போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயால், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். தீவிர மருத்துவ சிகிச்சை, சொட்டு மருந்து என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம், தற்போது போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையே பார்க்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது. அந்தளவுக்கு கொடிய, வாழ்க்கையை முடக்கிப்போடும் போலியோவின் வைரஸைக் கொண்டு, இன்னொரு உயிர்க்கொல்லி நோயான கேன்சரைக் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
போலியோ வைரஸ் செலுத்தப்பட்ட மூளை, படிப்படியாக குணமாகும் விளக்கப்படம்
மூளைக்கட்டி அல்லது கிளியோப்ளாஸ்டோமஸ் எனப்படும் புற்றுநோய், மூளையில் உருவாகும் கட்டியால் ஏற்படுகிறது. இந்தவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், நீண்டகாலத்திற்கு வாழ முடியாமல் இறந்துவிடுகிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை, மரபணு மாற்றப்பட்ட போலியோ வைரஸ் மூலம் சில காலம் நீடித்து வாழச்செய்வதற்கான ஆராய்ச்சியை அமெரிக்காவிலுள்ள டியூக் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
சேகரித்து வைக்கப்பட்ட போலியோ வைரஸை, நரம்பு மண்டலத்தைப் பாதிக்காதவண்ணம் மரபணு மாற்றம் செய்து, அதை பாதிக்கப்பட்டவரின் மூளையில் செலுத்தி சில சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த சோதனையில், மற்ற எந்த பரிசோதனையின் மூலமும் இல்லாத அளவிற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அதாவது, மூளைக்கட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் சோதனைக்காலத்தில் மூன்று ஆண்டுகாலம் வரை உயிரோடு இருக்கிறார். இந்த சோதனை முழுமையடைந்தால், மூளைக்கட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை முழுமையாக குணப்படுத்தலாம் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர் அறிவியலாளர்கள்.