றுள்ளது.
ஆண்களும், பெண்களும் நீண்ட கவுன் மாதிரியான உடைகளை அணிந்திருந்தனர். கி.மு.2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஸான்ஸிங்டுய் கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒரு வெண்கலச் சிலை அணிந்துள்ள உடையில் பின்னல் வேலைப்பாடும் உள்ளது. வீரர்கள் நீண்ட உடையும், பெண்கள் பாவாடை ஜாக்கெட்டும் அணிந்திருந்தனர்.
சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் வரை, பட்டு தயாரிப்பு ரகசியத்தை சீனர்கள் தங்களுக்குள்ளேயே பொத்திப் பாதுகாத்து வந்தனர். வனத்தில் உள்ள ஏதோ ஒரு மரத்திலிருந்து பட்டு நூல் தயாரிக்கப் படுவதாக கிரேக்கர்கள் நம்பி வந்தனர். பட்டின் ரகசியத்தை அறிய கிரேக்கர்கள் ஆர்வமாக இருந்தனர்.
கி.மு.5 ஆம் நூற்றாண்டுகளில் பட்டுத் துணிகளில் வண்ணம் சேர்ப்பதில் சீனர்கள் திறமை பெற்றிருந்தனர். ஆசியாவின் பெரும்பகுதி நாடுகளில் சீன பட்டு புகழ்பெற்றிருந்தது. குய்ன் மற்றும் ஹான் பேரரசுகளில் சீனாவின் பெரும்பகுதி ஒருங்கிணைக்கப்பட்டது. குய்ன் பேரரசு காலத்தில் புதையுண்ட டெர்ரக்கோட்டா ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அணிந்திருந்த உடையை அறிந்துகொள்ள உதவியாக இருக்கின்றன.
2200 ஆண்டுகளுக்கு முந்தைய ராணி டாய் புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டபோது, உலகம் சீனாவின் உடை நாகரிகத்தை அறிந்துகொண்டது. அந்த ராணியின் உடல் நன்கு பதப்படுத்தப்பட்டிருந்தது. 20 சுற்றுகள் பட்டுத்துணிகளால் சுற்றப்பட்டிருந்தது. தவிர நூற்றுக்கணக்கான பட்டு உடைகளும், கால் மற்றும் கையுறைகள், செருப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் பத்திரமாக இருந்தன. அந்த உடைகள் சீனர்களின் நெசவு, மற்றும் வண்ணக்கலவை வேலைகளுக்கு சான்றாக இருக்கின்றன.
சுய் மற்றும் டாங் பேரரசுகளில் சீன கலாச்சாரம் மேம்பட்டது. சாங்கன் நகரம் மிகப்பெரிய நகரமாக உருவெடுத்தது. அன்றைய உலகின் மிகப்பெரிய காஸ்மோபாலிடன் நகரமாக இருந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு நிகராக ஃபேஷன் வளர்ந்திருந்தது.
டாங் பேரரசில்தான் மத்திய ஆசியா வழியாக சீனாவிலிருந்து சில்க் ரோடு உருவானது. அந்த ரோடு மத்தியக்கிழக்கு நாடுகளையும், பாரசீகம், துருக்கி போன்ற நாடுகளையும் இணைத்தது. பட்டு வியாபாரத்திற்காகவே அந்த பாதை கண்டுபிடிக்கப்பட்டது.. இதுதான் மிகப்பழமையான வர்த்தக பாதையாக கருதப்படுகிறது. இந்தப் பாதையின் நெடுகிலும் புதிய நகரங்கள் தோன்றின.
பட்டு ரகசியத்தை சீனர்கள் யாருக்கும் சொல்லித்தராமல் மறைத்தே வைத்திருந்தனர். ஆனால், சீனாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக வந்த சாமியார்கள் பட்டுப் புழுக்களை சிரியாவுக்கு கடத்தினர். அங்கு பட்டுப் புழு உற்பத்தியை அறிமுகப்படுத்திய அவர்கள் பட்டுத் தொழில் மற்ற நாடுகளுக்கும் பரவ காரணமாக இருந்தார்கள். இன்றைக்கும் சீனாதான் பட்டுப்பூச்சி வளர்ப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது. இந்தியா இரண்டாவது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
1911 ஆம் ஆண்டுவாக்கில்தான் சீனாவில் மேற்கத்திய உடை நாகரிகம் நுழையத் தொடங்கியது. மேற்கத்திய கம்பெனிகளில் வேலை செய்த சீனர்கள் கோட், சூட் அணிந்தனர். இந்த உடை சீனர்கள் மத்தியில் தொடக்கத்தில் வெறுப்பை ஏற்படுத்தினாலும், கிறிஸ்தவ பள்ளிகளின் சீருடை வழியாக அடுத்த தலைமுறையை எளிதில் கவரத் தொடங்கியது. சன் யாட் சென் காலத்தில் சீன உடைக் கலாச்சாரத்தில் புதிய புரட்சி ஏற்பட்டது. நகரங்களில்தான் மேற்கத்திய உடை நாகரிகம் முதலில் ஆக்கிரமித்தது.
முந்தைய பகுதி:
பனி மனிதன் அணிந்த உடை! உடையின் கதை #3