Skip to main content

கோடை விடுமுறையில் குழந்தைக்கு சம்மர் கிளாஸ் தேடும் பெற்றோரே...   வழியெல்லாம் வாழ்வோம் #7

Published on 11/04/2018 | Edited on 12/04/2018
vv 7 title


உங்கள் குழந்தைகள் நலமா - பாகம் 4

குழந்தைகளுக்கான உடற்பயிற்சி

முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் பகுதிகளில் குழந்தைகளின் உணவுப்பழக்கங்கள் குறித்து விவாதித்தோம். இந்தக் கட்டுரை குழந்தைகளின் உடற்பயிற்சி பற்றி விரிவாக பார்க்கலாம்…


குழந்தைகள் வாழ்வில் உடற்பயிற்சி இன்றியமையாதது ஆகும். 14 வயதுக்குள் குழந்தைகள் உடலினுள் சேர்ந்துவிடும் தேவையற்ற கொழுப்பு ஆகியவை பிற்காலத்தில் குழந்தைகளின் வாழ்வை பல வகைகளிலும் பாதிக்குமென்றும், அவ்வகை அதீத எடையை பின்பு குறைத்தல் மிகக்கடினம் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இன்று உடற்பயிற்சி என்றதும் குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடங்களும், கூடைப்பந்து, இறகுப்பந்து அரங்கங்களும்தான் நம் நினைவுக்கு வருகின்றன. கொஞ்சம் நாம் கடந்து வந்த வாழ்வியலைத் திரும்பிப் பார்ப்போம். நம் உடற்பயிற்சி ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த சாதாரண உடற்பயிற்சிகளை மறந்தே போனோம். எடுத்துக்காட்டாக கைகளை மேலே தூக்குதல், கீழே இறக்குதல், உட்கார்ந்து எழுதல் போன்றவற்றை மொத்தமாய் மறந்தேவிட்டோம்.

 

kids gym



அப்போது நம் ஆசிரியர்கள் நமக்குத் தந்த சிறிய தண்டனைகளில் கூட நம் உடல் நலம் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது. அந்த தண்டனைகள் பெரும்பாலும் நமக்கு உடற்பயிற்சியாகவே இருந்தன. தோப்புக்கரணம் போடுதல், ஒற்றைக்காலில் நிற்றல் என்பனவெல்லாம் மிகச்சிறந்த உடற்பயிற்சிகள். தோப்புக்கரணம் போடுதல் என்பது மிகச்சிறந்த அக்குபிரசர் எனப்படும் தூண்டுதல் சிகிச்சை என்று வெளிநாட்டு ஆய்வாளர்கள் பலர் வியந்து கூறுகின்றனர். இது யோகக்கலைகளில் ஒன்று. இன்று அவையெல்லாம் வழக்கொழிந்தே போய்விட்டன.
 

உடற்பயிற்சி என்பது உடலின் எல்லா மூட்டுகளுக்கும், தசைகளுக்கும் வேலை கொடுப்பதாகவும், அதே நேரம் இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்குப் பாதுக்காப்பானதாகவும் அமைதல் வேண்டும். எல்லாக் குழந்தைகளும் செய்யும் வண்ணம் ஒரே மாதிரியான சாதாரண பல உடற்பயிற்சிகள் உள்ளன.  ஆனால் புத்தகப் புழுக்களாக மாறிப்போன குழந்தைகளும், கற்றதை வாந்தியெடுக்கக் கற்பிக்கும் பள்ளிகளும் இவ்வகையான உடற்பயிற்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன என்று தெரியவில்லை. பொதுவாக குழந்தைகள், தங்கள் வயதையொத்த குழந்தைகளோடு விளையாடும் வாய்ப்பை பள்ளிகள் உருவாக்கித் தரவேண்டும். அந்த விளையாட்டுகள் அவர்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதோடு அல்லாமல், அவை குழந்தைகளின் உடலை வலுவாக்கும் ஊக்கத்தையும் தருகின்றன.

 

kids playing out



அதே போல் குழந்தைகள் வாழும் தெருக்களில் உள்ள பிற குழந்தைகளோடும், உறவினர்களின் குழந்தைகளோடும் நம் குழந்தைகளை விளையாடப் பழக்கவேண்டும். அப்படி விளையாடுவது சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் குழந்தைகளை முன்னேற்றும். உதாரணமாக தன்னை விட வலுவான ஒரு குழந்தையுடன் விளையாடும்போது சில வேளைகளில் தோற்றுப் போனாலும், அந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், அடுத்த முறை வெற்றி பெற செய்ய வேண்டிய உத்திகளையும் அந்தக் குழந்தை கற்றுக்கொள்ளும். அதேபோல், தன்னைவிட வயதில் குறைந்த, வலுவில் குறைந்த குழந்தையோடு விளையாடும் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும்,  பொறுமையும் இயல்பாகவே கிடைக்கத் தொடங்குகிறது.


ஆனால், இந்த நவீனகாலப் பயிற்சி முறைகள் அப்படியல்ல. பயிற்சிக்கூடங்களுக்கு அனுப்பி பயிற்றுவிக்கப்படும் குழந்தைகள் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே நோக்கி ஓடவைக்கப்படுவதால், அவர்களால் சிறு தோல்விகளைக் கூட தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமில்லாமலே போய்விடுகிறது. இதனால் உடல்ரீதியாக வலுவாக்கினாலும் உளவியல் ரீதியாக வலுவிழந்த குழந்தையாகவே இத்தகைய குழந்தைகள் வளர்கின்றன.

 

video games



அடுத்த கொடுமை "வீடியோ கேம்" எனப்படும் ஒன்று. இதை விளையாடும் குழந்தைகள் வெற்றியை எல்லாம் வெறும் தொடுதிரையில் பெற்று, திருப்தி அடைந்து, ஆனால் உண்மை வாழ்வியலை ஏற்க மறந்துபோன குழந்தைகளாகவே வளர்கின்றன. இதை நம்மைச் சுற்றி இருக்கும் பல குழந்தைகளிடம் நாம் கவனிக்கலாம்.
 

மனிதவள மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட ஒரு கருத்துக்கணிப்பில், வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள் யதார்த்த வாழ்வை ஏற்க மறந்து உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கிறது. உறுதியான உடலும், தெளிவான மனப்பக்குவத்தையும் நம் குழந்தைகளுக்கு அளிப்பது ஒன்றே நாம் நம் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றும் மிகப்பெரிய பேருதவி. அதற்கு அடிப்படை உடற்பயிற்சிகள் மட்டுமே.

(தொடரும்…)

 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

தமிழகத்திலும் அதிகரிக்கும் தெருநாய்க் கடி சம்பவங்கள்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஈரோட்டிலும் சிவகங்கையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தெரு நாய்கள் குழந்தைகளை கடிப்பது, சாலையில் செல்வோரை கடிப்பது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரின் பரபரப்பான சாலை ஒன்றில் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெரு நாய் கடித்துக் குதறியது. அந்த தெருநாயை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்தே கொலை செய்தனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க் கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.