மார்ச் 17 - சாய்னா பிறந்த நாள்
சானியாவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் இருந்த வெற்றிடத்தை, மன்னிக்கவும் பழக்க தோஷத்தில் வந்துவிட்டது, இந்திய பெண்கள் விளையாட்டில் இருந்த வெற்றிடத்தை நிரப்ப திறமையும் ஸ்டைலும் கொண்டு வந்த சாய்னா நேவால், இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். பாட்மிட்டன் விளையாட்டில், உலகின் முதலாம் இடம் பிடித்த முதல் இந்திய பெண்மணி. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணியும் இவர்தான். கிரிக்கெட் விளையாட்டில் பிரபலம் அடைந்த இந்தியர்களை, தன் விளையாட்டின் மூலம் பாட்மிட்டன் பக்கம் திசை திருப்பியவர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவின் 'டார்லிங் டாட்டர்' என்று அழைக்கப்பெற்றவர். சாய்னாவைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
- பாட்மிட்டன் விளையாட்டில் இன்று கலக்கி வரும் இவர், ஆரம்பத்தில் ஒரு கராத்தே கிட். கராத்தேவில் பிரவுன் பெல்ட்டும் வாங்கியிருக்கிறார்
- ஹர்விர் சிங் மற்றும் உஷா நேவால் சாய்னாவின் பெற்றோர்கள். இவர்கள் இருவரும் கூட பாட்மிட்டன் வீரர்களாம். இருவரும் மாநில அளவில் விளையாடியுள்ளனர்
- சாய்னா தற்போதுவரை 21 சர்வதேச பட்டங்களை வென்றிருக்கிறார்
- 28 வயதுக்குள்ளாகவே இந்தியாவின் உயரிய விருதுகளான அர்ஜுனா விருது, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது மற்றும் பத்ம பூஷன் விருதுகளை பெற்றவர்
- ஆசிய சாட்டிலைட் பாட்மிட்டன் போட்டிகளில் முதன் முதலில் இரண்டுமுறை வென்ற பெண்மணி சாய்னா தான்
- காமன் வெல்த் போட்டியில் ஒரு தங்கம் மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்
- அவருடைய சிறந்த காலத்தில், உலகளவில் அதிக சம்பளம் வாங்கிய பாட்மிட்டன் வீரராக திகழ்ந்திருக்கிறார்
- ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கு பின்னும் ஐஸ் கிரீம் தான் விரும்பி சாப்பிடுவாராம்
- 2015 ஆம் ஆண்டில் உலக தரவரிசையில் முதலாம் இடத்தில் இருந்த சாய்னா, தற்போது பதினோராம் இடத்தில் இருக்கிறார்
மார்ச் 17 1990 ஆண்டு பிறந்ததால், இன்று இவர் 28 வயதை தொட்டிருக்கிறார். இந்தியாவில் ஒரு பெண்ணாக இருந்து, பல தடைகளை தாண்டி வந்து, வீட்டில் பொருளாதார சிரமங்களைத் தாண்டி இந்திய மக்களுக்கு ஒரு இன்ஸபிரேஷனாக இருக்கிறார். ஹாப்பி பர்த் டே சாய்னா!