முடக்குவாதம் மற்றும் சர்க்கரை நோய் குறித்து பல்வேறு தகவல்களை சித்த மருத்துவர் பிரியா விளக்கம் அளிக்கிறார்.
வாதத்தில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் முடக்குவாதம். ஆட்டோ இம்யூன் டிசீஸ் இப்போது அதிகமாவதற்கு காரணம் உணவு முறையும் குடும்ப வரலாறும் தான். இந்த நோய்களை குணப்படுத்த முடியாது என்று பலர் நினைக்கின்றனர். சித்த மருத்துவத்தில் இதை நிச்சயம் குணப்படுத்த முடியும். முடக்குவாதம் ஏற்பட்ட பிறகு மூட்டு வலி அதிகமாக இருக்கும். அவர்களால் தினசரி நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ள முடியாது. சின்னச் சின்ன மூட்டுகளில் கூட வலி மற்றும் வீக்கம் ஏற்படும். இதை இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை முறைகளின் மூலம் அறிய முடியும்.
சித்த மருத்துவத்தில் 4 முதல் 6 மாதங்களில் முடக்குவாத நோயை நம்மால் குணப்படுத்த முடியும். சரியான மருத்துவம் மற்றும் உணவு முறையைப் பின்பற்றுவதன் மூலம் அவர்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். இந்த நோய் ஒருவருக்கு எதனால் ஏற்பட்டது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். குடும்ப வரலாறு காரணமாக இந்த நோய் ஏற்பட்டாலும், குழந்தைப் பருவம் முதலே இந்த நோய் இருக்காது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்களுக்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றாமல் இருத்தல், துரித உணவுகளை அதிகம் உண்ணுதல் போன்ற காரணங்களால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம். அவற்றை முதலில் சரிசெய்து கொள்ள வேண்டும். இந்த நோயை உருவாக்கக்கூடிய உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களைத் தவிர்க்குமாறு முதலில் நாங்கள் ஆலோசனை வழங்குவோம். அதன் பிறகு மருந்துகளை வழங்குவோம். நாங்கள் சொல்லித் தரும் பத்திய முறையை அவர்கள் பின்பற்ற வேண்டும். சர்க்கரை நோய் குறித்த புரிதல் இன்று பலருக்கும் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு நீர்ச்சத்து மிகுந்த காய்களை உண்ணுகின்றனர்.
குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தாலும், தங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். கண் பார்வை குறைதல், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் சர்க்கரை நோயின் மூலம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நம்முடைய உடற்கட்டுகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றன என்று சித்தர்கள் சொல்லியிருக்கின்றனர். ஒவ்வொரு வகையான சர்க்கரை நோய்க்கும் ஏற்ற சிகிச்சைகள் மற்றும் செந்தூரம் போன்ற உயர்ந்த மருந்துகளையும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.