அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை குறித்து டாக்டர் அருணாச்சலம் சில விசயங்களை நமக்கு விளக்கமளிக்கிறார்
எந்த நோயும் இல்லாத இளைஞர் ஒருவருக்கு அதிகமாக சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டால் அவர் அதிகமாக தண்ணீர் குடிப்பவராக இருக்கலாம். ஆபீஸில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் பகல் நேரங்களில் ஒன்றரை லிட்டர் + 500 மில்லி லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. கட்டட வேலை பார்ப்பவர்கள் இரண்டே முக்கால் லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். வியர்வை அதிகமாக வெளியேறும் வெயில் காலங்களில் அனைவருமே கொஞ்சம் அதிகம் தண்ணீர் குடிக்கலாம்.
ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு 7 மணிக்கு மேல் அதிகம் தண்ணீர் குடிக்கக் கூடாது. அளவுக்கு அதிகமாக தண்ணீரோ குளிர்பானமோ குடித்தால் சிறுநீர் அதிகமாக வெளியேறும். இரவில் எழுந்து சிறுநீர் கழிப்பவர்கள் மீண்டும் தண்ணீர் குடித்துவிட்டு படுப்பார்கள். அதனால் மீண்டும் அவர்கள் எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இரவு 7 மணிக்கு நன்றாகத் தண்ணீர் குடித்துவிட்டு, இரவு உணவின்போது தேவையான அளவு தண்ணீர் குடிப்பதே போதுமானது.
கேழ்வரகு கூழ் குடித்தால் அதிகம் சிறுநீர் கழிக்க வேண்டி வரும். பனங்கிழங்கு சாப்பிட்டால் சிறுநீரில் பனங்கிழங்கு வாசம் வரும். காலையில் கழிக்கும் முதல் சிறுநீரில் அதிக வாடை வரலாம். இல்லையெனில் தொற்று காரணமாகவே அது ஏற்படும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். தண்ணீர் குடிக்காமல் உடலில் வறட்சி ஏற்பட்டால், அதன் மூலம் தொற்று ஏற்பட்டு, சிறுநீரில் நாற்றம் ஏற்படும். உடலுறவுக்குப் பின் ஆணும் பெண்ணும் உறுப்புகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
அவ்வாறு சுத்தம் செய்யவில்லை என்றால் கிருமிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பலருடன் உடலுறவு வைத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீர் பாதையில் கிருமி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிறுநீரில் நாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து, என்ன கிருமி என்பதைக் கண்டறிந்து, தேவையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். எப்போதும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.