Skip to main content

வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையை எப்படி சரிசெய்யலாம்? -  ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 29/07/2024 | Edited on 29/07/2024
kirthika tharan explained acid reflux

ஆசிட் தொந்தரவிற்கு அளித்த சிகிச்சை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

சாப்பிட்ட பிறகு வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை அமில ரிஃப்ளக்ஸ் (Acid Reflux) என்று அழைக்கிறோம். இது சிலருக்கு அமிலம் எதுக்களித்து தொண்டை வீக்கம், உணவுக்குழாயில் உணவுத்துகள் மாட்டிக்கொள்வது போன்ற சிக்கல்களை உருவாக்கும்.

ஒரு மத்திய அரசு அதிகாரி என்னிடம் வந்தார். அவருக்கு வயிற்றில் எப்போதும் அமிலத்தன்மை இருப்பதாகவும் அது எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறினார். பல வருடங்களாக நிறைய மருத்துவர்கள் பார்த்து பல்வேறு மாத்திரைகளை எடுத்திருந்தார். இதனால் அவருக்கு இயற்கையாக உற்பத்தியாகும் அமிலத்தின் அளவு குறைந்து அந்த அதிகாரிக்கு வேறு சில வயிற்று பிரச்சனைகள் அதிகரித்திருந்தன.

முதலில் அவரது மருத்துவரை அணுகி அவர் எடுத்துக்கொண்டிருந்த மருந்துகளை கொஞ்சம் துணிந்து நிறுத்தினோம். அதிலேயே அவரது ஆசிட் தொந்தரவு சில மாற்றங்கள் காட்ட அப்பொழுதே  உணவு பழக்கத்தை மாற்றினோம். அவர் அதிக அளவில் சாதம் மற்றும் பருப்பு வகைகளை மட்டுமே உட்கொண்டு வந்தார். வேறு சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, அவரது உணவு முறையில் மாற்றம் செய்தோம். சர்க்கரை, பழங்கள், ரீபைண்ட் ஆயில் ஆகியவற்றை தவிர்க்கச் சொன்னோம். அதே நேரத்தில், சூப், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளச் சொன்னோம். 

மேலும் ஸ்ட்ரெஸ் அதிகம் காணப்பட்டதால் தெரப்பியும் அளித்து தூக்கத்தையும் சரி செய்த பின் நல்ல முன்னேற்றம் தெரிந்து வயிற்றில் அமிலம் சரியான அளவில் சுரக்க ஆரம்பித்தது. உணவு பழக்கத்தை மாற்றியதன் மூலம் அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சனைக்கு தீர்வு காண முடிந்தது. முன்பு ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாமல் சிரமப்பட்ட அந்த அதிகாரி, இப்போது விரதம் இருக்கும் அளவிற்கு ஆரோக்கியமாக மாறியிருக்கிறார். வாழ்க்கை முறை, டையட், ஸ்டிரெஸ், தூக்கம் போன்வற்றை சரிசெய்வதன் மூலம் எந்தப் பிரச்சனையையும் சரி செய்யலாம்.