முதியோர் இல்லங்களில் பெற்றோரை விடுவது தொடர்பான ஒரு உண்மைச் சம்பவம் குறித்து நமக்கு மனநல சிறப்பு மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்.
வயதான ஒருவரை அவருடைய மகனும் மகளும் என்னிடம் அழைத்து வந்தனர். அவரைத் தங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று அவர்கள் கூறினர். ஒரு காலத்தில் அவர் நன்கு வேலை செய்துகொண்டிருந்தவர் தான். பிறகு அவரால் வரும் வருமானம் குறைந்தது. குடும்பத்தில் அனைவரிடமும் எப்போதும் கோபமாகவே அவர் பேசுவார். இது அவருடைய குடும்பத்தினரின் மனதில் மாறாத வடுவாக இருந்தது. ஒருகட்டத்தில் அவரை முதியோர் இல்லத்தில் விட வேண்டும் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
அவரை முதியோர் இல்லத்தில் விடுவதற்கு அவருடைய மனைவியும் சம்மதித்தார். வீட்டில் அவர் எப்போதுமே ஏதாவது பிரச்சனை செய்துகொண்டே இருக்கிறார் என்று கூறினர். ஏதேனும் நோயால் அவர் இப்படி நடந்துகொள்கிறாரா என்று விசாரித்தேன். ஆனால் நீண்ட காலமாகவே அவர் இப்படித்தான் இருக்கிறார் என்று கூறினர். அனைவரையும் எப்போதும் அதீதமாக கட்டுப்படுத்தும் ஒருவராக அவர் இருந்திருக்கிறார். அந்தக் காலம் போல் வயதானவர்களைக் கடைசிவரை பாதுகாத்து அனுப்பி வைக்கும் பழக்கம் இன்றைய வேகமான வாழ்க்கையில் சாத்தியமில்லை.
பெரியவர்கள் தங்களுடைய குடும்பத்தினரிடம் மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டும். அன்பாகப் பழக வேண்டும். என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் காலம் இல்லை இது. அதன் காரணமாகவே முதியோர் இல்லங்கள் இப்போது அதிகரித்து வருகின்றன. பெற்றோரை விட்டுவிட்டு பிள்ளைகள் வெளிநாடு செல்வது குறித்து சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் பெற்றோருக்காக தங்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்புகளை அந்தப் பிள்ளைகள் இழந்துவிட்டால், பிற்காலத்தில் அவர்கள் தங்களுடைய குடும்பத்தைப் பராமரிப்பது கடினமாகிவிடும்.
அவ்வாறு வெளிநாடு செல்லும் பிள்ளைகள் இங்கு தங்களுடைய பெற்றோருக்கு தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டுச் செல்ல வேண்டும். இப்போது முதியோரைப் பார்த்துக்கொள்ள நிறைய வழிகள் இருக்கின்றன. அந்த ஏற்பாடுகளை அவர்கள் செய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்போது அதைத் தடுப்பது தவறு. பெற்றோரை வயதான காலத்தில் பிள்ளைகள் தனித்து விடுவது என்பது முடிவில்லாத ஒரு பிரச்சனையாகவே தொடர்கிறது.