அரசியல் தலைவர்களில் தலைமைப் பண்புக்கு எடுத்துக்காட்டாக நிறைய தலைவர்களை சொல்லலாம் .ஒவ்வொரு தலைவருக்கும் தனக்கென தனி தலைமைப் பண்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள் அவர்களில் நாம் பார்க்க இருப்பது தந்தை பெரியார் அவர்கள் ."தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும் மண்டை சுரப்பை உலகுதொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார்'' என்று புரட்சிக்கவிஞன் பாவேந்தர் பாரதிதாசன் தந்தைப் பெரியார் இவர்தாம் என அடையாளம் காட்டுகிறார்.தந்தைப் பெரியாரிடம் காணப்பட்ட நேர்மை உணர்ச்சி, சிக்கனம், அஞ்சா நெஞ்சம் , சுயமரியாதை உணர்ச்சி, கொள்கைப் பிடிப்பு, புதிய சிந்தனை, சமத்துவ எண்ணம், இடையறாத உழைப்பு, தன்னல மறுப்பு, சொல் ஒன்று செயல் ஒன்று என்ற மாறுபட்ட தன்மை இல்லாமை, சொல்லிலும் எழுத்திலும் செயலிலும் தெளிந்த நிலை, மனந்திறந்த மனப்பான்மை, எதிரியும் நேசிக்கும் இனிய குணம், சுயமான படிப்பறிவு, தள்ளாத வயதிலும் ஓயாத படிப்பு முன்னர் சொல்லிய ஒரு கருத்தை மறுத்து, பின்னர் பேச வேண்டிய சூழ்நிலை வந்தபோது, இப்போது எந்தக் கருத்து சரியெனப் படுகிறதோ அதனை அஞ்சாமல் சொன்னவர்... இப்படியாக இன்னும் பல சிறப்புகளை எடுத்துக் கூறலாம். ஒவ்வொரு தலைவரிடமும் ஏதேனும் தனிச் சிறப்புகள் இருக்கும். பொதுவான பண்புகளை அறிவதோடு தனிச் சிறப்புகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு கடைபிடிக்க முயலுவது தலைமைப் பண்புகளை கற்போருக்கு மேலும் பலனளிக்கும்.

முடிவாக -தலைமைப் பண்புகள் நம் எல்லாருக்கும் தேவை. அவற்றைக் கற்றுக் கொள்ள முடியும். ஓர் அரசியல் அமைப்புக்குத்தான் தலைவராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு தொழிற் சங்கத்துக்குத் தலைவராய் இருக்கலாம். இளைஞர் மன்றத்துக்குத் தலைவராய் இருக்கலாம். விவசாயிகள் சங்கத்திற்குத் தலைவராக இருக்கலாம். விவசாயத் தொழிலாளர் அமைப்புக்குத் தலைவராகலாம். பெண்கள் சங்கத்திற்குத் தலைமை வகிக்கலாம். மாணவர் பிரிவுக்குப் பொறுப்பேற்கலாம். சுயஉதவிக் குழுக்களை வழிநடத்தலாம்.உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று சேவை புரியலாம்.
எந்த ஓர் அமைப்புக்கும் ஒருவரே வாழ்நாள் எல்லாம் தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு ஜனநாயக அமைப்பில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தலைவராக இருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் எந்த நேரத்திலும் வரலாம். வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் தகுதியும் நமக்கு வேண்டும்.
பஞ்சாயத்து சட்டப்படி இந்தியா முழுவதும் ஏராளமான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாகவும் தலைவர்களாகவும் பொறுப்பேற்றனர். எனினும் பல இடங்களில் அந்தப் பெண்களின் பெயரால் அவர்களது கணவர்களே "ஆட்சி' செலுத்திவந்தனர். இதெல்லாம் பல இடங்களில் சிறிது காலமே. பெண்களுக்கு ஓரளவு அனுபவம் கிட்டியபின் நேரடியாக தாங்களே எல்லா முடிவுகளையும் எடுப்பதற்குத் தயாராயினர். நடைமுறையில் அவர்கள் தலைமைப் பண்புகளை கற்றுக் கொண்டார்கள். பொறுப்புகளுக்கு வந்த பெண்களுக்கு தலைமைத்துவ பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டது. இன்றும் தொடர்கிறது. ஒரு சிறு குழுவானாலும் பெரும் திரளானாலும் வழிநடத்த, தலைமை தாங்க, ஒரு குறிக்கோளை முன்வைக்க, அதனை நோக்கி மக்களை அழைத்துச் செல்ல தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தலைமைப் பண்புகள் தேவைப்படுகின்றன. எனவே இவற்றை நம் எல்லாரும் கற்க முடியும் கற்று முன்னேற முடியும்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இதிலும் தொழிலாளர்களை, ஊழியர்களை வழி நடத்த, உற்பத்தியை உயர்த்த, நிறுவனத்தின் உயர்பொறுப்புகளில் இருப்பவர்கள் சிறந்த தலைமைப் பண்புகளுடன் விளங்க வேண்டியது அவசியம். அவர்களும் தலைவர்கள்தான். ஒவ்வொரு பதவிக்குக் கீழேயும் பலரை வழிநடத்த வேண்டிவரும். தொழில் திறமை அற்றவர்கள், தொழில் திறமை மிக்கவர்கள், சோம்பேறிகள், சுறுசுறுப்பானவர்கள், லட்சியப் பிடிப்பு மிக்கவர்கள், அவநம்பிக்கையாளர்கள் என பலரும் இருப்பார்கள்.

எல்லோரைப்பற்றியும் தெரிந்துவைத்துக் கொண்டு, ஒவ்வொருவருடனும் நல்லுறவுகளைப் பேணி, அவர்களை உற்சாகப்படுத்தி, உற்பத்தி இலக்கை அடைய, அவர்களை இட்டு செல்பவர் சிறந்த நிர்வாகிகளாக, சிறந்த தலைவர்களாக விளங்குவர்.தலைமைப் பண்புகளைக் கற்ற ஒருவர் சமுதாய நிறுவனங்களிலும் தலைவராகலலாம்; தொழில் நிறுவனங்களிலும் தலைவராகலாம்.சாதாரண ஊழியர்கூட , தலைமைப் பண்புகள் கொண்டிருந்தால் அவர்கள் ஒருநாள் தலைமைப் பொறுப்புக்கு வர முடியும். எனவே, நான் ஏதோசாதாரண கடைநிலை ஊழியன், எனக்கெதற்கு "வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்' என்று நினைக்க வேண்டியதில்லை. ஊக்கம் இருந்தால் முன்னேறும் லட்சியம் மூளையில் வளர்ந்தால் போதும், கடைநிலை ஊழியரும் தலைவராகலாம்.எனவே ஆண், பெண், மூன்றாவது பாலின வேறுபாடுகளை யெல்லாம் மீறி எவர் வேண்டுமானாலும், தலைவராக உயர முடியும்!