Skip to main content

"எனக்கு பிரசவம் பாத்தாங்க, என் மகளுக்கும் பாத்தாங்க..." - தங்கமனசு தங்கம்மா   

Published on 27/05/2018 | Edited on 27/05/2018

தங்கம்மா போன்ற கை மருத்துவம் தெரிந்த கிராமத்து பாட்டிகள் எல்லா குக்கிராமங்களிலும் உண்டு. எந்த வசதிகளுமில்லாத கிராமங்களில் கர்ப்பிணி பெண்களுக்கான ஆபத்துகால மருத்துவர்கள் இவர்கள். தற்போது சுகப்பிரசவம் என்பது கனவாகிப்போனது. கடந்த காலத்தில், மருத்துவம் வளராத காலத்தில் இந்த கைமருத்துவ பாட்டிகள் பார்த்ததெல்லாமே 99 சதவிகிதம் சுகப்பிரசவம்தான். இவர்கள் தங்களது வேலைக்கு ஃபீஸ் வாங்கியிருந்தால் கார், பங்களா என செட்டிலாகியிருக்க முடியும். ஆனால் இவர்கள் செய்தது சேவை. அந்த சேவைக்குக் கைமாறாக அவர்கள் பெற்றது அன்பாகத் தரும் உணவையும், எப்போதும் ஊரார் காட்டும் பாசத்தையும்தான்.
 

thangamma



வேலூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது பைரப்பள்ளி கிராமம். தமிழக – ஆந்திரா எல்லையை ஒட்டிய கிராமம். இந்த கிராமத்தில் 300 வீடுகள் உள்ளன. இப்போதும் பேருந்து வசதியென்பது குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை தான். அந்த கிராமத்தில் நுழைந்து தங்கம்மா வீடு எங்கேயென்று எதிர்பட்ட ஒருவரிடம் விசாரித்தபோது, 'நீங்க என்ன ஊருக்குப் புதுசா? இப்பத்தான் ஊருக்கு ஊர் பி.எச் சென்டர்ங்க (ஆரம்ப சுகாதார நிலையம்) வந்த பிறகு எல்லாம் அங்க போய் அறுத்து (சிசேரியன்) குழந்தையை எடுத்துக்கிட்டு வருதுங்களே... நீங்க என்ன அந்தம்மாவ தேடி வந்திருக்கீங்க?' என கேள்வி கேட்டவரிடம், நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், 'நக்கீரனா, போய் பாருங்க' என வீட்டைக் காட்டிவிட்டு சென்றார், அந்த நடுத்தர வயதுக்காரர்.

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த தங்கம்மா பாட்டியிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். 

"குடியாத்தம் பக்கத்தல இருக்குற கொட்டாரமடகு என்கிற கிராமத்தில் வாழ்ந்த இருளர் சாதியில பிறந்தவ நான். என்னை படிக்க வைக்கல. என்னை தருமபுரியில ஒருத்தருக்கு கல்யாணம் செய்துதந்தாங்க. அவர் கொஞ்ச நாள்ளயே என்னை விட்டுட்டுப் போய்ட்டார். நான் எங்க அம்மா வீட்டுக்கே வந்துட்டேன். இங்க வந்து கூலி வேலைக்கு போய்க்கிட்டு இருந்தேன்.

 

 


எங்க ஊர்ப்பக்கம் அடிக்கடி வேலை விஷயமா வந்த ராமச்சந்திரன் என்னை பார்த்துட்டு விரும்பினார். என்னை கல்யாணம் செய்துக்கிட்டார். அவருக்கு ஏற்கனவே கல்யாணமாகியிருந்தது. என்னை கல்யாணம் செய்து, இங்க அழைச்சு வந்து குடிவச்சார். இப்பத்தான் ரோடு வசதி, பஸ் வசதியெல்லாம். 40 வருசத்துக்கு முன்னாடி முழுக்க விவசாய நிலம்தான். மண்ரோடு... இங்கயிருந்து ஆம்பூர் போகணும்னா மாட்டு வண்டியில போகணும், இல்லைன்னா கால் நடையா நடந்துதான் போகணும்.

  thangamma house



இப்பத்தான் மாசமா இருந்தா அந்த ஊசி, இந்த ஊசி, மாசா மாசம் செக்கப்புண்ணு சொல்றாங்க. நான் புள்ள பெத்துக்கறப்ப அப்படியெல்லாம் கிடையாது. மாசமாகிட்டா நல்லா சாப்பிட சொல்வாங்க, வேலை செய்யச் சொல்லுவாங்க. இப்போ மாதிரி நாத்து நட போகாத, கல வெட்ட போகாத, படிக்கட்டு ஏறாத, தண்ணீர் பானை தூக்காதன்னு சொல்லமாட்டாங்க. நல்லா வேலை செய், அப்பத்தான் அதிகமா வலியில்லாம குழந்தை பெத்துக்க முடியும்ன்னு சொல்லுவாங்க. எனக்கும் அப்படித்தான் சொன்னாங்க. ஒரு புள்ளைய பெத்தேன். 

36 வருஷத்துக்கு முந்தி ஒரு நாள், இங்க ஊர்ல இருக்கற பூங்கொடி பிரசவ வலியால துடிக்க, நான் ஓடிப்போய் உதவி செஞ்சேன். அதுதான் நான் பார்த்த முதல் பிரசவம். இத யார்க்கிட்டயும் போய் கத்துக்கல. எனக்கு முன்னாடியிருந்த பெரியவங்க மாசமாயிருக்கற காலத்துல என்ன செய்யணும், பிரசவம் எப்போ சரியா நடக்கும், அத எப்படி கண்டுபிடிக்கறது, குழந்தை பெத்ததுக்கப்பறம் தாய்க்கு என்ன சாப்பாடு தர்றது, குழந்தை ஊனத்தோட பொறந்தா அதை எப்படி சரிசெய்யறது, எந்தக் குழந்தைக்கு எத்தனை நாளில் முதல் தண்ணீர் ஊத்தறதுங்கறது இப்படி எல்லாத்தையும் வேலை செய்யற இடத்துல சொல்லுவாங்க. அது வழியா தெரிஞ்சிக்கறதுதான். அப்படித்தான் நானும் தெரிஞ்சிக்கிட்டன்.

பூங்கொடியில இருந்து இதை ஆரம்பிச்சு, அப்புறம் பூங்கொடியோட மருமகளுக்கும், மகளுக்கும் கூட பிரசவம் பார்த்துட்டேன். இப்போ எங்கயும் போய் பிரசவம் பாக்கறதில்ல. வலின்னு சொல்லி வந்தா, அது சூட்டு வலியா பிரசவ வலியான்னு வயித்த பார்த்து கண்டுபுடிச்சி சொல்வேன். அடுத்து எப்போ பிரசவம் ஆகும், எப்போ ஆஸ்பத்திரிக்கு போகணும்ன்னு சொல்லி அனுப்புறேன்.

 

 


'நீ என்ன டாக்டரா, பிரசவம் பாக்கற?'னு ஊருக்கு எப்போதாவது வர்ற நர்ஸம்மாங்க திட்டிட்டுப் போறதால விட்டுட்டேன். இருந்தும் குழந்தை பொறந்ததும் கொண்டு வந்து காட்டுவாங்க, ஏதாவது கோளாறு இருந்தா சரிசெய்து அனுப்புவேன், பெத்தவளுக்கு பத்திய சாப்பாடு செய்து தர்றேன், 9வது நாள் தண்ணீ ஊத்தறப்ப கூடயிருந்து எல்லாம் செய்யறேன். ஊர்க்காரங்க வந்து பாசமா கூப்பிடும்போது போகாம இருக்க முடியல" என்றார்.

  vck award



மீண்டும் கொஞ்சம் யோசித்துவிட்டு பேசினார். "முதல்ல என் வீட்டுக்காரர், பிரசவத்துக்கு உதவி செய்யறப்ப 'போகாதம்மா ஒன்னுகிடக்க ஒன்னாச்சுன்னா உன்ன குத்தம் சொல்லுவாங்க'ன்னு சொன்னார். கடவுள் செயலா அந்த மாதிரி எதுவும் நடக்கல. என் கைராசி பத்தி ஊர்ல அவர் காதுபட நிறையப்பேர் பேசனதால, முதல்ல போக வேணாம்னு சொன்னவரு, அப்புறம் 'இங்கயே பாரும்மா வெளியூர்க்கெல்லாம் போகதமா'ன்னு சொன்னார். நான் வெளியூர்கள்ள போய் பிரசவம் பாக்கறதில்லை. அவர் இறந்து பல வருஷமாகியும் அவர் சொல்லை மீறல' என்றார் நெகிழ்வாக.

 

 


தங்கம்மா பாட்டி வசிக்கும் தெருவில் வசிக்கும் லட்சுமி வெத்தலையை கிள்ளி வாயில் போட்டபடி நம்மிடம், 

"தங்கம்மா பிரசவம் பார்த்தது 400க்கும் மேலயிருக்கும். எனக்கும் அவுங்கதான் பிரசவம் பார்த்தாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் மகளுக்கு பிரசவம் பார்த்தாங்க. தாயும் புள்ளையும் நல்லாதான் இருக்காங்க. அவுங்க பிரசவம் பார்த்து இத்தனை வருஷசத்தல அசம்பாவிதம் எதுவும் நடந்ததில்லை. அதே மாதிரி குழந்தை முன்னாடியே பிறந்துட்டா தினமும் காலையில, சாயந்திரத்தில  வெயில்ல வைப்பாங்க. அதைத்தான் ஆஸ்பத்திரியில பெட்டியில வச்சி காசு புடுங்கறாங்க. குழந்தையோட கண்ணு சின்னதா இருந்துச்சுன்னா ஒன்னும் பண்ண முடியாதுன்னு டாக்டர்ங்க சொல்றாங்களாம், அதெல்லாம் தங்கம்மா சாதாரணமா சரி செய்துடும். குழந்தைக்கு காது, மூக்கு சிறுசு அப்படின்னு ஏதாவது பிரச்சனைன்னா காட்டுத் தழையை கொண்டே சரி செய்துடுவாங்க. டாக்டர்ங்க நிறைய படிச்சிட்டு வர்றாங்க. இதுக்கெல்லாம் அந்த ஆப்ரேஷன், இந்த ஆப்ரேஷன்னு சொல்லி காச புடுங்குறாங்க. தங்கம்மா காசு பணம் வாங்காது, அன்பா நாலு வார்த்தை பேசினா போதும் உசுரயும் தரும் அது" என உருகினார்.

தங்கம்மாவின் சேவையை அறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த மாதம் சேலத்தில் நடத்திய மாநாட்டில் தங்கம்மாவை அழைத்து கவுரவித்தனர். இது ஒவ்வொரு கிராமத்தில் உள்ள தங்கம்மாக்களுக்கும் கிடைக்க வேண்டிய கவுரவம்.




 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

குடும்பம் கைவிட்டதும் கலையை கையில் எடுத்தேன் - டிரெண்டிங் நடன பிரபலம் ஷர்மிளா உற்சாகம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 LETS DANCE SHARMILA interview

 

சினிமா பாடல்களை அப்படியே ரீ-கிரியேசன் செய்து இணையத்தில் உலாவவிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்; பலர் இதனை கொண்டாட்டமாகவே செய்தாலும் சிலருக்கோ அது தனது வலியினை மறைப்பதற்கான ஒன்றாக உள்ளதாகவும் இருக்கிறது என்கின்றனர் சிலர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்முடைய நேர்காணலின் மூலம் டான்ஸர் ஷர்மிளா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு ஆக்டிங், டான்ஸ் என்று பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். பள்ளிக்காலங்களில் பல்வேறு போட்டிகளில் நான் கலந்துகொள்வேன். இதுதான் செய்வேன் என்று எப்போதும் என்னை நான் சுருக்கிக்கொண்டது கிடையாது. அனைத்து விதமான கலைகளிலும் என்னால் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களால் இன்று வாய்ப்புகள் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது. 

 

அம்மா, அப்பாவுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்ததால் சிறுவயது முதல் நான் ஹாஸ்டலில் இருந்தேன். தலைமையாசிரியரின் உதவியால் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்தேன். அடுத்தகட்ட படிப்புக்கு கோர்ட் உத்தரவு மூலம் என்னுடைய தந்தை மாதாமாதம் கொடுத்த ஜீவனாம்ச பணம் உதவியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் செய்ய ஆரம்பித்து சென்னை வந்தேன். எனக்கு கிடைத்த ஆயுதம் போன் தான். இரவெல்லாம் கண்விழித்து வீடியோக்கள் செய்வேன். 

 

 

நம்பிக்கையும் உழைப்பும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கொரோனா காலத்தில் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்குக் கிடைத்த வாய்ப்பு தான் லெட்ஸ் டான்ஸ் 360. ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஒவ்வொரு பர்ஃபாமன்ஸ் பிடிக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பும் சிலருக்கு என்னுடைய நடனமும் பிடிக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய டீமிடமிருந்து எனக்கு எப்போதும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். என்னை அவர்கள் நன்றாக ஊக்குவிப்பார்கள். 

 

பறை இசை வாசிக்கும்போது எமோஷனலாக இருக்கும். நெகட்டிவ் கமெண்டுகள் வரும்போது அதைப் புறந்தள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது கடினம். பள்ளியில் இருக்கும்போது மற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தால் தான் என்னால் நிறைய சாதிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு எப்போதும் ஆதரவு. என்னுடைய வீடியோக்கள் பற்றி என் பெற்றோரிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு யூடியூப் குறித்து தெரியாது. 

 

என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு என்னுடைய ஆசிரியர்கள் பாராட்டுவது பெருமையாக இருக்கும். என்னுடைய வீடியோக்களுக்காக அதிகமான முன்தயாரிப்புகளில் நான் எப்போதும் ஈடுபடுவேன். யூடியூபில் சில்வர் பட்டன் கிடைத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னைப் போன்று இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாலா சாரின் 'இவன்தான் பாலா' என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.