பொதுவாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் நண்பகல் உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது மறைந்த முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் தான் என்பார்கள். ஆனால், அதற்கு முன்னோடியாக இருந்தது தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் ஜமீன்.
எட்டப்பர் எனும் பெயர் சொன்னாலே காட்டிக் கொடுத்தவர், சூழ்ச்சிகள் செய்பவர் எனும் அபச்சொல் உலவி வந்தாலும் கூட மகாராஜா சமூகத்தின் பொருள் உதவியோடு தொடங்கப்பட்ட நண்பகல் உணவு திட்டம் வெற்றி பெற்று தமிழகத்தின் பட்டி தொட்டிகளுக்கு மட்டுமல்ல அரசு இயந்திரத்துக்கும் ஒரு பாலபாடமாக வழிகாட்டியிருக்கிறது என்பது எட்டயபுரம் அரண்மனைக்கு காலத்தால் சீலத்தால் புகழ் தரக்கூடியது ஆகும்.
காமராஜரின் ஆட்சிக்காலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டமானது அரசின் நிதியுதவியோடு தொடங்கப்படுவதற்கு முன்பாகவே 1956ஆம் ஆண்டில் எட்டயபுரம் ராஜா இலவச ஆரம்ப பாடசாலையில் எட்டப்ப மன்னர்களின் பொருள் உதவியோடு செயல்படுத்தப்பட்டுள்ளது. காமராஜரின் ஆட்சிக்காலத்தில் அவரது சிந்தனைப்படி கல்வித்துறைக்கு தீட்டப்பட்ட பல திட்டங்களில் நண்பகல் உணவு திட்டம் பிரதானமானது. இத்திட்டத்தை காமராஜர் முன் வைத்தபோது அதிகாரிகள் தரப்பு இத்திட்டத்துக்கு தயக்கம் காட்டியது. தனது குறிக்கோளில் உறுதியாக இருந்த காமராஜர் திட்டத்தை நிறைவேற்ற எந்த தியாகமும் செய்ய தயார் என்று அறிவித்த காரணத்தினால் அப்போதைய அமைச்சரவை கூட்டத்தில் நண்பகல் உணவு திட்டம் அரசால் கொள்கை அளவில் ஏற்கப்பட்டு பொதுமக்கள், உபயதாரர்கள் பங்களிப்போடு பாடசாலைகளில் நண்பகல் உணவு திட்டம் செயல்வடிவம் பெற்றது. அதன்படி முதன்முதலில் எட்டயபுரம் ராஜா இலவச ஆரம்ப பாடசாலையில் எட்டப்ப மன்னர்களின் அனைத்து பொருளுதவியோடு நண்பகல் மதிய உணவு திட்டம் 1956ஆம் வருடத்தில் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வயிற்றுக்கு சோறிட வேண்டும். இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம் பயிற்று பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும் என பாடிய பாரதி பிறந்த மண்ணில்.. கல்விக்கும், பசிக்கும் நல்வழிவகை செய்த எட்டப்ப மன்னர்கள் வாழ்ந்த எட்டயபுரத்து மண்ணில்...! பெருமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக காமராஜரின் ஆட்சிக்காலத்தில் அவரது விருப்பப்படியே மதிய உணவு திட்டம் எட்டயபுரத்தில் பாரதி படித்த இராஜா இலவச ஆரம்ப பாடசாலையில் தொடங்கி வைக்கப்பட்டது. நண்பகல் உணவு திட்ட முதல் தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்து தொடங்கி வைக்க ஒப்புக்கொண்ட காமராஜர் அலுவல் நிமித்தமாக சென்னையில் இருக்க வேண்டி இருந்ததால் எட்டயபுரத்துக்கு வர இயலாததால் அன்றைய சென்னை மாநில கல்வித்துறை இயக்குநர் நெ.து. சுந்தரவடிவேலுவை அனுப்பி திட்டத்தை துவக்கி வைத்தார்.
இது குறித்து எட்டயபுரம் இராஜா இலவச ஆரம்ப பாடசாலையில் உள்ள கல்வெட்டு குறிப்பில், " எட்டயபுரம் மாகணம் மஹாராஜா சமூகம் தலைமையில் மஹாராஜா சமூகம் பொருட்செலவில் சென்னை மாநில கல்வித்துறை இயக்குநர் திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் 18-7-1956ல் நண்பகல் உணவு திட்டத்தை சென்னை மாநிலத்தில் முதலாவதாக எட்டயபுரம் இராஜா இலவச ஆரம்ப பாடசாலையில் துவக்கி வைத்து நடைபெற்று வருகிறது என உள்ளது. இந்த நிகழ்வுக்கு பின்னர் தான் பல ஆயிரம் ஊர்களில் உள்ள பாடசாலைகளில் எல்லாம் உபயதாரர்கள், பொதுமக்கள் பங்களிப்போடு திட்டம் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடைபெற்றது. ஒரு அரசு பொறுப்பேற்காமல், செலவு செய்யாமல் மக்களின் உதவியோடு பட்டிதொட்டியெங்கும் தனது எண்ணம் ஈடேறி கொண்டிருப்பதை கண்டு மகிழ்ந்தார் காமராஜர். மகத்தான வெற்றிகண்ட இத்திட்டமானது பல்வேறு நடைமுறைகளுக்கு பின் 1-11-1957 தேதி முதலே அரசின் ஒப்புதல் பெற்ற நிதி உதவிக்குரிய நண்பகல் உணவு திட்டமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, பாடசாலைகளில் இலவச நண்பகல் உணவு திட்டம் அரசு நிதியுதவியோடு தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, கொள்கை அளவில் அரசால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பாகவே நீண்ட நெடுங்காலமாக எட்டயபுரத்தில் ராஜா இலவச துவக்கப்பள்ளியில் நண்பகல் இலவச உணவு திட்டம் நடைமுறையில் இருந்தது என்கின்றனர் ஊர் பெரியவர்கள். தமிழ்நாட்டில் இருந்த 72 பாளையங்களில் 30 பாளையங்கள் நெல்லை சீமையில் தான் இருந்தது. அவற்றில் எட்டயபுரம் ஜமீனே அளவில் பெரியது. எட்டயபுரம் ஜமீன் சுமார் 500 கிராமங்கள் அடங்கிய சமஸ்தானம் ஆகும். எட்டயபுரம் சமஸ்தான வரலாற்றில் எட்டப்ப ராஜா (எ) மகாராஜாவின் காலமே பொற்காலம் எனப்படுகிறது. இவர் காலத்தில் தான் பாடசாலைகள், இலவச ஆடைகள், குழந்தைகளுக்கு பால், குடிதண்ணீர் தெப்பக்குளங்கள், அன்னசத்திரங்கள், குளங்கள் தூர்வாருதல், சாலைகள் அமைத்தல், விவசாய பண்ணைகள் அமைத்தல், கால்நடை கண்காட்சிகள், இலவச மருத்துவம் என பல நன்மை பயக்கும் காரியங்கள் நடைபெற்றுள்ளது. இதற்கெல்லாம் சரித்திர சான்றுகள், குறிப்புகள் உள்ளனர் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமையின் முக்கிய பகுதியான எட்டயபுரம் சமஸ்தானமும் எட்டப்ப மன்னர்கள் வம்சத்தினரும் கலை இலக்கியத்துக்கும், மக்கள் நலனுக்கும் ஆற்றிய பணிகள் நூற்றாண்டுகளை கடந்தும் மிளிர்கிறது. சரித்திர சான்றுகளோடு கம்பீரமாக நிலைத்து நிற்கிறது என்பது நிதர்சனமான உண்மை.!