26 மார்ச் - கூகுள் நிறுவனர் லேரி பேஜ் பிறந்தநாள்
சென்னையில் இருந்துகொண்டு கேப்டவுனில் தண்ணீர் இல்லையென்பது நமக்குத் தெரிகிறது. கிறிஸ்டோபர் நோலனின் இரண்டாவது படம், புத்தாண்டைக் கொண்டாட சிறந்த இடம், பாங்காக்கின் பெஸ்ட் ஹோட்டல், ஃபிரான்ஸின் சிறந்த மாடல்... என நாம் தெரிந்து கொள்ள நினைக்கும் அனைத்தையும் தன் வழி கொண்டுவந்து இன்று நம் அறிதலின் வாயிலாக இருப்பது கூகுள். ஒரு வகையில் நம்மை சோம்பேறியாக்கி இருந்தாலும், ஒருவரது சிந்தனை இந்த உலகத்தின் வாழ்க்கை முறையையே மாற்ற முடியும் என்பதன் நிகழ்கால உதாரணம் கூகுள்.
கூகுளின் இந்த வெற்றிக்கு இருவர் தான் காரணம், ஒருவர் 'லேரி பேஜ்' மற்றொருவர் 'செர்ஜி பிரின்'. இவர்கள் இருவரும் இல்லையெனில் இந்த கூகுள் என்ற ஒன்றை நாம் பார்த்திருக்கவே மாட்டோம். வேண்டுமானாலும் வேறொரு பெயரில் வேறு யாராவது கண்டுபிடித்திருக்கலாம். தற்போது இவர்கள் தானே கண்டுபிடித்திருக்கிறார்கள்? அதிலும் லேரிக்கு இன்று நாற்பத்தி ஐந்தாவது பிறந்தநாள் வேறு. எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அவரைப் பற்றிய சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.
- கூகுளின் தாய் நிறுவனத்தின் பெயர் அல்ஃபபெட். அந்த நிறுவனத்தை நிறுவிய இருவரில் ஒருவர் லேரி பேஜ். அதுமட்டுமில்லை, இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் (CEO - Chief Executive Officer). சுந்தர் பிச்சையையும் இவரையும் குழப்பி கொள்ளாதீர்கள். சுந்தர் கூகுளுக்கு சிஇஓ, ஆனால் இவரோ அல்ஃபபெட் என்னும் கூகுளின் மேலிடத்துக்கு சிஇஓ.
- கூகுள் என்ற வலைதளத்தை இன்று 300 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளில் கூகுளில் இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட விஷயங்களைத் தேடிப் பார்க்கிறார்கள். இணையத்திலேயே அதிகமாக பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அல்ல, நொடிக்கு நொடி அதிகமாகிறது.
- லேரி பேஜ்ஜூம் ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சும் நல்ல நண்பர்கள். தொழில் நிமித்தமாகவும் தனிப்பட்ட முறையிலும் இருவருக்கும் நல்ல உறவு இருந்தது என்கின்றனர்.
- லேரியின் பெற்றோர்களும் கல்லூரி கணினி ஆசிரியர்களாக இருந்ததால் லேரிக்கும் கணினியின் மீது சிறு வயதிலிருந்தே மோகம் இருந்துள்ளது. போகப் போக அதில் வல்லுனராக வருவார் என்று அன்று யார் கண்டது?
- அந்தக் காலகட்டத்தில் அரிதாக இருந்த கணினியை தன் பள்ளிப் படிப்பின் போதே வீட்டில் வைத்து கற்றுக்கொள்ளும் அளவுக்கு இவருக்கு வசதி இருந்தது. பெற்றோரும் கல்லூரி ஆசிரியர்கள் என்பதால் அறிவியல், கணினி சார்ந்த புத்தகங்களையும் வாசிக்க வாய்ப்பிருந்தது.
- மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே இன்க்ஜட் பிரின்டரை உருவாக்கியுள்ளார். 'மேஸ் அண்ட் ப்ளூ' என்ற சோலார் கார் குழுவில் கல்லூரிப் படிப்பின் போது சேர்ந்து, அந்த சோலார் கார் உருவாக்கத்திற்காக உதவியுள்ளார்.
- லேரியும், பிரினும் 1995 ஆண்டில் தான் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர். முதல் சந்திப்பில் இருந்து, கூகுளை நிறுவியது முதல் தற்போதுவரை அவர்களுக்குள் வாக்குவாதம் என்ற ஒன்று இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்று சொல்கின்றனர்.
- ஒரு சின்ன குடோனில் ஆரம்பிக்கப்பட்ட இவர்களது நிறுவனம் இன்று உலகமெங்கும் படர்ந்துள்ளது. இவர்கள் முதல் முதலில் வாடகைக்கு எடுத்த குடோன் யாருடையது தெரியுமா? யூ-ட்யூப் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ சூசனுடையது.
- 45 வயதாகும் லேரி ஒரு நோய் காரணமாக தன் குரலை சிறிது சிறிதாக இழந்து வருகிறார்.
ஒரு தனி மனிதனின் எண்ணம், கனவு இந்த உலகத்துக்கே பயன்படும், ஒரு நிறுவனம் இந்த உலகின் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் என்று நிறுவி ஆசைகளுக்கு எல்லை எதுவுமில்லை என்று உணர்த்தியிருக்கிறார் லேரி. ஹாப்பி பர்த்டே லேரி!