வயதின் மூப்பினால் உணவு எடுத்துக் கொள்ளுவதில் செலுத்த வேண்டிய அக்கறையான தன்மையைப் பற்றியும், நோயின் தன்மையை உறுதிப்படுத்தி தெரிந்து கொள்ள பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்கம் அளிக்கிறார்.
என் உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்தார். தன் கணவர் என்னைப் பார்க்க அனுப்பியதாகவும் எனக்கு உடலில் எந்த சிக்கலும் இல்லை எல்லாரும் என்னை நன்றாகத்தான் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் எனக்கு பசிக்கவே மாட்டேன் என்கிறது. உணவு எடுத்துக் கொள்ளவும் விருப்பமே இல்லாமல் இருக்கிறது என்று சொன்னார். அத்தோடு எதுவுமே ஜீரணமே ஆகாமல் இருக்கிறது என்றும் சொன்னார். அவரது சிக்கலை எல்லாம் சொன்ன பிறகு நான் ஒரு கேள்வி கேட்டேன்.
என்ன தான் வேலை செய்றீங்க வீட்டில் என்றதும், நான் ஒரு வேலையுமே செய்வதில்லை என்னை யாரும் செய்யவும் விடுவதில்லை. நடப்பீர்களா என்றதும் நடப்பது எல்லாம் இல்லை, சாப்பிடுவேன், தூங்குவேன் என்றார். சில பரிசோதனைகளுக்குப் பிறகு இசிஜி எடுத்து வாருங்கள் என்றேன். எனக்கு ஜீரணப்பிரச்சனை தானே நான் ஏன் இசிஜி எடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஒரு சோதனை தானே எடுத்து வாருங்கள் என்று கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தேன்.
பரிசோதனை முடிவு வந்ததும் இதயம் மிகவும் பலவீனமாக இருப்பது தெரிய வந்தது. எந்த வேலையுமே செய்யாமல் உணவு மட்டுமே எடுத்துக் கொண்டதும் உணவு உண்ணுவது மட்டுமே வேலை என்பதை உணர்ந்த இதயம் பலவீனமாக மாறி விட்டது என்பதை சொல்லி புரிய வைத்தோம். வயதானவர்களை மருத்துவ ரீதியாக அணுகும் போது குறிப்பிட்ட நோயின் அறிகுறிகள் இல்லாமல் கூட இருக்கும். ஆனால் அந்த சிக்கலால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மேலும் வயதானவர்களுக்கு நோயின் தன்மை குறித்தெல்லாம் புரிந்து கொள்ள முடியாது. வயதானவர்களுக்கு நிறையா நோய்கள் இருக்கலாம், பிளட் பிரசர், ஓவர் கொலஸ்ட்ரால், டயாப்பட்டீஸ், முட்டி தேய்மானம், ஜீரணப்பிரச்சனை, லிவர், கிட்னி, கணையம் இயங்கும் தன்மையில் மாற்றம் இருக்கலாம். மூளையின் செயல் திறனும் மாற்றம் ஏற்படலாம்.
சில நோய்களை பரிசோதனை செய்தே ஆகவேண்டும். அப்போது தான் அதன் தன்மையும் வீரியமும் புலப்படும். மேலே சொன்ன வயதானவர்கள் விசயத்தில் ஜீரண சிக்கல் என்று வந்தார்கள் . ஆனால் இசிஜி எடுத்து பார்த்த போது தான் தெரிந்தது அது இதயம் சம்பந்தப்பட்ட சிக்கல் என்று. இதைத்தான் சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்கிறோம். பல்வேறு மற்ற நோயின் தாக்கத்தால் இவை ஏற்படும். இதையெல்லாம் முன் வைத்து வயதானவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்துகொள்வது நன்மை பயக்கும்.