கொலஸ்ட்ரால் குறித்த பல்வேறு தகவல்களை ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
கொலஸ்ட்ரால் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். உடல் எடைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நம்முடைய உடலில் 200 என்கிற அளவுக்குள் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டும். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என்று இரு வகைகள் இருக்கின்றன. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல், நெஞ்சு வலி ஏற்படுதல் ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களும், அதிகமாக துரித உணவுகளை உண்பவர்களும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நம்முடைய குடும்பத்தில் யாருக்காவது கொலஸ்ட்ரால் இருந்தால் நாம் இன்னமும் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள், மிகக் குறைந்த நேரம் தூங்குபவர்கள், மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், சிகரெட், மது ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள், அதிகமாக துரித உணவுகளை உண்ணுபவர்கள் ஆகியோருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
சர்க்கரை நோய், எச்ஐவி, தைராய்டு, கல்லீரல் பிரச்சனை ஆகியவற்றை எதிர்கொள்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நமக்கு உடல் உழைப்பு என்பது நிச்சயம் தேவை. புகை, மது ஆகிய பழக்கங்களை உடனே கைவிட வேண்டும். குறைந்தது 7 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். கொலஸ்ட்ரால் நோயை குணப்படுத்த ஹோமியோபதியில் நல்ல மருந்துகள் இருக்கின்றன.
இதனால் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். எந்த பக்கவிளைவும் இதில் இருக்காது. நம்முடைய வாழ்க்கை முறையையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் அளவை நிச்சயம் நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். கிடைக்கும் உணவுகள் அனைத்தையும் உண்ணாமல் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலமாகவே குணப்படுத்தக்கூடிய நோய் தான் இது. கொழுப்பு சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும். கொழுப்பு சத்து குறைவாக இருக்கும் பால், தயிரை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், சிட்ரிக் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். கிரீன் டீ குடிப்பது மிகவும் நல்லது.