ஆரோக்கியமான உணவுகள் குறித்தும் உணவினால் உடல் சூடு அதிகரிக்குமா என்பது குறித்தும் டாக்டர் அருணாச்சலம் விளக்குகிறார்.
இறைச்சிகளை உண்பது தவறல்ல. நாம் விரும்பும் உணவுகளை உண்ணலாம். அவரவர் விருப்பம் சார்ந்தது இது. சிக்கன், மட்டன் சாப்பிட்டால் உடலில் சூடு பிடிக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. தண்ணீர் குடிக்காமல், காய்கறிகள் சாப்பிடாமல், வெறும் சிக்கன், மட்டனை மட்டுமே சோற்றுடன் சேர்த்து சாப்பிடுவதால்தான் சூடு ஏற்படுகிறது. மழைக்காலத்தில் புரோட்டின் உணவுகள் நமக்கு அதிகம் தேவைப்படலாம். குளிர் அதிகம் இருக்கும் நாடுகளில் குளிரைத் தாங்குவதற்கு அந்த உணவுகள் தேவை.
நம்முடைய நாட்டில் நமக்கேற்ற உணவுகளை நாம் உண்ண வேண்டும். உடல் உழைப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு டெஸ்ட்ரோஜன் அதிகமாக சுரக்கும். உடல் உழைப்பு குறைவாகவும், மன அழுத்தம் அதிகமாகவும் இருப்பவர்களுக்கு இது குறைவாகவே சுரக்கும். இவர்களுக்கு விந்து உற்பத்தியும் குறைவாக இருக்கும். இவர்களுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும். உடல் எடையைக் குறைக்க உடல் உழைப்பை அதிகரிக்க வேண்டும். உடலுக்கான வேலை கொடுப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்று.
விலங்குகளிடமிருந்து மனிதன் வித்தியாசப்படுவது உடல் உழைப்பினால் மட்டும் தான். வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களுக்காக மனிதன் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். உடல், மூளை ஆகிய இரண்டின் உழைப்பும் சேர்ந்துதான் நம்முடைய பணிகளை நம்மைச் செய்ய வைக்கிறது. மனிதன் உழைப்புக்காக படைக்கப்பட்டவன். உடல் உழைப்பு அதிகரிக்கும்போது பெண்மையும் ஆண்மையும் மனிதர்களுக்கு அதிகரிக்கும். அதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்.