Skip to main content

கணவனின் புகைப்பழக்கம் மனைவியையும் பாதிக்குமா?  -  டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

DrRajendran Health tips

 

நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்

 

சிலருக்கு குடும்ப வரலாறு காரணமாக நோய்கள் வரலாம். சிலருக்கு அடிபட்டதால், ரத்த ஓட்டம் காரணமாக, தொற்றுகள் காரணமாக நோய்கள் ஏற்படலாம். உணவு, குடிநீர் என்று நம்மைச் சுற்றியிருக்கும் விஷத்தன்மை நம்முடைய ஆரோக்கியத்திற்கு பங்கமாக இருக்கிறது. சுற்றுச்சூழல் காரணமாக ஏற்படும் நோய்கள், மனநோய்கள் என்று பல்வேறு வகையான நோய்கள் இருக்கின்றன. சிலருக்கு அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் தேவையற்ற பழக்கங்கள் காரணமாக நோய்கள் ஏற்படலாம். புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவைதான் பெரும்பான்மையானோருக்கு நோய்கள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன. 

 

புகைப்பிடிக்கும்போது நிக்கோட்டின் என்கிற நச்சுப்பொருள் ரத்தத்தில் கலக்கிறது. அது உடலின் எந்தப் பகுதிக்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடலில் ரத்த ஓட்டம் என்பது அனைத்து பகுதிகளுக்கும் செல்லக்கூடியது. உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கக்கூடிய தன்மை இதற்கு இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 35 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் எங்களுடைய மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருந்தது. நெஞ்சுவலியுடன் அவர் நம் மருத்துவமனைக்கு அதிகாலையில் வந்தார். 

 

குறிப்பிட்ட ஒரு இடத்தில் அவருக்கு இரத்தக் குழாயில் 90% அடைப்பு இருந்தது. அதை நாம் சரிசெய்து இப்போது அவர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். ஹார்ட் அட்டாக் என்பது அனைவருக்குமே ஏற்படக்கூடிய ஒன்றுதான். அந்தப் பெண்ணின் கணவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. அவரிடம் விலாசம் வாங்கி ஒருநாள் அவர்களுடைய வீட்டுக்கு நான் சென்றேன். அவர்களுடைய வீட்டுக்குள் பொது பயன்பாட்டிற்கு ஒரே ஒரு ரூம் தான் இருந்தது. அங்கும் சிகரெட் வாடை அடித்தது. தன்னுடைய கணவர் எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டே இருப்பார் என்று அவருடைய மனைவி கூறினார். 

 

கணவன் புகைப்பிடிப்பதால், அருகிலிருந்து அதை சுவாசிக்கும் மனைவியும் பாதிக்கப்படுகிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு அது ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று நான் கூறினேன். இதற்காகவாவது புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவருடைய கணவருக்கு நான் அறிவுரை கூறினேன். அவரும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழக்கத்தைக் கைவிட்டார். இப்போது அந்தக் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கிறது. சிகரெட் செலவு மிச்சமாகி, அவர்களுடைய பொருளாதார நிலையும் முன்னேற்றமடைந்துள்ளது. புகை, மது போன்ற தவறான பழக்கங்களைக் கைவிட்டு அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.