நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டன ஸ்மார்ட்போன்கள். அவற்றைத் தவிர்த்துவிட்டு என்னால் ஒரு நிமிடம் கூட இருக்கமுடியாது என்று சொல்லக்கூடிய இளசுகளும், தலைமுறை இடைவெளியை நிரப்புவதற்காக வயதில் மூத்தவர்களும் ஸ்மார்ட்போன்களே கதி என்று முடங்கிக் கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
இப்படி எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக் கிடப்பது, அவையில்லாமல் எதையோ இழந்ததுபோல் இருக்கும் நிலைக்கு போனோஹோலிசம் (Phonoholism) என்ற பெயரை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் வைத்திருந்தனர். அளவுக்கதிகமாக செல்போன் பயன்படுத்துவதால் பதட்டம், அதிக செயல்திறன் எனப்படும் ஹைபர் ஆக்டிவிட்டி, கவனக்குறைபாடு, கண்பார்வை மங்குதல் மற்றும் முதுகுத் தண்டவடத்தில் பாதிப்பு என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில், ‘செல்போன் இல்லாத ஒரு நாள்’ என்ற புதிய முயற்சியை போலாந்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் ஒரு நாள் முழுக்க செல்போன் இல்லாமல் பலர் இருந்துகாட்டி, அதன் பலன்களை பட்டியலிட்டுள்ளனர். குறிப்பாக நண்பர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்ததாகவும், குறுஞ்செய்திகளின் மூலம் தொடர்பு கொள்வதை விட நேரில் சென்று பேசுவது மகிழ்ச்சியைத் தருவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போன் என்பது வெறும் தொழில்நுட்பமாக மட்டுமின்றி, நம் ரகசியங்கள் அத்தனையும் அறிந்த மூர்க்கத்தனமான சாதனமாக மாறியிருக்கிறது. சமகாலத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஸ்மார்ட்போன் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் காரணமாக இருப்பதாக சைபர் கிரைம் தகவல்கள் சொல்கின்றன. அதைத் தவிர்த்துவிட்டு அல்லது குறைத்துவிட்டு இயல்பான வாழ்க்கையை, அட்லீஸ்ட் ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்கலாமே?