சில ஆயிரங்களில் கிடைக்கும் ஸ்மார்ட்ஃபோன்களே பல வசதிகளைத் தருவதால், உலகமே அதற்குள் சுருங்கிவிட்டது. குறிப்பாக பரவலாக இருக்கும் செல்ஃபி மோகத்தை வியாபாரமாக்க மூன்று, நான்கு கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள்தான் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றை வாங்குபவர்கள் நினைவுகளைச் சேமிப்பதாக சொல்கிறார்கள். ஆனால், செல்லுமிடமெல்லாம் செல்ஃபி எடுத்தால், எந்த நினைவும் தங்காது என அதிர்ச்சியூட்டுகின்றனர் அறிவியலாளர்கள்.
‘புகைப்படங்களை கிளிக்கிக் கொண்டால் நினைவுகளைப் பத்திரப்படுத்தலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதன் விளைவோ எதிர்மறையாக இருக்கிறது’ என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஜூலியா. இதை வெறும் கருத்தாக முன்வைக்காமல், ஒரு ஆராய்ச்சியையும் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். ஒரு குழுவை ஓவியங்கள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்களில் சிலர் புகைப்படம், செல்ஃபி மற்றும் ஸ்நாப்சாட் பிரியர்களாக இருக்க, சிலர் எந்தப் புகைப்படமும் எடுக்கவில்லை.
மொத்தமாக அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த அந்தக் குழுவினரை ஒவ்வொருவராக ஆய்வுக்குட்படுத்தியபோது, புகைப்படம், செல்ஃபி மற்றும் ஸ்நாப்சாட் பயன்படுத்திய பலராலும் அங்கு என்ன பார்த்தார்கள் என்பதை தெளிவாக விளக்க முடியவில்லை. அதேசமயம், புகைப்படங்கள் எடுப்பதைத் தவிர்த்தவர்கள் நல்ல முறையில் தாங்கள் ரசித்ததை விளக்கியுள்ளனர். செல்ஃபி போன்ற விஷயங்களில் கவனம் போகும்போது, இயல்பாகவே தாங்கள் காணும் பொருளின் மீதான கவனத்தை அவர்கள் இழக்கிறார்கள் என்பது அறிவியலாளர்கள் சொல்லும் முடிவு. எனவே, செல்ஃபிக்களில் நம் முகத்தை மட்டும் ரசிக்காமல், அழகு கொஞ்சும் உலகையும் கொஞ்சம் கவனித்து நினைவுகளை இயல்பாகவே சேமிக்கலாமே.