Skip to main content

பனி மனிதன் அணிந்த உடை! உடையின் கதை #3

Published on 20/06/2018 | Edited on 20/06/2018
udaiyin kadhai



கி.மு.10 ஆயிரம் ஆண்டுகளில் உலகின் மொத்த ஜனத்தொகை 50 லட்சமாக உயர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் அவர்கள் அமெரிக்ககண்டம் வரை பரவியிருந்தனர். பனி உருகத் தொடங்கியது. தட்பவெப்ப நிலை ஓரளவு சீராகியது. புதிய நிலப்பகுதிகளில் குழுக்களாகத் தங்கிய அவர்கள், தாங்கள் தங்கிய இடங்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற வகையில் விவசாயம் செய்யத்  தொடங்கினர். ஆனாலும், முறையான நெசவுக்கருவி எப்போது உருவாக்கப்பட்டது என்பதுதெரியவில்லை.

 

mesabatomia

மெசபடோமியா உடை



தற்போதைய இராக்கில் இருந்தது ஜர்மோ என்ற இடம். இங்குதான் முதன் முறையாக ஆடைகள் நெய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கி.மு.7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் நெசவு செய்யும் பழக்கம் தொடங்கி இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில்தான் அலைந்து களைத்துப் போன மனிதர்கள் ஓரிடத்தில் தங்கி வேலை செய்யும் பழக்கம் ஏற்பட்டது.
 

mesabatomia civilisation



நாகரிகத்தின் தொட்டில் என்று  அழைக்கப்படும் மெசபடோமியாவில் பெண்கள்தான் உடையை நெய்யத் தொடங்கினர். தொடக்க கால உடைகள் ஒரே துணியை பயன்படுத்தும் வகையில் இருந்தன. செவ்வகமான துணியை இரண்டாக மடித்து தலை நுழையும் வகையில் ஒரு துவாரம்  விடப்படும்.  அதை தலையில் கோர்த்து, இருபுறமும் முட்களால் இணைத்துக் கொண்டால் பெண்களுக்கான மேலாடை தயார்.

 

 


மேலாடையைக் காட்டிலும் இடுப்பில் அணியும் குட்டையான ஆடைகளுக்கேபெண்கள் முக்கியத்துவம் அளித்தனர். அந்த உடையும் இடுப்பில் அணியும் பட்டையுடன் திரி திரியாய் தொங்கும் வகையில் அமைந்திருந்தது. இன்றைக்கு அத்தகைய உடையை கவர்ச்சி நடனத்தின் போது அணிகிறார்கள். கழுத்தில் தங்களுக்கு கிடைத்த உலோகத்தால் ஆன நகைகளை அணிந்தனர். இந்த  பாசிபவளங்கள் மார்புகளை மறைக்கும் வகையில் செய்யப்பட்டு இருந்தன. ஆண்கள் மிகவும் சிக்கனமாகவே உடை அணிந்தனர்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அன்றைய சமூகத்தில் உயர்குடியினர் மட்டுமே ஆடைகள் அணிந்திருந்தது  தெரிய வந்துள்ளது. உழைப்பாளி மக்களும் சிறுவர்களும் உடை அணியவில்லை என்றே மானுடவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது, எல்லோருக்கும் உடை கிடைக்குமளவுக்கு துணிகளை உற்பத்தி செய்ய போதுமான தொழில்நுட்பம் இல்லாததும் ஒரு  காரணம். இந்தியா விடுதலை அடையும் வரையும், விடுதலைக்குப் பிறகும்கூட நமது கிராமப்புறங்களில் கோவணம் மட்டுமே கட்டிய மனிதர்கள் ஏராளமாக இருந்தனர்.
 

 

ice man



60களில் கூட கிராமத்தில் வேட்டியும் துண்டுமே பெரும்பாலோர் உடையாக இருந்தது. ஒரு ஜோடி உடை வைத்திருந்தால் பெரிய  விஷயமாகக் கருதப்பட்டது. பல சமூகங்களில் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்தச் சூழலை நினைவுக்குக் கொண்டு வந்தால்,   அன்றைய   நிலையை   உணரமுடியும். உடையின் கதையில் இதுவரை கிடைத்த  சுவாரஸ்யமான ஆதாரம் எது தெரியுமா? ஆல்ப்ஸ் மலையில் பனியில் உறைந்து கிடந்த பனிமனிதனின் உடலைக்  கண்டுபிடித்ததுதான்.

1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இத்தாலியைச் சேர்ந்த எரிகாவும் ஹெல்மட் ஸைமனும் ஆல்ப்ஸ் மலையில் வலம் வந்தனர்.  இருவருமே மலையேற்றத்தில் ஆர்வம் உடையவர்கள். செப்டம்பரில் ஆல்ப்ஸ் பனி உருகும் நேரம். மலையின் பனி உருகிய பகுதியில் அவர்கள் இருவரும் வந்த போது, ஒரு மனித உடலைப் பார்த்தனர். பனியில் நன்றாக பதப்படுத்தப்பட்ட நிலையில் அது இருந்தது. அந்த உடலுக்கு அருகே மரக்குடுவை ஒன்றும் இருந்தது. உடனே மானுடவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

 

 


அந்த மனிதன் 5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். வேட்டையாடி உயிர் வாழ்ந்தவன். முதுகில் அம்பு குத்தியதால் தப்ப முடியாமல் பனியில் விழுந்து உயிர் இழந்திருக்கலாம் என்று மானுடவியல் நிபுணர்கள் கூறினர். அவனுடைய காலில் தோலினால் பின்னப்பட்ட செருப்பு அணிந்திருந்தான். உடலுக்கு அருகே அவனுடைய உடையின் மிச்சங்கள் கிடந்தன. தலையில் மயிர்களால் பின்னப்பட்ட குல்லாய் அணிந்திருந்தான். அவனுடைய உடை வித்தியாசமாக இருந்தது. கிடைத்த மிச்சங்களை வைத்து அவன் அணிந்த உடை எப்படி இருக்கும் என்று மானுடவியலாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

 

 

egypt

எகிப்து


உலகில் இதுவரை கிடைத்த பதப்படுத்த உடல்களில் முழுமையானது பனிமனிதனின் உடல்தான். மற்றபடி, எகிப்தில் கிடைத்த  மம்மிகள் அனைத்துமே, அதற்கு பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவைதான். நெசவு செய்ய கற்றுக் கொள்வதற்கு முன்  மனிதர்கள் நார்களை முடிச்சிட்டு உடை தயாரித்தனர். பிறகு நார்களைக் கோர்த்து நெருக்கமான உடையை உருவாக்கினர்.  நார்களை அல்லது சணலை அடித்து துவைத்து நைந்து போகும்படி செய்து மெல்லிய நூலிழைகளாக மாற்றினர். அந்த  நூலிழைகளை பின்னக் கற்றுக் கொண்டனர்.

 

 


உலகம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் பரவிய மனிதர்கள் தங்கள் உடைகளைத் தயாரிக்க ஒரே மாதிரியான கச்சாப்  பொருட்களை பயன்படுத்தவில்லை. எகிப்தில் சணல் செடிகளில் இருந்து எடுக்கப்பட்ட நார்களை பயன்படுத்தி உடைகளை தயாரித்தனர். தெற்கு ஐரோப்பாவில் செம்மறி ஆடுகளின் மயிர்களைச் சேகரித்து அவற்றைபசைப் பொருள்களில் நனைத்து ஒரு வித ஒட்டுக் கம்பளம் தயாரித்தனர்.

சீனாவில் பட்டுப் புழுக்களில் இருந்து எடுக்கப்பட்ட இழைகளைப் பயன்படுத்திபட்டுத் துணிகளை உருவாக்கி பயன்படுத்தினர். இந்தியாவிலும், பெரு, கம்போடியா ஆகிய பகுதிகளிலும் பருத்தியைபயன்படுத்தி துணிகளை தயாரித்தனர். மத்தியக் கிழக்கிலும், ஐரோப்பாவிலும் வாழ்ந்த சமூகத்தினர், கி.மு.6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், செம்மறி ஆடுகளை  வளர்த்தனர். செம்மறி ஆடுகளின் ரோமத்தைக் கொண்டுதான் முதல் நெசவு ஆடை தயாரிக்கப் பட்டது. அந்த ஆடையும்  நெய்யப்படாமல் செய்யப்பட்டது என்பதுதான் நிஜம்.

 

ice man



நெசவுக் கருவியின் உதவியில்லாமல், செம்மறி ஆட்டின் மயிரை நன்றாக நெய்யும்படி அடித்துத் துவைத்து, பசைப் பொருளால்  ஒட்டி உடையை தயாரித்தனர். பின்னர், மயிரை நூல் பிரிகளாக்கி, நார்களுக்கு ஊடாக பின்னி கம்பளிகளை உருவாக்கினர்.  இப்படித் தயாரிக்கப்பட்ட கம்பளிகளை உடையாகவும், கூடாரங்களின் மேற்கூரைகளாகவும் அவர்கள் உபயோகப்படுத்தினர்.

 

 


ஐரோப்பாவில் கி.பி.5ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டுவரை பயன்படுத்தினர். இப்போதும்கூட கம்பளியை வேறு  செயற்கை இழைகளுடன் கலந்து தயாரிக்கப்பட்ட உடைகளை ஐரோப்பியர்கள் விரும்பி அணிகின்றனர். இதற்கு காரணம் அந்த  உடையில் உள்ள கதகதப்பு. சீனர்கள்தான் பட்டு உடையை அறிமுகப்படுத்தியவர்கள். கி.மு.3 ஆயிரம் ஆண்டுகள் வாக்கில், பட்டுப் புழுக்களில் இருந்து பட்டு நூலை பிரித்தெடுத்து துணியை நெய்தனர்.

(இன்னும் வரும்)