ஜிஎம் டயட் என்றால் என்ன? இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னவென்று ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் நமக்கு விளக்குகிறார்.
உடல் எடையைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் ஜிஎம் டயட். முதலில் நல்லதாக நம்பப்பட்ட இந்த முறை, ஆரோக்கியமற்ற ஒரு முறை என்பது அதன் பிறகு தான் தெரிந்தது. இதில் முதல் நாள் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். இரண்டாவது நாள் அனைத்து விதமான காய்கறிகளையும் சாப்பிடுவார்கள். மூன்றாவது நாள் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர மற்ற அனைத்தையும் சாப்பிடலாம். நான்காவது நாள் வாழைப்பழம் மற்றும் பால் சாப்பிடலாம். ஐந்தாவது நாள் இறைச்சி அல்லது சீஸ் சாப்பிடலாம்.
ஆறாவது நாளும் இறைச்சி மற்றும் சீஸ் சாப்பிடலாம். ஜிஎம் சூப் என்கிற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு அதை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆறாவது மற்றும் ஏழாவது நாளில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த டயட் முறை அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபணமாகவில்லை. ஆனால் இந்த டயட்டால் உடல் இளைப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்த டயட் முறையில் புரோட்டின் அதிகம் கிடையாது. இது குறித்த இருவேறு கருத்துக்கள் எப்போதும் நிலவுகின்றன.
ஊட்டச்சத்து நிபுணராக இதை நம்மால் ஊக்குவிக்க முடியாது. சாலட், காய்கறிகள், பழங்கள் போன்றவை இந்த டயட்டின் பிரதான உணவுகள். சாதம் போன்ற உணவுகளை நீங்கள் உண்ணும்போது கிடைக்கும் கலோரி இதில் கிடைக்காது. துரித உணவுகளை விட்டாலே உடல் எடை குறையும். என்ன இருந்தாலும், இன்னும் மருத்துவத்துறையால் அங்கீகரிக்கப்படாத ஒரு உணவு முறைதான் ஜிஎம் டயட். 1985 காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறித்த புரிதல் அதிகம் இல்லாததால் இந்த டயட் முறை அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போது மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை.