உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நாட்டிங்காமில் மோதுவதாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்தது போலவே நாட்டிங்காமில் மழை வெளுத்து வாங்கியது. ‘டாஸ்’ போடுவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியதால் வீரர்களும், குழுமியிருந்த ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து பெய்த மழையால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பின் மறுபடியும் ஆய்வு செய்த நடுவர்கள், விளையாடுவதற்கு உகந்த வகையில் மைதானம் இல்லை என்று கூறி இந்த ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன. நடப்பு தொடரில் மழையால் ரத்தான 4-வது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தான்- இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா, இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. இதற்கு முன்பு உலக கோப்பை தொடர்களில் 2 ஆட்டத்திற்கு மேல் ரத்தானதில்லை. ஆனால் இந்த முறை மழையின் பாதிப்பு அதிக போட்டிகள் இருக்கிறது.
இந்நிலையில் ஐசிசியை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அதில் இது உலகக்கோப்பையா? அல்லது நீச்சல் உலகக்கோப்பையா? என ஐசிசியிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இது போன்ற கருத்துக்களை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்றால் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் அதிக மழை பெய்வதால் மைதானம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.