Skip to main content

முதுகு வலி வராமல் தடுப்பது எப்படி? - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 05/12/2024 | Edited on 05/12/2024
doctor rajendran explains about Back pain

‘நக்கீரன் நலம்’ சேனல் வாயிலாக ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன், பல்வேறு நோய்களைப் பற்றியும் அந்த நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வதைப் பற்றியும் பேசி வருகிறார். அந்த வகையில் முதுகு வலி எதனால், யாருக்கு ஏற்படுகிறது என்பது குறித்தும் அதை எப்படி குணப்படுத்தலாம் என்பது குறித்தும் நம்மோடு பகிர்ந்துள்ளார்.

முதுகு தண்டுவடம் முன்புறமாக இழுக்கப்படுவதால் சில நேரங்களில் முதுகு வலி ஏற்படும். இந்த பிரச்சனை பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களிடையே அதிகமாக இருக்கும். உடல் எடை அதிகம் உள்ளவர்களிடமுள்ள தொப்பை,  தண்டுவடத்தை முன்புறமாக இழுத்து வளைத்துவிடும். அதேபோல் கண்டபடி தூங்குவதால் எழும்பு தேய்மானம் ஏற்படும். அதனால் முறையாகத் தூங்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் எழும்பு தேய்மானத்தைத் தவிர்த்து முதுகு தண்டுவடத்தை உறுதியாக வைத்திருக்க முடியும், வலியும் ஏற்படாது. 

கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துகள் உடலிலுள்ள இரத்த ஓட்டத்திற்கும் எலும்புகளின் வலிமைக்கும் மிக முக்கியமானது. பழச்சாறு குடிப்பதன் மூலம் கால்சியம் கிடைக்கும். அதிகாலை சூரிய ஒளியில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கும். வைட்டமின் டி சத்து குறைவாக இருப்பவர்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். அதிகப்படியான வைட்டமின் டி காணப்படும் உடலை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அதனால் மருத்துவர்கள் ஆலோசனை பெற்றுக்கொண்டு அதை அனைவரும் சரி செய்துகொள்ளவேண்டும். ஏனென்றால் அனைத்து சத்துகளும் உடலுக்கு நல்லதுதான். ஆனால் அதிகப்படியான சத்துகள் விஷமாக மாற வாய்ப்பிருக்கிறது. முதுகு வலி என்பது சாதாரண பிரச்சனையாக இருந்தாலும் சில நேரங்களில் மிகவும் ஆபத்தான சூழலுக்கும் கொண்டுபோய்விடும். சில நேரங்களில் முதுகெலும்பு எலும்புகளுக்கு இடையில் இருக்கும் ரப்பர் வட்டு சிதையும் அளவிற்குப் பிரச்சனை ஆகிவிடும். அது அறுவை சிகிச்சை வரை செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அந்த நிலைவரை செல்லாமல் சுலபமாகத் தடுக்க வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டும். எனவே முதுகின் பலத்தை நல்லவிதமாகக் கவனித்துக்கொண்டால் பெரிய பிரச்சனைகளை வருவதை தவிர்க்க முடியும். முதுகுவலி இருந்தால் மருத்துவர்களிடம் என்ன செய்யலாம் என்று கேட்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம். கண்டிப்பாக முதுகு வலி பிரச்சனை இருப்பவர்கள் சாதாரணமாக நினைத்து சிகிச்சையை தவித்தால், முதுகுத் தண்டு தொற்று ஏற்படும். இந்த தொற்றால் முதுகெலும்பு காசநோய் வரவும் வாய்ப்புள்ளது.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், முதுகு வலியுடன் இருப்பவர்கள் இதுவரை வைட்டமின் சத்துகளை மட்டும் உட்கொண்டுவிட்டு வலி குணமாகவில்லை என்று சொல்வீர்களானால், தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். ஃப்ளோரின் கலந்த குடிநீர் அருந்துபவர்கள் கழுத்து வலி, முதுகு வலி என்று வருவார்கள். அவர்களை சோதித்துப் பார்க்கும்போது எலும்பு புளோரோசிஸ் நோய் அவர்களிடம் காணப்படும். மேலும் அவர்களின் பற்களில் பழுப்பு நிற கறைகள் இருக்கும். அதுபோல் நரம்பு கட்டிகள் இருந்தாலும் முதுகு வலி என்றுதான் மருத்துவமனைக்கு வருவார்கள். சிலர் கை, கால் குடைகிறது என்று சொல்லி வருவார்கள் அவர்களுக்கு வலி நிவாரண மருந்து கொடுத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் முதுகெலும்பு காச நோய் இருக்கிறதா? என்றும் நரம்புகளில் கட்டி இருக்கிறதா? என்றும் சோதிப்போம். அதுபோல் புகை மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் முதுகுவலி வர அதிக வாய்ப்புள்ளது. அதனால் புகைப் பிடிப்பது, மது அருந்துவதை விட்டுவிடுங்கள். உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி எழுந்து நடந்துகொடுங்கள். தினமும் ஒரு மணி நேரமாவது ஆரோக்கியத்திற்கு நேரத்தை செலவிடுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் கண்டிப்பாக முதுகு வலி பிரச்சனை வராமல் தடுக்க முடியும்.