ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 26ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது. 26 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது உக்ரைன் மீதான போர்.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைப் பாகிஸ்தான் கண்டிக்க வேண்டும் என வற்புறுத்தும் ஐரோப்பிய நாடுகள் இதையே இந்தியாவிடம் கேட்குமா என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பகுதியில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ''இந்தியவின் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனையும், நடுநிலைமையையும் நான் பாராட்டுகிறேன். அமெரிக்காவுடன் குவாட் அமைப்பில் இருக்கும் இந்தியா அமெரிக்காவின் தடையை மீறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்தியா தனது நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தை முக்கிய கொள்கையாகக் கொண்டிருப்பதால்தான் இப்படி முடிவெடுக்க முடிகிறது. நம்மிடம் ரஷ்யாவைக் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய ஐரோப்பிய நாடுகள் இதையே இந்தியாவிடம் கூறாததற்கு அச்சமே காரணம்'' எனப் பேசியுள்ளார்.
வரும் மார்ச் 25ஆம் தேதி பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இருக்கும் நிலையில், இந்தியாவைப் பாராட்டி அவர் பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.